நல்லவர்கள் மற்ற கூட்டணியில் உள்ளனர். அவர்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு வரவேண்டும். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் நல்லவர்களை அடக்கிய மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும் கட்சியாக இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திய பின்னர் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
ரஜினியுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் என்று சொல்கிறீர்கள். கழகங்களுடன் கூட்டணி இல்லை என்கிறீர்கள்? மாற்றி மாற்றிப் பேசுவதாக விமர்சனம் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா? அமைக்காதா?
அதற்குப் பதில் சொல்லும் நேரம் இது இல்லை என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எங்கள் கட்டமைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் யாத்திரையின் முன்னேற்றத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் பார்ப்பீர்கள். இன்னொரு விஷயம், எங்களுக்கு வந்த தகவல்கள், சதவீதம் அடிப்படையில் பார்க்கும்போது நாங்கள்தான் தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி. இதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறோம்.
கழகங்களுடன் கூட்டணி அமைப்பதால் களங்கம் வந்துவிடும் என்கிறீர்கள், என்ன களங்கம்?
அது பத்திரிகைச் செய்தி. இது பத்திரிகையாளர் சந்திப்பு.
நீங்கள் உங்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதைத்தான் கேட்கிறேன்?
என்னைக் கூட்டணிக்கு இவ்வளவு அவசரப்படுத்தும் காரணம் என்ன என்று சொல்லுங்கள்.
நீங்கள் பேசும்போது 3-வது அணி குறித்துப் பேசுகிறீர்கள். அப்படியானால் 3-வது அணி அமையப்போகிறதா?
அமைந்துவிட்டது என்றுதான் சொல்கிறேன். இதுவே ஒரு அணி, ஆகையால் நாங்கள் கூட்டணி வைப்பது என்பது நல்லவர்களுடன் அமையும். அப்படியானால் உங்கள் கட்சியைத் தவிர நல்லவர்கள் இல்லையா என்று கேட்கும்போது கண்டிப்பாக உள்ளது. அப்படி அவர்கள் கூட்டணி அமைக்கும்போது இது முதல் அணியாக இருக்கும். 3-வது அணியாக இருக்காது.
நல்லவர்கள் வேறு கூட்டணியில் உள்ளார்கள். மனம் வெதும்பி இருக்கிறார்கள். அவர்கள் இங்கு வரவேண்டும் என்பதற்கான அழைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.
கழகங்களுடன் கூட்டணி இல்லை என்றால் பாஜகவுடன் கூட்டணி உண்டா?
நல்லவர்களுடன் என்று சொல்லியிருக்கிறேன்.
அப்படியானால் பாஜக நல்லவர்கள் இல்லை என்கிறீர்களா?
நல்லவர்கள் அனைத்துக் கட்சியிலும் உள்ளனர் என்றும் சொல்லியிருக்கிறேன். அவர்கள் இங்கே வந்துவிடுங்கள் என்றும் சொல்கிறேன். கட்சிகளுடன் கூட்டணி என்பது இந்த நேரத்தில் இவ்வளவு அவசரமாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்த நேரம் கூட்டணி பற்றிப் பேசும் நேரம் இல்லை.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் யுக்தி என்ன?
இதை நான் சொல்லப்போவதில்லை. ஒரு பெரியவர் முன்னர் சொன்னதைச் சொல்லப்போகிறேன். நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்வதில் தவறில்லை. அந்த நல்லவர் மகாத்மா காந்தி. அவரிடம் ஒரு முறை உங்கள் அரசியல் யுக்தி என்னவென்று கேட்டார்கள். நேர்மைதான் என்றார். அதை நாங்கள் தைரியமாகச் சொல்வோம். மக்கள் நீதி மய்யத்தின் யுக்தியும் நேர்மைதான்.
அதை எப்படிச் சொல்லமுடியும் என்று மற்றவர்கள் கேட்டால், மற்றவர்கள் தைரியமாக எங்கள் யுக்தியும் நேர்மைதான் அரசியல் என்று சொல்லிப் பார்க்கட்டுமே. சமமான கட்சி, சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் எங்கள் யுக்தியும் நேர்மைதான் என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டுமே. உங்களை நம்ப வைக்கும்படி சொல்லட்டுமே, பார்ப்போம்.
எங்கள் அரசியல் பழிபோடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியலாக இருக்க வேண்டும் என நம்பி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி என ம.நீ.ம. பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்? எதன் அடிப்படையில்?
கள ஆய்வுகளின் சாதனை நிகழ்வுகளை வைத்துச் சொன்னதுதான். தன்னம்பிக்கையில் வந்த வார்த்தைதான். எங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்று சொன்ன வார்த்தை அல்ல. கள ஆய்வு அடிப்படையில் சொன்ன வார்த்தை. தவிர குறுகிய காலகட்டத்தில் 1 லட்சம்பேர் கட்சியில் சேர்ந்துள்ளார்கள். அது மக்கள் எங்களுக்குக் கொடுக்கும் சமிக்ஞையாக எடுத்துக்கொள்கிறோம்.
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தேர்வு எப்போது?
நடந்து கொண்டிருக்கிறது. அதை அறிவிக்கும் நாள்தான் நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் நாள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் போட்டியிடுவாரா? அவர் குரல் ஒலிக்குமா?
கண்டிப்பாக ஒலிக்கும். என்னுடைய ஆட்களுக்குச் சொல்லும்போது சில நடைமுறைகள் எப்படி இருக்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கும். அதற்கு நீங்கள் தகுதியுடையவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்?
அதை நீங்கள் யோசனையாகச் சொல்லுங்கள். எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை நான் கையெழுத்திடும்போது உங்களுக்குத் தெரியும்.
வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும்?
மக்களுக்குத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். மக்களுக்குப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
உங்களால் முதல்வர் ஆக முடியும் என்று நினைக்கிறீர்களா?
எனக்கு மாற்றம் முக்கியம். எங்கள் கட்சி அதை முடிவெடுக்கும். அவர்கள் முடிவெடுத்து அறிவித்தும் விட்டார்கள். அதைப் பின்பற்றி நடப்பேன்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago