இந்தித் திணிப்பு விவகாரம்; பண்பாட்டுப் படையெடுப்புதான் மிகப்பெரிய ஆபத்தானது: கி.வீரமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு கண்மூடித்தனமாக இந்தித் திணிப்பில் ஈடுபடுவதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ. 7) வெளியிட்ட அறிக்கை:

"மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலில், கல்வி, கல்வியைச் சார்ந்து இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு வேலை வெகுவேகமாக நடந்துவருகிறது.

எதிர்ப்புக் கொடி தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில்!

இந்தியத் துணைக் கண்டத்திலேயே இவற்றுக்கெல்லாம் முதல் எதிர்ப்புக் கொடியைத் தூக்குவது, பெரியார் பிறந்த, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் வேரூன்றிய தமிழ்நாடுதான்.

தேசியக் கல்வி என்று சொல்லி, மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதத் திணிப்பு ஒருபுறம்.

எந்த அளவுக்கு இந்தித் திணிப்பு கோர உருவம் எடுத்திருக்கிறது என்றால், 'இந்தி தெரியாது என்றால், வங்கிக் கடன் கிடையாது' என்று சொல்லும் அளவுக்கு இந்தித் திணிப்பின் வெப்பம் கதிர் வீச்சாக இருக்கிறது.

விமான நிலையத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்து 'இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?' என்று ஒரு சாதாரணப் பணியாளர் கேட்கும் அளவுக்கு இந்தித் திணிப்பு வெறியாகி விட்டது.

மத்திய சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புக்கான தேர்வில் இந்தியில் தனி ஒரு தேர்வாம். இதுபோல ஏராளம் உண்டு; எடுத்துக்காட்டாக அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.

முழுக்க முழுக்க இந்தியிலேயே கடிதமா?

வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்கறிஞர் சு.குமாரதேவன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் நாள் கடிதத்தில் தகவல் ஒன்றைக் கேட்டுள்ளார்.

ஆயுர்வேதா, சித்தா, யுனானி துறைகளுக்குத் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதுதான் கேட்கப்பட்ட தகவலாகும். மத்திய சுகாதாரத் துறை அக்டோபர் 27 ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளது. ஆங்கிலத்தில் அல்ல, அப்பட்டமாக இந்தியில்தான் பதில் கடிதம் அமைந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட தகவல், ஆங்கிலத்தில்தான். ஆனால், பதில் அளிக்கப்பட்டதோ முழுக்க முழுக்க இந்தியில்தான்.

மத்திய பாஜக ஆட்சி, அதற்குத் துணை போகும் சக்திகள் மீது ஏற்கெனவே தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்புத் தீயில் மேலும் மேலும் எண்ணெய்க் கொப்பரையைக் கவிழ்த்துக் கொட்டி உள்ளார்கள்.

திசை திருப்பும் செயல்கள்!

தமிழ்நாட்டு மக்களின் இந்த எதிர்ப்புணர்வைத் திசை திருப்பிட, தமிழக பாஜக சித்து வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் மயங்கக்கூடியவர்கள் பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மக்கள் அல்ல என்று எச்சரிக்கிறோம்!

பல மொழிகள் உள்ள பரந்த இந்திய நாட்டில், பன்மொழிகள், பன் மதங்கள், பல கலாச்சாரங்கள் என்ற பன்முகத் தன்மையையே பெருமையாகப் பேசும் ஒரு நாட்டில், அதன் அரசியலமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இந்திய மொழிகள் 22 என்று அங்கீகரித்துள்ள நிலையில், ஆட்சி மொழியாக இந்தி நடைமுறைக்கு வந்த பிறகும்கூட, இந்தி பேசாத மக்கள் விரும்புவரை ஆங்கிலமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற உறுதிமொழி அடிப்படையில், ஆட்சி மொழிச் சட்டம், மற்ற மொழி பேசும் மக்களுக்குக் கொடுத்துள்ள உறுதிமொழிப்படியும் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, ஆங்கிலத்தில்தானே அந்த அமைச்சகம் பதில் தந்திருக்க வேண்டும்?

எதற்காக முற்றிலும் இந்தியில் பதில்? அதன்மூலம் கேள்வி கேட்டுப் பெற வேண்டிய தகவல்கள் பற்றிய நோக்கம் நிறைவேறுமா? நியாய உணர்வோடும், நடுநிலையோடும் உள்ளவர்கள் பதில் அளிக்க வேண்டும்? இந்தியில் பதில் அளித்திருப்பது கண்டனத்திற்குரியதல்லவா?

இந்தித் திணிப்பு வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல; பண்பாட்டு கலாச்சாரத் திணிப்பும் ஆகும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்வி!

கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் பல ஊர்களில் மத்திய அரசின் தொல்பொருள் துறை (ASI) மற்றும் கலாச்சாரத் துறை இணைந்து நடத்தும் அகழாய்வுகள், கல்வெட்டு, கண்டெடுக்கப்படும் பொருள்கள் மீதுள்ள கல்வெட்டு எழுத்து ஆராய்ச்சிகளும், தொல்பொருள் பழைமை நாகரிகத்தைப் பற்றிய தரவுகள் பற்றிய ஆய்வுகளில் பெரிதும் தமிழ்மொழியால் நெடில் எழுத்துகளே காணப்படும் நிலையில், மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) ஏன் தமிழ் மொழிக்குரிய முக்கிய இடத்தை அளிக்காமல், சமஸ்கிருதத்திற்கே முன்னுரிமை, முதலிடம், முழு வாய்ப்பு தருவானேன் என்ற நியாயமான கேள்விக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு எழுப்பியுள்ள கேள்விக்கு, தக்க செயல் மூலம், பதில் தரவேண்டாமா மத்திய அரசு?

பிரதமர் மோடி பேசும்போது, சில திருக்குறள்களையும், தமிழ்க் கவிதை வரிகளையும் கூறுவதன் மூலம் அவருக்குத் தமிழின் மீதுள்ள ஆர்வம் குன்றாதது, குறையாதது என்று காட்ட முயலுவது மட்டும் போதுமா?

நீதிபதி கேட்ட கேள்விக்குரிய பதிலாக செம்மொழியாம் எம்மொழி தமிழுக்குரிய இடம், செம்மொழி தகுதி பெற்றும்கூட இன்றுவரை அளிக்கப்படுகிறதா?

கருணாநிதி அரும்பாடுபட்டு மத்திய அரசிடம் தமிழுக்கும், அதையொட்டியே சமஸ்கிருதமாகிய வடமொழிக்கும், அதன் பிறகு சில மொழிகளுக்கும் செம்மொழித் தகுதி கிட்டியதே அவற்றிற்குரிய இடம் மத்திய அரசில் தரப்படுகிறதா?

தமிழ் மொழி ஏன் புறக்கணிக்கப்பட வேண்டும்?

வடமொழி என்ற மக்களின் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கிலும் பரவலாக இல்லாத மொழியாகக் கூறப்படும் 'தேவ பாஷை' சமஸ்கிருதத்திற்கு மட்டும் தனி சிம்மாசனம் ஏன்? உலகம் முழுவதும் பற்பல நாடுகளில் சுமார் 10 கோடி மக்கள் பேசிடும், எழுதிடும் செம்மொழி, தமிழ் மொழி ஏன் புறக்கணிக்கப்பட வேண்டும்?

தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் போன்ற தனிச் சிறப்புத் தகுதியும், கல்வியும், அனுபவமும் பெற்றவர்கள் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை, பண்பாட்டுத் துறையில் அதிகாரிகளாக, ஆய்வறிஞர்களாக நியமிக்கப்பட வேண்டாமா?

நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையை முக்கியப் பிரச்சினையாக எடுத்து, மத்திய அரசை வலியுறுத்திட முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டு மேடைகளிலும் இந்த இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என்ற பண்பாட்டுப் படையெடுப்பைப் பற்றி தமிழ் மக்களிடையே பெரும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வேகமாக முடுக்கிவிட வேண்டியது அவசர, அவசியம்!

மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும்

பண்பாட்டுப் படையெடுப்புதான் படையெடுப்புகளிலேயே மிகப்பெரிய ஆபத்தானது என்பதை மக்களுக்கு 1938-ஐப் போல புரிய வைக்க மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும்!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்