முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள எழுவர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் அக்கடிதத்தின் நகலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 5) தமிழக ஆளுநருக்கு எழுதிய கடிதம்:
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.
ஆனால், அவர்களை விடுவிக்க அதிமுக அரசு பரிந்துரைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், திமுகவின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவும், ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்றும் 9.9.2018 அன்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது.
» சமூக நலத்துறை, வருவாய்த்துறை சார்பில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ, அந்தத் தண்டனையை நிறுத்தி வைக்கவோ, அல்லது குறைக்கவோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் படி, ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
ஆனால், ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் இந்த முக்கியப் பரிந்துரையானது, தங்களால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது, அந்த ஏழு பேருக்கும், ஆற்றொணாத் துயரத்தையும், ஈடுசெய்ய முடியாத துன்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அரசியல் சட்டப் பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்புக்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்தப் பதவியில் இருப்போருக்கு உச்ச நீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் 21.01.2020 அன்று தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மீதான உத்தரவில், 'இரு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். 2014-ம் ஆண்டு ரிட் மனு (குற்றவியல் வரம்பு) 48-ன் மீது, 6.9.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மனுதாரரின் (பேரறிவாளன்) அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஏதாவது முடிவெடுத்துள்ளதா என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், 3.11.2020 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்துள்ளன. மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல், தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே, அந்தத் தோற்றத்தை நீக்கிட, தமிழக அமைச்சரவையின் 9.9.2018-ம் தேதியிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று, நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து, உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago