சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்- பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்

மக்களவைத் தேர்தலில் கூட்டணி முடிவாகிவிட்ட கட்சிகளும், கூட்டணிக்காகத் தவமிருக்கும் கட்சிகளும் அவரவர் பாணியில் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஜெயலலிதா யாருக்காகவும் காத்திருக்காமல் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, 3-ம் தேதி காஞ்சிபுரத்திலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். அதே நாளில் அதிமுக வேட்பாளர்கள் அத்தனை பேரும் தங்களது இஷ்டத் தெய்வங்களை வணங்கிவிட்டுப் பிரச்சாரத்தில் பிஸியாகி விட்டார்கள்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜெயலலிதா பிறந்த நாளின்போதே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது அதிமுக. பல இடங்களில் வாழ்த்து சொல்லி வைக்கப்பட்ட ப்ளெக்ஸ் போர்டுகளில் அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களையும் பட்டியல் போட்டு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார்கள். சென்னையில் அதிமுக கவுன்சிலர்கள் சிலர் தங்கள் பகுதிகளில் நடந்துள்ள பணிகள் குறித்துத் திட்ட மதிப்பீட்டுடன்ப்ளெக்ஸ் வைத்திருப்பது புதிய வகை பிரச்சார உத்தி.

பாதசாரிகளாகப் பாஜக பிரச்சாரம்

அதிகாரத்தில் இருப்பதால் வாகனங்களில் சென்று வாக்கு கேட்கிறது அதிமுக. மத்தியில் அதிகாரத்துக்கு வரத் துடிக்கும் பாஜக-வினர் பாதசாரிகளாகவே சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். ‘இல்லந்தோறும் மோடி... உள்ளந்தோறும் தாமரை; ’ஒரு நோட்டு… ஒரு ஓட்டு’ என்ற முழக்கங்களுடன் நரேந்திர மோடிக்குக் கிராமங்களில் ஆதரவு திரட்டிய அவர்கள், இப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளிலும் புகுந்து புறப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

பட்டையைக் கிளப்பும் பாமக

தேர்தல் மேகங்கள் சூழ்வதற்கு முன்னதாகவே, ‘தனித்துப் போட்டி’ என்ற முழக்கத்துடன் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாமக, அந்தத் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டது. பாமக இணையதளப் பிரிவு அணியினர் சேகரித்துக் கொடுக்கும் மக்கள் குறைகளை, பாமக வேட்பாளர்கள் முடிந்தவரை சரிசெய்து கொடுத்து ஓட்டு கேட்பதும் தேர்தல் திருவிழாவில் இதுவரை காணாத அபூர்வம். அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போதும் ரயில்வே துறையில் ஆர்.வேலு, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோதும் தமிழகத்துக்குச் சாதித்துக் கொடுத்த திட்டங்களைத் துண்டுப் பிரசுரங்களில் அச்சடித்து, வீடுவீடாக கொடுத்து வருகிறது பாமக.

மோடிக்காக முழங்கும் வைகோ

தேர்தலையொட்டி தனக்குயாரும் கட்-அவுட் வைக்கக்கூடாது என்று மதிமுக-வினருக்கு உத்தரவிட்டுள்ள வைகோ, பொதுத் தேர்வுகள் நடப்பதால் பிரச்சாரத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும்

அனைத்துக் கட்சித் தோழர்களுக்கும் அன்புக் கட்டளை போட்டிருக்கிறார். கூட்டணி நிலவரம் தொகு திப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையிலும் நூல் வெளியீட்டு விழாக்கள், கட்சியினர் விழாக்கள், பாரட்டு விழாக்கள் என மேடை கண்ட இடமெல்லாம் மோடிக்காக முழங்கிக்கொண்டிருக்கிறார் வைகோ.

திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி விஷயத்தில் இன்னும் தெளிவற்ற நிலையில் இருப்பதாலும் கம்யூனிஸ்ட்கள் திரிசங்கு நிலையில் விடப்பட்டதாலும் இவர்களுக்கெல்லாம் இன்னும் ’மைக் செட்’ ஞாபகமே வரவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE