புதுச்சேரியில் குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வர் நாராயணசாமி பேட்டி

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆன்மிகம், சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலம் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் தனித்தன்மையை இழந்து வருகிறது. ரவுடிகள் சாலைகளில் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

வீட்டு வாசலில் நிற்கும் பெண்கள், சாலையில் செல்லும் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செயின் பறித்துச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இதனால் பெண்கள் வெளியே நடமாட முடியாத அளவு பீதி ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு புதுச்சேரியில் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ. 7) நடைபெற்றது.

கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த கூட்டத்தில் காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, கூடுதல் டிஜிபி ஆனந்த மோகன், சீனியர் எஸ்.பி. பிரதிக்ஷா கோத்ரா மற்றும் எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சமூக ஊடகத்தில் ஏற்படும் தவறுகளைத் தடுப்பது, பணம் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் ரவுடிகள் சிறையில் இருந்தபடியே தங்கள் ஆதரவாளர்களுக்கு செல்போனில் பேசி குற்றச் சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். வியாபாரிகள், தொழிலதிபர்களிடம் பணத்தைப் பறிக்கின்றனர். இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். புதுச்சேரியில் தற்போது சொத்து, வீடுகளை அபகரிப்பது குறைந்துள்ளது. கரோனா காலத்தில் காவல்துறையினர் ரோந்துப் பணியைக் குறைத்துள்ளனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திய ரவுடிகள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, காவல்துறையினர் இனி வரும் காலங்களில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

குற்றவாளிகளைக் கைது செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பண்டிகைக் காலம். ரவுடிகள் சிலர் கடைகளிலும், தொழிலதிபர்களையும் மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் அரசு தலையிடாது".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்