புதுச்சேரி ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திமுக மாநில அமைப்பாளர்கள் இன்று சந்தித்து மனு தந்தனர். மக்கள் பிரச்சினைகளுக்காக ஆளுநரைச் சந்தித்ததாகத் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ளது. கடந்த பல மாதங்களாக ஆளும் காங்கிரஸ் அரசை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார் (வடக்கு), நாஜிம் (காரைக்கால்), சிவா எம்எல்ஏ (தெற்கு) ஆகியோர் நேற்று (நவ. 4) சென்னை சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர்.
அதைத் தொடர்ந்து, இன்று (நவ. 5) மதியம் ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மூவரும் கூட்டாக முதல் முறையாகச் சந்தித்தனர்.
அப்போது திமுக சார்பில் புதுவை மக்களின் வளர்ச்சி தொடர்பாக ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"புதுவையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்குக் கடந்த 11 மாதங்களாக சம்பளமும், அங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஓய்வூதியமும் தரப்படாத சூழல் உள்ளது. அதை உடனே தர உத்தரவிட வேண்டும்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் சேர்ந்து பயில வாய்ப்பு அளிக்கும் வகையில் இட ஒதுக்கீட்டில் 10 சதவீத இட உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஏஎஃப்டி, சுதேசி, பாரதி மில்லில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதியக்காலப் பணத்தை உடனடியாக வழங்கவும், மூடியுள்ள அந்நிறுவனங்களைச் சீரமைத்துத் திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
பாப்ஸ்கோ, பாசிக், அமுதசுரபி, குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக உள்ள நிலுவை ஊதியத்தொகையை வழங்க வேண்டும்.
கரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தவறுதலாகவும், அதிகமாகவும் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிப்பதைச் சரிசெய்ய வேண்டும்.
குப்பைகள் தரம் பிரிக்கப்படாமலேயே குவித்து வைக்கப்பட்டுத்தான் வருகிறது. எனவே, புதியதாக கொண்டுவரப்பட்ட குப்பை வரியை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி
தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்காக உள்ளாட்சித் துறையின் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, வாய்க்கால் வசதி உள்ளிட்டவற்றைச் செய்து தர முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாகச் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ஒதுக்கித் தர வேண்டும்.
விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் இயங்கி வந்த லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கலை ஆலை மூடப்பட்டுள்ளது. தனியாரிடம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒப்படைக்கும் முடிவைக் கைவிட்டு, உடனடியாக மூடப்பட்டுள்ள அந்த ஆலையைத் திறந்து இயக்க வேண்டும். விவசாயிகளுக்குக் கரும்புக்கான நிலுவைப் பணத்தையும், தொழிலாளர்களுக்குச் சம்பள பாக்கியையும் வழங்க வேண்டும்.
இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசுப் பணியிடங்கள் இளைஞர்களுக்குக் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள காவலர் தேர்வை நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், பல்வேறு அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் மட்டும் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக ரேஷன் கடைகளைத் திறந்து, மக்களுக்கு இலவச அரிசியை நேரடியாக வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கான நிலுவைச் சம்பளத்தையும் வழங்க வேண்டும்".
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மதியம் ஒரு மணிக்கு முன்னதாகவே ஆளுநர் மாளிகைக்குள் திமுக அமைப்பாளர்கள் மூவரும் சென்றனர். மதியம் 2.20 மணியளவில் வெளியே வந்தனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கூட்டாக அவர்கள் கூறுகையில், "மனுவை ஆளுநரிடம் தந்துள்ளோம். மக்களுக்காக ஆளுநரை திமுக சந்தித்தது. ஜனநாயகத்தில் ஆளுநரைச் சந்தித்தது தவறா? மக்கள் பிரச்சினைகளை ஆளுநரிடம் எடுத்துச் சொன்னோம்" என்று தெரிவித்தனர். கூட்டணி தொடர்பான கேள்விகளைத் தவிர்த்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago