நான்கரை ஆண்டுகளாக புதுச்சேரியில் வக்பு வாரியத்தை காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு அமைக்காததால் வாரிய அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டு அதிமுக எம்எல்ஏக்கள் நால்வரும் கூட்டாக போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி வக்பு வாரிய உறுப்பினர்களை நியமித்து, வக்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புதுச்சேரி ஏனாம் வெங்கடாச்சலப்பிள்ளை வீதியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தை அதிமுக சார்பில் இன்று (நவ. 6) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது வாரிய உறுப்பினர்களை நியமிக்காததைக் கண்டித்து அலுவலகத்தைப் பூட்டினர்.
போராட்டம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் வக்பு போர்டு அமைக்கும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து காலியாக உள்ள வக்பு போர்டு இன்னமும் அமைக்கப்படவில்லை. புதுச்சேரியில் வக்பு போர்டு அமைக்கப்படாததால் முஸ்லிம் சமுதாய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். வக்பு போர்டுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆளும் அரசிடம் தொடர்பு வைத்துள்ள பல நபர்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
வக்பு போர்டு சட்டப்படி ஐந்து நபருக்குக் குறைவில்லாமல், 7 பேருக்கு மிகையில்லாமல் போர்டு அமைக்க வேண்டும். அதில் எம்எல்ஏக்களில் இருந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்களில் அசனா மட்டுமே உள்ளார். அதனால் அவரை வக்பு வாரிய உறுப்பினராக அரசு அங்கீகரிக்கவில்லை.
வழக்கறிஞர் உறுப்பினர் பிரிவில் இருந்து சையது அகமது மொய்தீன் என்ற வழக்கறிஞர் வக்பு போர்டு உறுப்பினராக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் வக்பு போர்டு உறுப்பினர் என்ற அங்கீகாரத்தை அரசு இதுவரை தரவில்லை.
வக்பு போர்டு இல்லாததால் அனைத்து பள்ளி வாசல்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட முத்தவள்ளிகள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் முஸ்லிம் தர்கா சம்பந்தமான விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்படாமல், அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஆட்சிக்காலம் நிறைவடைய ஐந்து மாதங்களே உள்ளன. அதற்குள் புதுச்சேரி அரசு வக்பு வாரியம் அமைக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக கட்சித்தலைமை அனுமதி பெற்று காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.