ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசு உரிய முடிவெடுக்கும் என நம்புகிறோம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து

By கி.மகாராஜன்

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசு உரிய முடிவெடுக்கும் என நம்புவதாக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதமே, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது தொடர்பாக சட்ட வரைவு ஏதேனும் உள்ளதா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "பல குடும்பத் தலைவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட விளையாட்டில் வெற்றி பெற இயலாது என்பதை உணராமல் பலரும் அடிமையாகி வாழ்க்கையை இழந்து வருகின்றனர். ஆகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்" என வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிட்டனர்.

அரசுத்தரப்பு வழக்கறிஞர், "தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசும் இந்த பிரச்சனையைத் தீவிரமாக அணுகி ஆலோசித்து வருகிறது. ஆகவே, இது குறித்து பதிலளிக்க 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்" எனக் கோரினார்.

அதற்கு நீதிபதிகள்,"ஜூலை மாதமே இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது தொடர்பாக சட்ட வரைவு ஏதேனும் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் பறிபோகும் நிலையில், நடவடிக்கை எடுப்பது அவசியம்” எனவும் தெரிவித்தனர்.

அரசுத்தரப்பில், "ஆன்லைன் ரம்மியில் இந்திய அளவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. தமிழக அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகமே முதன்முதலில் ஆன்லைன் லாட்டரியை தடை செய்தது" எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் இதில் வரும் வருமானம் யாரை சென்றடைகிறது? எனக் கேள்வி எழுப்பினர்.

Play games தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," சட்டப்பூர்வமாகவே ஆன்லைன் ரம்மி நடத்தப்படுகிறது. விளையாடும்போது அவர்களுக்கு ஒருசில கட்டங்களில் எச்சரிக்கையும் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஜூலை மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அப்போதே ஒருவர் உயிரிழந்திருந்தார் எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், ஒன்றல்ல இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தனர்.

தொடர்ந்து, தெலுங்கானா பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுக்களையும் தடை செய்துள்ளது. மீறுபவர்கள் மீது குண்டாஸ் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என அறிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூலை மாதமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

அசாம், ஒரிசா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் காரணமாக பணத்தை இழந்து சரவணன், நிதிஷ், வெங்கட சுப்பிரமணியம், மீனாட்சி உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர்.

அரசுத்தரப்பில் இந்த விவகாரத்தை தீவிரமாக பரிசீலிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு, கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

ஆகவே, 10 நாட்களில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவெடுக்கும் என நீதிமன்றம் நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள்"

இது குறித்து மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்