கரோனா இரண்டாவது அலை எச்சரிக்கை; நவ.16-ல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கூடாது; மாற்று அறிவிப்பை வெளியிட்டு மனப் பதற்றத்தை நீக்குக: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

கரோனா இரண்டாவது அலை வரும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் நவ.16-ல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 3) வெளியிட்ட அறிக்கை:

"9 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என்றும், அனைத்துக் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், முதல்வர் பழனிசாமி அவசரக் கோலத்தில் அறிவித்திருக்கிறார். மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இது தெரியவில்லை.

அறிவிப்பினைக் கண்டதிலிருந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது, விடுதி மாணவர்களுக்கான தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளுக்கான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பை எந்த வகையில் மேற்கொள்வது என்பது குறித்த அச்சத்திலும், பதற்றத்திலும் தவிப்பதைக் காண முடிகிறது.

அதிலும் குறிப்பாக, 'கரோனாவின் இரண்டாவது அலை வீசும்' என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்து, இது போன்ற தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் உள்ளாகி அடுத்தடுத்து ஊரடங்கினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வி எல்லாத் தரப்பிலும் எழுந்திருப்பதை முதல்வர் பழனிசாமி உணராமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

வெளி நாடுகளில், குறிப்பாக பிரிட்டன், இஸ்ரேல், தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், 'தொடக்கப் பள்ளிகளை விட உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என்று எச்சரித்துள்ளது. அதே போல் ஆசிரியர்களுக்குள் கரோனா பரவல் அதிகமாக ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்திருக்கிறது.

பள்ளிகள் திறக்கப்படும்போது, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், தொடர் உடல் பரிசோதனை மற்றும் அடிக்கடி கைகழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பள்ளி நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் எந்த அளவுக்குச் செயல்படுத்த முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

ஏனென்றால், இதுவரை ஊரடங்குகளில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் இந்த முன்னெச்சரிக்கை வழிமுறைகள் தினம் தினம் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 9 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களைக் கரோனா ஆபத்தில் இருந்து காப்பதுதான் அரசின் முதல் கடமை!

பள்ளிகளுக்கு வரச் சொல்லிவிட்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் செய்ய முடியாமல் போனால், பெற்றோர், வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள், வகுப்பறையில் அமர்ந்துள்ள மாணவர்கள் என அனைவருக்குமே ஆபத்தாக முடியும் என்று கல்வி வல்லுநர்களே எச்சரிக்கிறார்கள்.

'பள்ளிகளைத் திறக்கப் போகிறோம்' என்ற கடந்த காலங்களில் வெளியிட்ட அறிவிப்பாக இருந்தாலும், இப்போது வெளிவந்துள்ள அறிவிப்பாக இருந்தாலும், அதன் அடிப்படையாக எடப்பாடி பழனிசாமி அதிமுக அரசின் நிர்வாகக் குழப்பமே தலைதூக்கி நிற்கிறது.

வடகிழக்குப் பருவமழை, அதன் விளைவாக ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகள், பருவகால நோய்கள் எல்லாம் கரோனா தொற்றுடன் சேர்ந்துகொண்டு மாணவர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தினை விளைவிக்கக் கூடும் என்பது மருத்துவர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் போன்றோரின் கவலையாகவே இருக்கிறது.

ஆனால், முதல்வர் பழனிசாமி, ஆய்வு என்ற பெயரில் கூட்டம் போடுகிறாரே தவிர, இந்தக் காலகட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பதில் இருக்கும் பாதகத்தைப் பற்றியும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உள்ள சங்கடத்தைப் பற்றியும் கருத்தில் கொண்டு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

கரோனாவில் அவர் அடைந்த தொடர் தோல்விகளுக்கு எல்லாம், மிக எளிதாக, 'மக்கள் ஒத்துழைக்கவில்லை' என்று ஒரு வரியில் பொய் சொல்லி, பழி சுமத்துவதை மட்டுமே கைவந்த கலையாக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்.

அதே அவசரத்துடனும், அலட்சியத்துடனும் இந்த கரோனா காலத்தில், குறிப்பாக இரண்டாவது அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவருமே, 'நவம்பருக்குப் பதில் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை முழுவதுமாக ஆய்வு செய்து, பள்ளிகளைத் திறக்கலாம்' என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். பத்திரிகைகளிலும் அந்தச் செய்திகள் வெளிவருகின்றன. உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் ஆய்வறிக்கைகளும் எச்சரிக்கின்றன. இவற்றை எல்லாம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல், ஒதுக்கித் தள்ளிட இயலவில்லை.

ஆகவே, மாணவ, மாணவிகளின் உயிர்ப் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முதல்வருக்கு நினைவூட்டுகிறேன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஏதேதோ உள் நோக்கத்துடன், அவசர கதியில் முடிவு எடுக்காமல், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, 'பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்கள்' ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்திட வேண்டும் என்றும், நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பினை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பினை வெளியிட்டு, மக்கள் மத்தியில் மிகப் பரவலாக ஏற்பட்டிருக்கும் மனப் பதற்றத்தை நீக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்