7 தமிழர் விடுதலைக்கும் எம்.டி.எம்.ஏ விசாரணை அறிக்கைக்கும் தொடர்பு இல்லை; ஆளுநருக்குத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

7 தமிழர் விடுதலை பற்றி ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (நவ. 3) வெளியிட்ட அறிக்கை:

"பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது; ஆளுநரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலத்தை விட அதிகமாக 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில், 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தை அதே ஆண்டின் செப்டம்பர் 9 ஆம் தேதி நிறைவேற்றிய தமிழக அமைச்சரவை அன்றே ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதித்து வருகிறார். இத்தகைய நிலையில், ஆளுநர் முடிவெடுக்கும் வரை தன்னை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, 7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையின்றி தாமதம் செய்து வருவதை கடுமையாக விமர்சித்திருக்கிறது.

"ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், அதன்பிறகுதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்த வழக்குக்கும் எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவருடன் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றித்தான் எம்.டி.எம்.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்தப்பட்டு வரும் அந்த அமைப்பின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவை குறித்த ஆவணங்களையெல்லாம் ஆளுநரிடம் அளித்து தெளிவுபடுத்தினீர்களா?' எனத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

7 தமிழர் விடுதலை பற்றி 2 வாரங்களில் ஆளுநர் முடிவெடுக்க முடியும் என்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவது நியாயமல்ல; அதை ஏற்க முடியாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் பாமக என்னென்ன வாதங்களை பொதுவெளியில் முன்வைத்து வந்ததோ, அதையேதான் உச்ச நீதிமன்றமும் இப்போது கூறியிருக்கிறது.

இந்த விஷயத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலையை தமிழக அரசு விரைந்து உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநர் தேவையின்றிக் காலதாமதம் செய்து வந்தார். ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக ஒப்புதல் பெற வேண்டும் என்று பாமகதான் முதலில் வலியுறுத்தியது. உடனடியாக அமைச்சர்களுடன் முதல்வர் ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினார்; அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழுவை அனுப்பி அழுத்தம் கொடுத்தார்; நிறைவாக இடைக்கால ஏற்பாடாக அரசாணை பிறப்பித்தார். அதன் பயனாகவே 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இப்போது உச்ச நீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், 7 தமிழர் விடுதலை தொடர்பான விஷயத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் அரசுக்கு வெற்றி கிடைக்கும் என்பது உறுதி.

எனவே, உச்ச நீதிமன்றம் கூறியவாறு ஆளுநர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவருக்குத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு இம்மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை காத்திருக்காமல், அதற்கு முன்பாகவே 7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்