பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்: வழக்கு முடித்துவைப்பு

By செய்திப்பிரிவு

பாஜக சார்பில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதனையடுத்து தடை கோரிய பொதுநல வழக்குகளை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மார்ச் 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது அது தளர்வுகளுடன் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், நவ.6 முதல் டிச.6 வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த இருப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதற்கான அனுமதியைக் கோரி டிஜிபி, மாவட்ட எஸ்.பி.க்களிடம் கடிதம் அளித்திருந்தனர்.

பாஜக நடத்தும் வேல் யாத்திரை மூலம் கரோனா தொற்றுள்ள நிலையில் அது மேலும் பரவவவே வாய்ப்புள்ளது. அரசியல் ரீதியான யாத்திரையாக இது அமையும் என்பதால் சாதி, மத மோதலுக்கு வாய்ப்புள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில் பாஜகவின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தனர். மனுதாரர் செந்தில்குமார் தரப்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூவும், பத்திரிகையாளர் பாலமுருகன் தரப்பில் வழக்கறிஞர் புனித் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கறிஞர் ஸ்டான்லி அபிமன்யூ, புனித் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொஹரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஒருமாத காலம் வேல் யாத்திரை நடத்தும்போது 3,000 முதல் 5,000 பேர் கூட இருப்பதால் தொற்றுப் பரவும் அபாயம் இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. அதேபோன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், பலதுறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும்.

யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம். அதன் காரணமாகவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஸ்டாலின் அபிமன்யூ, புனித் முறையிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், “வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு 15.10.2020 அன்று பாஜக பொதுச் செயலாளர் டிஜிபியிடம் மனு கொடுத்தார். சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளர்களை அணுகும்படி 17.10.2020 அன்று டிஜிபி பதிலளித்துள்ளார். மனுக்கள் வந்தால் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க, காவல்துறையினருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

திருவள்ளூரில் பாஜக அளித்த மனுவில் கூட்டம் நடத்துவதுபோல மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்ற விவரங்கள் இல்லை. ஊரடங்கிற்கு முன்பாக 20.03.2020 சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கரோனா கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதைக் கருத்தில்கொண்டு, போராட்டம் அல்லது பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ள உத்தரவு அமலில் உள்ளது.

தளர்வுகள் வழங்கப்பட்டாலும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதன்படி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் நவம்பர் 16 வரை அதிகப்படியாக 100 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனாவின் இரண்டு மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜகவுக்குத் தெரிவிக்கப்படும்” என்று வாதிட்டார்.

தமிழக பாஜக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “குறிப்பிட்டு எந்தப் பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை. தனி மனித விலகலைப் பின்பற்றவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா தொற்று குறைந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் தங்கப் போவதில்லை. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் யாத்திரைக்குத் தடை விதிப்பது சரியல்ல. எந்த விதிகளையும், நிபந்தனைகளையும் யாத்திரை செல்பவர்கள் மீறப் போவதில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். கும்பலாக யாரும் கூடப் போவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி அமர்வு, ''வாய்மொழி உத்தரவாதத்தை நம்பமுடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நவம்பர் 15 வரை அனுமதி அளிக்க முடியாது எனக் கூறப்படுகிறது'' எனத் தெரிவித்தது.

பாஜக தரப்பில், தமிழக அரசு முடிவெடுப்பதற்கு முன்பாகத் தடை கோரி தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்துத் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், தடை குறித்த விவரங்களைப் பாஜகவுக்கு தமிழக அரசு தெரிவிக்கும் என்கிற அடிப்படையில் வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

தமிழக அரசின் தகவலுக்குப் பின் இதுகுறித்து பாஜக தரப்பில் தனியாக மேல்முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்