10 முதல் 36 ஆண்டுகள் வரை தற்காலிகப் பணியாளர்களாக புரிந்த 112 பழங்குடியினர், வனத்துறை நிரந்தரப் பணிக்கு தேர்வாகியும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அரசு தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமங்களில் 36 பழங்குடி இன மக்கள் பரவலாக வசிக்கின்றனர். நாட்டில் வனத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பாக இந்த பூர்வ குடிமக்களே, முழு வனத்தையும் பேணிப்பாதுகாத்து வந்தனர்.
வனத்துறை உருவாக்கப்பட்டப்பிறகு காடுகளைப் பாதுாக்க, பூர்வகுடிகள் தற்காலிக பணியாளர்களாக வனத்துறையில் நியமிக்கப்பட்டனர். அவர்கள், வனத்துறையில் 10 முதல் 36 ஆண்டு வரை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக பணியாளர்களாகவே ஒய்வு பெறும் அவலம் தொடர்கிறது.
கடந்த ஆண்டு இவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை தமிழக அரசு எடுத்தநிலையில் திடீரென்று அதை நிறத்தி வைத்துள்ளதால் தற்காலிகப்பணியாளராக பணியாற்றும் பழங்குடியினர் விரக்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஏக்தா பரிசத் காந்திய மக்கள் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும், பழங்குடியினர் உரிமைக்கான செயல்பாட்டாளருமான தன்ராஜ் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது:
தற்போது வனச்சார்நிலைப் பணியான வேட்டைத்தடுப்பு காவலர்களாக மொத்தம் 1,119 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 30 சதவீதம் பேர் பழங்குடிகளாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. ஏனென்றால் தலைமுறை தலைமுறையாக வனத்தில் வாழும் பழங்குடிகளே முழு வனத்தையும் குறித்து பாரம்பரிய அனுபவ அறிவு கொண்டவர்கள்.
இவர்களால் காட்டில் தீ பரவினால் அதனை முழுமையாக தடுக்க, அணைக்க இயலும். மேலும், வேட்டைத் தடுப்பு போன்ற மிக ஆபத்தான பணிகளை தாங்கள் மூதாதையரின் பாரம்பரிய அறிவைக் கொண்டும், தங்களின் தனித்திறன்களாலும் திறம்பட செய்திடுவார்கள்.
இவ்வாறு வனத்துறையில் இத்தகைய தீத்தடுப்பு, வேட்டை தடுப்பு போன்ற வனச் சார்நிலை பணிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பழங்குடிகளில் இருந்து 15 சதவீதம் பேரை வனக்காவலர்களாக பணி நிரந்தர செய்வதற்காக அரசு கொள்கை முடிவு செய்தது. இதன்படி தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு கடந்த ஆண்டு சென்னைக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்று முடிந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக தமிழக அரசு பணி உத்தரவு ஆணையினை இன்னும் வழங்கவில்லை.
இத்தகுதி பட்டியலிலுள்ள பட்டியல் பழங்குடிகள் பலர் 10 ஆண்டு முதல் 36 ஆண்டுகளாக பணியாற்றுகிற 112 பேர் உள்ளனர். இவர்கள் இன்றைய தேதி வரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் மிக சொற்பமான ஊதியத்தில் மிக ஆபத்தான பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரமாக்கிட அரசுக்கு பெரியளவில் நிதி தேவைப்படாத நிலையில் இத்துயரம் தொடர்வது பெரும் வேதனையே.
தங்களுடைய பிரச்சனையை வெளியில் சொல்ல முடியாத குரலற்ற சக்தியற்றவர்களாக உள்ளார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பழங்குடியினர்களுக்காக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை முன்னெடுத்தார்கள்.
குறிப்பாக சட்டமன்றத்தில் முதன்முதலாக வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பள உதவித்தொகையை அதிகரித்து வழங்கியதோடு பழங்குடிகளே காடுகளின் காவலர்களாகவும் ஆன்மாவாகவும் விளங்குகிறார்கள் என சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் வழிகாட்டுதலில் நடைபெற்றுவரும் ஆட்சியில் காட்டின் உண்மையான காவலர்களான பழங்குடிகளையும் அவர்களின் குடும்பத்தையும் பாதுகாத்திட வேண்டும்.
வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாகப் பணியாற்றி வரும் பட்டியல் பழங்குடிகளை வனத்துறையின் வனக்காவலர்களாக அரசு ஊழியர்களாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வனத்துறையில் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் நிரந்தரப்பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்த 112 பழங்குடியினர் பணிகளை வரைமுறைப்படுத்தவே அவர்கள் பணி விவரம் சேகரிக்கப்பட்டது, ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago