ஹரியாணா காட்டும் வழி; தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது? - ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (நவ. 6) வெளியிட்ட அறிக்கை:

"ஹரியாணாவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் அம்மாநிலச் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்கும் இச்சட்டம் வரவேற்கத்தக்கதும், போற்றத்தக்கதும் ஆகும்.

ஹரியாணாவில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அக்கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா அறிமுகம் செய்த இந்த சட்டத்திற்கான மசோதா அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, ஹரியாணா மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட அனைத்திலும் மாத ஊதியம் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம் கொண்ட வேலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் அண்மையில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அதே போன்ற சட்டத்தை ஹரியாணா அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது காலத்தையும், தேவையையும் உணர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

இந்தியா ஒற்றை நாடு என்ற உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், 'எங்கள் மாநில வேலைகள்... எங்கள் மக்களின் உரிமை' என்பதை மற்ற மாநிலங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதில் பல மாநிலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

தனியார் நிறுவனங்களில் கூட வேலைவாய்ப்பு தேடி பிற மாநில இளைஞர்கள் எங்கள் மாநிலத்திற்கு வந்து விடாதீர்கள் என்பதைப் பிற மாநிலத்தவருக்கு உணர்த்துவதுதான் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றுவதன் நோக்கம். கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களும் இச்சட்டத்தை நிறைவேற்றவுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள தனியார் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டவருக்கு மட்டும்தானா அல்லது இந்தியாவின் அனைத்து மாநிலத்தவருக்குமானதா? என்ற கேள்விக்கான விடை எதார்த்தத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டுமே தவிர, பெருந்தன்மையின் அடிப்படையில் அமையக்கூடாது.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசுப் பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. அதனால் தனியார் நிறுவனங்களின் மூலமாக மட்டுமே தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

தென்னிந்தியாவில் கேரளம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு மட்டும்தான் தனியார் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சூழலில் தமிழக தனியார் வேலைவாய்ப்புகளை மட்டும் அனைவருக்கும் திறந்துவிட்டால், தமிழக இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலையில்லாமல் வறுமையில்தான் வாட வேண்டும்.

தமிழ்நாட்டின் தனியார்துறை வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்தால், அனைத்து வேலைகளுக்கும் தகுதியான இளைஞர்கள் கிடைப்பார்களா?, தமிழ்நாட்டுக்குத் தடையின்றி முதலீடுகள் வருமா? என்ற கேள்விகள் எழலாம்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதனால் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியான இளைஞர்கள் கிடைப்பர். அவ்வாறு தகுதியான ஆட்கள் இல்லை என்றால் கூட, படித்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துப் பணியமர்த்த வேண்டுமே தவிர, இதைக் காரணம் காட்டி பிற மாநிலத்தவரைப் பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற பிரிவை இதற்கான சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்று கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் தொழில் முதலீடுகள் குறையும் என்ற அச்சமும் தேவையற்றது. ஆந்திராவில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்ட பிறகும் அங்கு தொழில் முதலீடுகள் குறையவில்லை என்பதே இதற்கு சாட்சியாகும்.

எனவே, நான் கடந்த காலங்களில் பலமுறை வலியுறுத்தியதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும். இதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்