ஆளுநரின் தாமதம் தொடருமானால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழ்நாடு அரசு நிர்வாக ஆணையின் மூலம் விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல், அனுமதியில்லாமல் அவர்களது நிலத்தில் அரசுத் தரப்பினர் நுழைவதைத் தடை செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சின் மாநிலச் செயற்குழு இன்று விடுத்துள்ள அறிக்கை:
“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுவின் காணொலிக் கூட்டம் இன்று (நவ.7) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நாட்டின் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் குறித்தும், வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
மாநிலச் செயலாளர் முன்வைத்த அரசியல் கருத்துகள் மீது மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர். நிறைவாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளை அணிதிரட்டி, மதவாத, சாதி வெறி சக்திகளையும், சுயநல கும்பல்களையும் அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
» ஆஸி. தொடர்: இரு டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடமாட்டார்? இந்திய அணியுடன் ரோஹித் சர்மா பயணம்?
கீழ்க்கண்ட முடிவுகளும் - தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு
வருகிற 2021ஆம் ஆண்டு நடைபெறுகிற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முன்வைக்கும் கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்க கே.சுப்பராயன் எம்.பி. (மாநில துணைச் செயலாளர்) தலைமையில் மு.வீரபாண்டியன், டி.எம்.மூர்த்தி, நா.பெரியசாமி, க.சந்தானம், வகிதா நிஜாம் மற்றும் தி.ராமசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு தினத்தில் கைதானவர்களை விடுதலை செய்
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் உருவான மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து 1956, நவம்பர் முதல் நாளில் ஏற்கப்பட்டது. இதன்படி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக அரசு கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த 2019 நவம்பரில் ‘தமிழ்நாடு தினம்’ கொண்டாடுவாற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி இம்மாதம் முதல் தேதியில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு தினத்தை வெகுசிறப்பாகக் கொண்டாடியுள்ளன. இதில் சில இடங்களில் தமிழ்நாடு மாநிலத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற வேட்கையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வரைபடத்தை அச்சிட்டு சில இடங்களில் கொடியாக ஏற்றி வைக்கப்பட்டன.
இதனைத் தேச விரோதச் செயலாக கருதி தமிழ்நாடு அரசு வழக்குப் போட்டிருப்பதையும், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரைச் சிறையில் அடைத்திருப்பதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக கைதான அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
விவசாயிகள் அனுமதியின்றி நிலத்தில் நுழைவதைத் தடை செய்
உள்நாட்டு, வெளிநாட்டு, பன்னாட்டு பெரு வணிக நிறுவனங்களின் தேவைக்காக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எண்ணெய்க் குழாய் போடுவது, எரிவாயுக் குழாய் பாதை, 8 வழி விரைவுச் சாலை எனப் பல்வேறு திட்டங்களின் பெயரால் விவசாய நிலங்கள் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு தன்னிச்சையாகப் பறிக்கப்படுகின்றன.
இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வுரிமை பறிபோகிறது. விவசாயிகள், பொதுமக்கள் கருத்துக் கேட்பது, நிலம் எடுப்பதால் ஏற்படும் சூழலியல் தாக்கம் மற்றும் சமூக விளைவுகள் என எதுபற்றியும் கவலைப்படாமல் எதேச்சதிகார வழிமுறைகளில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவன அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
கிராம ஊராட்சி தொடங்கி, மாவட்ட நிர்வாகம் வரையிலும் விவசாயிகளின் ஒப்புதல், அனுமதியில்லாமல் அவர்களது நிலத்தில் அரசுத் தரப்பினர் நுழைவதைத் தடை செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்க
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களது கருணை மனுவின்படி ஏற்றும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளை ஏற்றும் அவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக தாமதப்படுத்தி வரும் ஆளுநரின் நடவடிக்கை மீது உயர் நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி விரைந்து முடிவு எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆளுநரின் தாமதம் தொடருமானால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழ்நாடு அரசு நிர்வாக ஆணையின் மூலம் விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறது.
பட்டாசு வெடிப்புக்குத் தடை விதிக்காதே
பசுமைத் தீர்ப்பாயம் பட்டாசு வெடிப்பதைத் தடை செய்யும் நோக்கத்தோடு பல மாநிலங்களுக்கும் அறிவிப்புக் கடிதங்களை அனுப்பி வருகிறது. ராஜஸ்தான் மாநில அரசு பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் விருதுநகர் மாவட்டம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பறிபோகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் நடைபெறும் பட்டாசு உற்பத்தி ‘தீபாவளி’ போன்ற பண்டிகைக் காலங்களை மட்டுமே நம்பி நடைபெறுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்புத் தடை செய்யும் உத்தரவுகளை மாநில அரசுகளும், பசுமைத் தீர்ப்பாயமும் விலக்கிக் கொள்ள வேண்டும். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி வழங்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
நவம்பர் 26 - பொது வேலை நிறுத்தம் & மறியல்
பாஜக மத்திய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்தும், பொதுத்துறை சொத்துகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்தும் நவம்பர் 26ஆம் தேதி அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து அறிவித்துள்ளன. இதே காலகட்டத்தில் விவசாயிகளை அழித்து, விவசாயத்தைப் பெருவணிக நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் விவசாய விரோதச் சட்டங்கள் நிறைவேற்றியதை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் கோபாவேசப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நவம்பர் 26ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்து, சாலை மறியலில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று, ஆதரிக்கிறது. போராட்டம் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கட்சி அணிகளையும், பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறது.
தூய்மைக் காவலர்களை ஏமாற்றாதே
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காலத்தில் ‘தூய்மைக் காவலர்கள்’ கடுமையான பணிச் சுமைகளை ஏற்றுப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட ஊதியத்தைக் குறைத்து, தற்போது நாளொன்றுக்கு ரூ.100 மட்டுமே ஊதியமாகத் தரப்படுகிறது. இதுவும் பல ஊராட்சிகளில் தரப்படுவதில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் “தூய்மைக் காவலர்களின் மாத ஊதியம் ரூ.2,600 என்பதிலிருந்து ரூ.3,600 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிவித்தார்.
மேலும், சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வோ, சிறப்பு ஊதியமோ தூய்மைக் காவலர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது வேதனையானது. அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் தூய்மைக் காவலர்களின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு அவர்களது ஊதியத்தைத் தர மறுத்து வரும் அரசின் பணியாளர் விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதுடன் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வையும், சிறப்பூதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது”.
இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago