பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலை வளைத்து விடலாம் என்ற அதிமுகவின் பகல் கனவு மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால் சிதைந்து சிதறிவிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்துக்கு ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தலைமையேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
“அனைத்து சாதியினர், மதத்தினர் உள்ளடக்கிய தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கும் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் திமுக உருவாக்கப்பட்டது. அதனுடைய ஆட்சி என்பது அனைத்துத் தமிழர்களது மேன்மைக்கான ஆட்சியாகவே அமைந்தும் வருகிறது. நாளை மலர இருக்கிற திமுக ஆட்சியும் அனைத்துத் தமிழ் மக்களின் அரசாகத்தான் இருக்கும்.
ஆனால், இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சியை அதிமுக ஆட்சி என்று கூடச் சொல்ல முடியாது. 30 பேர் கொண்ட ஒரு கும்பலின் ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மத்திய பாஜக அரசு மூலமாக எந்த நன்மையையும் செய்ய வைக்கவும் முடியவில்லை.
மாநில சுயாட்சிக்காக எடப்பாடி பழனிசாமி வாதாடுவார் என்றோ, இந்தித் திணிப்பை எதிர்ப்பார் என்றோ, நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற்றுத் தருவார் என்றோ, புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பார் என்றோ, குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பார் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை.
இது எதையும் செய்ய மாட்டார். ஆனால், நான் எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை, மதுரையில் அமையும் என்று சொல்லப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட உங்களால் வர வைக்க முடியாதா என்பதுதான் என்னுடைய ஒரே கேள்வி.
2015ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு செய்தது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2018 ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. திடீரென்று மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகும் எதுவும் நடக்கவில்லை.
ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. 2019 ஜனவரி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்தார் பிரதமர். அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை. அடிக்கல் நாட்டிய இடத்தில் அதற்குரிய தடம் கூட இல்லை. அடிக்கல் நாட்டியதைப் போல படம் காட்டினார்களே தவிர அடிக்கல் நாட்டவில்லை.
இப்போது கடந்த ஜூலை மாதம் அரசிதழில் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதுவும் எதற்காக என்றால், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது. அதற்காக மொத்தமாக நாட்டு மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதைப் போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் விமான நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிவியில் அடிக்கல் நாட்டியது போன்ற ஒரு காட்சியை காட்டி அடிக்கல் நாட்டி சென்ற மோடி அரசு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, "செப்டம்பர் மாதத்தில் பணி தொடங்கும்" என்று பதில் சொல்லி இருக்கிறது மத்திய அரசு. செப்டம்பர், அக்டோபர் முடிந்து நவம்பர் மாதமும் வந்துவிட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அவருக்கு டிசம்பர் மாதம் பணி தொடங்கும் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். எந்த டிசம்பர் மாதம் என்று தெரியவில்லை. 2020 டிசம்பரா? 2021 டிசம்பரா? 2022 டிசம்பரா? என்பது மோடிக்கு மட்டும்தான் வெளிச்சம்.
இதற்கு நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை தெரியவில்லை. நிதி ஒதுக்காத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களை மட்டும் நியமித்துவிட்டார்கள். அதிலும் மதுரை மக்கள் பிரதிநிதிகளுக்கு இடமில்லை. மத்திய - மாநில அரசுகளுக்கு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பதற்கு ஒரே உதாரணம் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை. மத்திய - மாநில அரசுகள் எவ்வளவு பெரிய பொய்யையும் கூசாமல் சொல்வார்கள் என்பதற்கும் எய்ம்ஸ் மருத்துவமனையே போதும். இந்த ஒரே ஒரு சாதனையைக் கூடச் செய்து தர இயலாத அரசாங்கம்தான் இந்த எடப்பாடி அரசாங்கம்.
ஆனால் தலைவர் கருணாநிதிக்கு மதுரைக்கு என்ன செய்தார் என்று என்னிடம் கேட்டால், இன்று முழுவதும் சொல்வதற்கு என்னிடம் தகவல்கள் உள்ளன.
* நகராட்சியாக இருந்த மதுரையை 1971இல் மாநகராட்சியாக மாற்றியது யார்? முதல்வர் கருணாநிதி.
* மாவட்ட நீதிமன்றம் அமைக்க அடிக்கல் நாட்டியவர் முதல்வர் அண்ணா. திறந்து வைத்தவர் முதல்வர் கருணாநிதி
* இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமைந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் முதல்வர் கருணாநிதி.
சென்னை உயர் நீதிமன்றக் கிளை மதுரையில் அமைய வேண்டும் என்று முதன்முதலாக 1973ஆம் ஆண்டு முயன்றார் முதல்வர் கருணாநிதி. 1989ஆம் ஆண்டும் முயற்சியைத் தீவிரப்படுத்தினார். 1996ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்தார். 5 கோடி ரூபாயை ஒதுக்கினார். மத்திய அரசு அமைத்த நீதிபதி ஜஸ்வந்த்சிங் கமிஷனும் இதனை ஏற்றுக்கொண்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மதுரையில் உயர் நீதிமன்றத்தின் கிளையைத் தொடங்கிடப் பரிந்துரைத்தார்.
இந்தக் கோரிக்கை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதை நிறைவேற்றிட அனுமதியும் பெறப்பட்டது. திமுக ஆட்சியில்தான் 2000ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கலந்து கொண்டார். தென் மாவட்ட மக்களின் கனவை கருணாநிதி நனவாக்கியதால்தான் இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாபெரும் கட்டிடமாக கம்பீரமாக நிற்கிறது.
* அந்தக் காலத்தில் சென்னை அண்ணா மேம்பாலம்தான் பெரிதாக அனைவராலும் சொல்லப்படும். அதேபோல் மதுரையில் இரண்டு பாலங்களை முதல்வர் கருணாநிதி அமைத்தார்.
* மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலம் கட்டப்பட்டு அதற்கு, "மதுரை முத்து மேம்பாலம்" என்ற பெயர் சூட்டியவர், முதலல்வர் கருணாநிதி. இப்படி எதையாவது இன்றைய ஆட்சியாளர்களால் வரிசைப்படுத்த முடியுமா?
மதுரைக்கு மோனோ ரயில் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். வந்ததா? இல்லை! தேவர் சிலை அருகே பறக்கும் பாலம் என்றார்கள். வந்ததா? இல்லை! ஆனால் மதுரையை இரண்டாவது தலைநகராக்கப் போகிறோம் என்ற காமெடியை மதுரை அமைச்சர்களாக இருக்கும் செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் விடவில்லை.
மதுரைக்கு சிறுசிறு நன்மைகளைக் கூடச் செய்து கொடுக்க முடியாத இவர்கள், மதுரையைத் தலைநகர் ஆக்குவேன் என்று வாய்ப்பந்தல் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
மதுரை வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போலவும், மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போலவும், இத்தாலியின் ரோம் நகரைப் போலவும் மாற்றுவேன் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு சொன்னார்.
என்னைப் பொறுத்தவரையில் செல்லூர் ராஜுவுக்கு நான் சொல்வது, சிட்னியாக, ரோம் நகராக மாற்றவேண்டாம். இப்போது இருக்கும் மதுரையை மேலும் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்பதுதான் என்னுடைய மிகமிகத் தாழ்மையான வேண்டுகோள்.
செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் ஒட்டுமொத்தமாக மதுரையைப் பாழாக்கியவர்கள். இதை நான் சொல்லவில்லை. இங்குள்ள அதிமுக தொண்டர்களிடம் விசாரித்தாலே சொல்லிவிடுவார்கள்.
இவர்கள் இரண்டு பேரும் தங்கள் துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்றால் யாருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால், என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவைப் பேட்டிகள், இன்றைக்குப் புதிதாக என்ன தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் வரிசையாகப் பட்டியல் போட்டுச் சொல்வார்கள்.
வைகை ஆற்று நீரை தெர்மாகோல் கொண்டு மூடியது முதல் - நமக்கெல்லாம் கரோனா வராது என்று கதை விட்டது வரை, முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜு. குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்று சொன்னாரே, அதை கல்வெட்டாக செதுக்கி, அவரை அதற்குப் பக்கத்தில் உட்கார வைக்கலாம்.
இவர் ஒரு பேட்டி கொடுத்துவிட்டால் போதும், அடுத்த அரைமணி நேரத்தில் மைக் முன்னால் வந்துவிடுவார் உதயகுமார். இரண்டு பேருக்கும் எதில் போட்டி என்றால், பேட்டி கொடுப்பதில் போட்டி.
மதுரையை ரோம் ஆக்குவேன் என்று செல்லூர் ராஜு சொன்னதும், ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார், 'மதுரையின் வளர்ச்சியா? அமைச்சர் பதவியா என்றால், நான் மதுரையின் வளர்ச்சியில்தான் கவனம் செலுத்துவேன்' என்று சொல்லி இருக்கிறார். இந்த உலகமகா நடிப்பை இவர்கள் இருவரிடம்தான் பார்க்க முடியும்.
விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், 'இண்டர்நெட்' இணைப்பு வழங்குவதற்காக மத்திய அரசு 'பாரத் நெட்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' என்ற கண்ணாடி இழை கம்பி வழியாக இணைக்க வேண்டும். இதற்காக சுமார் 2000 மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டது.
சில நிறுவனங்களுக்கு சாதகமாக, டெண்டர் நிபந்தனைகளில் அமைச்சர் உதயகுமார் மாற்றம் செய்துவிட்டதாகச் செய்திகள் பரவின. நான் விரிவாக அறிக்கை வெளியிட்டேன். ஆனால், உதயகுமார் மறுத்தார். நான் சொல்வது தவறு என்றார். அமைச்சருக்கு விளக்கமான பதிலை அன்றைய தினம் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும் அறிக்கை மூலமாகக் கொடுத்தார்.
இந்தத் தகவல் கிடைத்ததும் இது பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையில் நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். வழக்கம் போல லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். டெண்டரே விடவில்லை, விடாத டெண்டரில் எப்படி முறைகேடு நடந்திருக்க முடியும் என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்னார்கள்.
ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய அரசு சொல்லிவிட்டது. திமுக ஏதோ பொய் சொன்னதாகவும், திமுகவுக்குப் பின்னடைவு என்றும் உதயகுமார் உத்தமரைப் போல பேட்டிகள் கொடுத்தார். ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய வர்த்தக அமைச்சகம் சொல்லிவிட்டது.
உதயகுமாரின் ஊழல் முகத்தை மத்திய அரசே கிழித்துத் தொங்கவிட்டு விட்டது. ஒப்பந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததுதான் இந்த ஒப்பந்த ரத்துக்குக் காரணம் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
தென்னக மக்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட தியாகி உதயகுமார் இதற்கு என்ன சொல்வார்? என்ன விதிமுறைகளை, யாருக்குச் சாதகமாக மாற்றினார் என்பது அரசு அதிகாரிகளுக்கே தெரியும்.
இந்தக் குற்றச்செயலுக்கு உடன்பட மாட்டேன் என்று சொன்ன தொழில்நுட்பத் துறைச் செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அவர் இந்த வேலையே வேண்டாம் என்று போய்விட்டார். டான்பிநெட் நிர்வாக இயக்குநரும் மாற்றப்பட்டார்.
இப்படித் தங்களது ஊழல் முறைகேட்டுக்கு உடன்படாத அதிகாரிகளைப் பழிவாங்கிக் கொண்டு இருக்கிறது இந்த அதிமுக அரசு. நல்ல அதிகாரிகள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள். டம்மி பதவிகளை வாங்கிக் கொண்டு போய் அங்கு அமைதியாக உட்கார்ந்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் நிர்வாகத் துறையானது செயல்படாமல் ஆகிவிட்டது.
பணம் கொழிக்கும் டெண்டர்களுக்கு மும்முரமாக வேலைகள் நடக்கின்றன. கமிஷன் கிடைக்கும் திட்டங்களுக்கு மட்டுமே பில்கள் பாஸ் பண்ணப்படுகின்றன. பணி மாறுதல்கள் அனைத்தும் லஞ்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இன்னும் சொன்னால் லஞ்சம் வாங்குவதற்காகவே பணி மாறுதல்கள் செய்யப்படுகின்றன.
உதயகுமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது. எடப்பாடி அரசாங்கத்தின் ஊழல் நாற்றம், இன்றைய தினம் மரணக் குழி வரைக்கும் போய்விட்டது!
சமீபத்தில் மரணம் அடைந்தார் அமைச்சர் துரைக்கண்ணு. ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே, துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. துரைக்கண்ணு எந்தத் தேதியில் மரணம் அடைந்தார் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. அவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று நானே எனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தேன். ஆனால், அதிமுகவினர், துரைக்கண்ணுவின் உடலை வைத்து ஊழல் நாடகம் ஆடி இருக்கிறார்கள்.
அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அதிமுக தலைமை கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து வைத்திருந்தது என்றும், அந்தப் பணத்தைக் கேட்டு துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்பட்டது என்றும், அதற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகுதான் மரண அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் ஊடகங்களில் வெளியான செய்திக்கு இதுவரை முதல்வரோ, அமைச்சர் ஜெயக்குமாரோ பதில் சொல்லவில்லை. மவுனமாக இருப்பது ஏன்?
அரசாங்கச் சொத்தைக் கொள்ளையடித்து, மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி, கஜானாவைக் காலி செய்து அந்தப் பணத்தை எல்லாம் பல்வேறு இடங்களில் எடப்பாடி கூட்டம் பதுக்கி வைத்துள்ளது என்பது இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.
துரைக்கண்ணுவுக்கு நெருக்கமான சிலர் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? அமைச்சர் துரைக்கண்ணு வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பல நூறு கோடி பணம், இத்தகைய பணம்தான் என்று சொல்லப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இதனைப் பல்வேறு இடங்களில் பிரித்துப் பதுக்கி வைத்துள்ளார்கள்.
அப்படியானால் இந்த நாட்டில் மத்திய அரசு என்ன செய்கிறது? வருமான வரித்துறை என்ன செய்கிறது? வருவாய் புலனாய்வுத் துறை என்ன செய்கிறது? உள்துறை என்ன செய்கிறது? அல்லது இந்தப் பணப் பதுக்கலுக்கும் மத்திய அரசுக்கும் மறைமுகத் தொடர்பு இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் எத்தனை கோடி பணம் எடுத்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது. திமுக மக்களின் மனங்களை வென்ற இயக்கம். பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள்.
மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அதிமுகவின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும். அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும்.
மொத்தத்தில் ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு மாறிவிட்டது. கோட்டையை சில அமைச்சர்கள் கொள்ளையர் கூடமாகவும், சில அமைச்சர்கள் மூடர் கூடமாகவும் மாற்றிவிட்டார்கள்.
இந்தக் கோட்டையை மீட்கும் ஜனநாயகப் போர்தான் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல். தமிழ்நாட்டின் மானம் காக்க அனைவரும் மருதுபாண்டியர்களாக எழுங்கள். கண்ணகியாக எழுங்கள்”.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago