ஓசூர் வனக்கோட்டத்தில் யானை கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது: நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தை அடுத்துள்ள ஜவளகிரி வனச்சரகத்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு யானை உயிரிழந்த வழக்கு சம்பந்தமாகத் தேடப்பட்டு வந்தவரை வனத்துறை சிறப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரகக் காப்புக்காட்டை ஒட்டி அமைந்துள்ள சென்னமாலம் கிராமத்தின் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேளையில் உணவு மற்றும் குடிநீர் தேடிச் சுற்றி வந்த 10 வயதான பெண் யானை, மர்ம நபரால் சுடப்பட்டு உயிரிழந்தது. கிராம மக்களின் தகவலின்படி சென்னமாலம் கிராமத்தின் அருகே உள்ள அகழியில் விழுந்து கிடந்த பெண் யானையின் உடல் வனத்துறையினரால் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

இதில் பெண் யானையின் தலையில் 4 குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி மாவட்ட அளவில் வனவிலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் ஜெகதீஸ் பகான் தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை தனிப்படையினர் இந்த வழக்கில் தொடர்புடைய சென்னமாலம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்து அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். வனத்துறையினரின் விசாரணையில் யானையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டவர் சென்னமாலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமல்லேஷ் என்பதும், அவர் இரவு நேரப் பயிர்க் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த 3 யானைகளிடம் இருந்து தப்பிக்க நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட நபருடன் மாவட்ட வன அலுவலர் பிரபு, உதவி வனப் பாதுகாவலர் ஜெகதீஷ் பகான், வனத்துறையின் சிறப்புக் குழுவினர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு வெளியிட்டுள்ள தகவல்:

''ஜவளகிரி வனச்சரகத்தில் 3-ம் தேதியன்று சுமார் 8-10 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்குட்டி ஒன்று இறந்து கிடந்ததைத் தலைமையிட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் முன்னிலையில் வனக் கால்நடை உதவி மருத்துவரால் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குண்டடி பட்டு யானை இறந்தது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக வன உயிரினக் குற்ற வழக்கு எண்.4/2020 பதிவு செய்யப்பட்டதுடன், தலைமையிட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிரப் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சென்னமாலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரேகவுடு மகன் முத்துமல்லேஷ் (40) என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது 4-ம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன''.

இவ்வாறு மாவட்ட வன அலுவலர் பிரபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்