சக அமைச்சர் மரணமடையும் தருணத்திலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல், பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே அதிமுக ஆட்சியாளர்கள் குறியாக இருந்திருக்கிறார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 08) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா காலத்திலும் ஊழலையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியாளர்கள், சக அமைச்சர் மரணமடையும் தருணத்திலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல், பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன.
தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோதும், அவர் சுயநினைவின்றி மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடியபோதும், மாற்றுக் கட்சியினரும்கூட அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினர்.
ஆனால், சொந்தக் கட்சிக்காரர்களான அதிமுகவின் தலைமையோ, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவையான உத்தரவாதம் கிடைத்த பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், அதிர்ச்சி தரும் செய்திகள் நாளேடுகளிலும் புலனாய்வுப் பத்திரிகைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன.
அதிமுக ஆட்சியாளர்கள், தங்களுக்குப் பதவி தந்து வாழ்வளித்ததாக உதட்டளவில் மட்டும் உச்சரிக்கும் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்கள். எளிமையாகத் தோற்றமளித்த, அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை.
ஊழல் வாயிலாக எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தின் ஒரு பகுதி, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளுக்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கேட்டுத்தான் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று, பணத்தை மீட்டதற்குப் பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானதாகவும், பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு 300 கோடி ரூபாய் முதல் 800 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும், அதிரவைக்கும் செய்திகள் வெளியாகின்றன. இன்னும் கணக்குக்கு வராத தொகையும் ஏராளம் என்கிறார்கள். ஆளும் தரப்பிலிருந்து இந்தச் செய்திகள் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பதால், இந்தச் செய்திகள் உண்மைதான் என்று மக்கள் நம்புகிறார்கள்.
பத்திரிகையில் வந்த செய்திகளை மட்டும் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டலாமா என ஆளும்தரப்பினர் இதையும்கூட மரணக்குழியில் போட்டுப் புதைக்க நினைக்கலாம். ஆனால், அவர்களால் ஊழல் நாற்றத்தை மறைக்க முடியாது என்பதற்கு மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் தொகுதியில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே சான்றாக இருக்கின்றன.
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டவருமான முருகன் என்பவரைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
அவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்துச் சாலை மறியல் செய்த மறைந்த அமைச்சரின் ஆதரவாளர்களான மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் மீதான கைது நடவடிக்கைக்காக, மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் களம் இறக்கப்பட்டதிலிருந்தே, இதன் பயங்கரப் பின்னணியை எளிய மக்களும் புரிந்துகொள்ள முடியும்.
அதிமுக தலைமை கொடுத்து வைத்திருந்த பெருந்தொகைக்கு வரவு - செலவுக் கணக்கு முழுமையாக வந்து சேராததால், கும்பகோணத்தில் இத்தகைய மர்மக் கைதுகள் அரங்கேறி உள்ளன.
ஊழலில் மூழ்கி, ஊழலில் திளைத்து, ஊழலையே முழுநேர வேலைத் திட்டமாகக் கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி அரசு, கொள்ளையடித்த பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது என்ற அருவருப்பையே இந்த நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றன.
சூறையாடி, வாரிச் சுருட்டிய பல கோடிக்கணக்கான பணம், கோடநாடு மர்ம மாளிகையில் பதுக்கப்பட்டிருந்ததைப் போல, அதன் தொடர்பாக மர்மக் கொலைகள் நடந்து பச்சை ரத்தம் வழியெங்கும் சிந்தியதைப் போல, இப்போதே வெவ்வேறு மாவட்டங்களில் அதிமுக தலைமையால் பல நூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டு இருக்கிறது என்கிற திடமான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது, மறைந்த அமைச்சர் குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீதான கைது நடவடிக்கைகள்.
கைது செய்யப்பட்டோர் மீது, பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தபோதெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆட்சித் தலைமை உத்தரவிட்டதும் சட்ட மாண்புகளைச் சட்டெனக் காற்றில் பறக்கவிட்டு, கந்துவட்டி வசூல் கூட்டம் போலத் தமிழகக் காவல்துறை செயல்படுவது, அதன் உயர்ந்த மதிப்பைப் படுபள்ளத்தில் வீழ்த்தியுள்ளது.
மறைந்த அமைச்சர் தொடர்புடைய இடங்களிலேயே இவ்வளவு தொகை பதுக்கப்பட்டு அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால், ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திகளான வசூல் அமைச்சர்கள் வழியாக எவ்வளவு பெருந்தொகை பதுக்கப்பட்டு இருக்கிறது?
எதிர்க்கட்சிகளை ஏகடியம் செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் தன் ஆட்சியின் 'மாட்சி' பற்றி வாய் திறப்பாரா? அவருக்குத் துதி பாடி, சிதறி விழும் 'பரிசில்' பெறும் சிறு கூட்டத்தார் கருத்துத் தெரிவிப்பார்களா?
நூற்றுக்கணக்கான கோடிகள் சட்டவிரோத விசாரணைகள் மூலமாகவும், சட்டத்தை வளைத்து நடைபெறும் கைதுகள் மூலமாகவும், கைமாறுவதைக் கண்காணிக்க வேண்டிய வருமான வரித்துறை, வருமான புலனாய்வுத் துறை, ஏன் தேர்தல் ஆணையமும் கூட, இதுகுறித்துச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
புலனாய்வுப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த செய்திகள், மத்தியப் புலனாய்வுத்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரியாதா?
கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில், சீட் பேரத்திற்காக இந்த ஊழல் மோசடிகளை வேடிக்கை பார்த்தபடி சப்தமில்லாமல் அனுமதிக்கிறதா மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு?
பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள்.
மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அதிமுகவின் பகல் கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago