செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் வேல் யாத்திரை முருகன், எச்.ராஜா கைது

செங்கல்பட்டில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக தலைவர் எல்.முருகன், காஞ்சிபுரத்தில் எச்.ராஜா உள்ளிட்ட 1,200 பாஜகவினரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தமிழகத்தில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த பாஜக முடிவு செய்திருந்தது. இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரை நடத்த முயன்றதால் பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல திருவொற்றியூரில் நேற்று முன்தினம் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்பட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பாஜக சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெற இருந்தது. இதில் பாஜக தலைவர் எல்.முருகன், மாநில துணை தலைவர் அண்ணாமலை, வேல் யாத்திரை பொறுப்பாளரும் மாநில நிர்வாகியுமான நரேந்திரன், மாநிலச் செயலர் கே.டி ராகவன், செங்கை மாவட்டப் பொறுப்பாளர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் வி.பலராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். தடையை மீறி யாத்திரை தொடங்கவிருந்த முருகன் உட்பட 900 பேரை கைது செய்த போலீஸார், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே வேல் யாத்திரை நடத்த முயன்ற எச்.ராஜா மற்றும் 300க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். காஞ்சி, செங்கை மாவட்டங்களில் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்றதாக 788 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE