லட்சக்கணக்கான மக்கள் இந்த கரோனா நோயால் பாதிக்கப்பட்டார்கள், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை நாம் இழந்திருக்கிறோம், இதற்கெல்லாம் காரணம், கரோனா என்றால் என்ன என்றே தெரியாத அமைச்சரின் அறியாமைதான் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பபேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசினார்
திமுக தலைவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற ஒரே ஒரு துறை மூலமாக 2009 - 11 காலக்கட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் செய்த சாதனைகளை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 2011-ஆம் ஆண்டில் இருந்து வேதனையைத் தான் பார்த்து வருகிறது தமிழகம். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இருந்து சொல்வதற்கு எந்தச் சாதனையும் இல்லாமல், வேதனையையே பரிசாக அளித்து வருகிறது அதிமுக அரசு.
திரும்பிய பக்கம் எல்லாம் அராஜகம் - தொட்டது எல்லாம் ஊழல் - எல்லாவற்றிலும் அலட்சியம் - மொத்தத்தில் இது ஆட்சியே அல்ல என்று சொல்லும் அளவுக்குத் தான் அதிமுக ஆட்சியானது கடந்த பத்தாண்டு காலத்தில் இருந்து வந்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும், பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக இருந்தாலும், பழனிசாமி முதல்வராகத் தொடர்ந்தாலும்; அதிமுக ஆட்சி என்பது மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஊழலும் அராஜகமும் கொண்ட ஆட்சியாகத்தான் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இந்த ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சி என்பதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஒருவர் போதாதா?
இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய எல்லா கெட்ட பெயரையும் உருவாக்கிக் கொடுத்ததில் மிக முக்கியமான பங்கு அமைச்சர் விஜயபாஸ்கருக்குத்தான் உண்டு. கரோனா பரவுவதற்கு முன்னாலே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன எடுக்கப்பட்டுள்ளது என்றும் சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் என்ன சொன்னார்?
“சர்க்கரை நோயுள்ளவர்கள், கேன்சர் நோயாளிகள் ஆகியோர் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று சொன்னார். "எல்லாரும் மாஸ்க் போடவேண்டியது இல்லை" என்று சொன்னார். "யாரும் பயப்பட வேண்டியது இல்லை" என்று சொன்னார். அதனால் பொதுமக்களும் இவரது பேச்சை நம்பி விட்டார்கள். ஆனால் நடந்தது என்ன?
லட்சக்கணக்கான மக்கள் இந்த கரோனா நோயால் பாதிக்கப்பட்டார்கள். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம், கரோனா என்றால் என்ன என்றே தெரியாத இந்த அமைச்சரின் அறியாமைதான்.
கரோனா தடுப்பு நடவடிக்கையை ஜனவரி மாதமே தொடங்கிவிட்டோம் என்று அமைச்சர் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார். முன்னெச்சரிக்கைப் பணிகள் எதையுமே செய்யாமல், செய்ததாக நாடகம் ஆடிக் கொண்டு தவறான தகவல்களைப் பரப்பினார்.
"தயார் நிலையில் இருக்கிறோம், அனைவரையும் காப்பற்றுவோம்" என்று எகத்தாளம் காட்டினார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. பயத்தில் இருந்த மக்களுக்கு படம் காட்டிக் கொண்டிருந்தார் விஜயபாஸ்கர்.
தமிழ்நாட்டுக்குள் கரோனா வரப் பயப்படுவதாகவும், அங்கே விஜயபாஸ்கர் இருப்பதாகவும், அவர் போதிதர்மர் என்றும் ஒரு படம் தயாரித்து வெளியே விட்டுக் கொண்டு இருந்தார். இந்த பொய்வேஷத்தைப் போடாமல் உண்மையாக உழைத்திருந்தால் கரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றி இருக்கலாம்.
மரணத்திலும் பொய்க் கணக்குக் காட்டியவர் விஜயபாஸ்கர். எத்தனை பேர் பாதிப்பு என்பதிலும் பொய்க் கணக்கு. ஆனால் கரோனாவை வைத்து சம்பாத்தியம் மட்டும் கடந்த ஆறு மாத காலமாக ஜரூராக நடக்கிறது. கரோனாவுக்கு முன்னாலேயே அவருக்கு குட்கா விஜயபாஸ்கர் என்று நான் பெயர் சூட்டினேன்.
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், இதற்காக கோடிக்கணக்கான பணம் லஞ்சம் பெற்றதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த ஜெ.அன்பழகன் வழக்குத் தொடர்ந்தார். சட்டவிரோதமாக குட்கா பொருள்களை விற்பனை செய்த ஒரு நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டபோது, ஒரு டைரி சிக்கியது.
தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய யாருக்கெல்லாம் லஞ்சம், மாமூல் தரப்பட்டுள்ளது என்று அதில் இருந்தது. அதில் ஒரு பெயர் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்த விவகாரம் தமிழகக் காவல்துறையால் விசாரிக்கப்பட்டால் நீதி கிடைக்காது என்பதால் தான் சிபிஐ விசாரணை கேட்டோம். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய கலால் வரித்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்றும், இதற்காக ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடந்து இருக்கிறது என்றும், இதில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் மத்திய வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், "நாங்கள் சோதனை நடத்தியபோது சிக்கிய ஆவணங்களில் முக்கியமான பலரது பெயர்கள் உள்ளன" என்றும் சொல்லி இருந்தார்கள். டைரியில் எழுதப்பட்டுள்ள எச்.எம். என்பது ஹெல்த் மினிஸ்டர்தான் என்றும் அப்போது சொல்லப்பட்டது.
'எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களை மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளோம்.' என்றும் மத்திய வருமானவரித்துறை சொன்னது. ஆனால் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு உத்தரவு போட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, தமிழக டிஜிபி ராஜேந்திரன் மற்றும் பலருக்குச் சொந்தமான சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, பெங்களூர், பாண்டிச்சேரி, குண்டூர், மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் சோதனை செய்தார்கள்.
குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவுடன் மத்திய மாநில அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள். அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. விஜயபாஸ்கர் சிபிஐயில் ஆஜரானார். இந்த வழக்கு இன்னமும் சிபிஐயில் நிலுவையில் தான் இருக்கிறது என்பதை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
மத்திய அரசின் தயவு இல்லாமல் இருக்குமானால் விஜயபாஸ்கரை எப்போதோ கைது செய்திருப்பார்கள். அவர் இன்று அமைச்சராக இருப்பதற்கும் வெளியில் இருப்பதற்கும் காரணம் மத்திய பாஜக அரசு தான். அதனால்தான் மத்திய அரசு எதைச் சொன்னாலும் தலையாட்டிக் கொண்டு இருக்கிறது அதிமுக அரசு.
இதை விட பாஜக அரசுக்கு இந்த அதிமுக அரசு பயப்பட இன்னொரு காரணம் ஆர்.கே.நகர் தேர்தல் வழக்கு. இதிலும் சம்பந்தப்பட்டவர் விஜயபாஸ்கர்தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்களே பணப்பட்டுவாடா செய்தார்கள். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. அந்தப் பணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பிரித்துக் கொண்டு ஆர்.கே.நகரில் விநியோகம் செய்திருக்கிறார்கள். இப்படி குற்றம் சாட்டியது நான் அல்ல, மத்திய வருமான வரித்துறைதான் இப்படிக் குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத்துக்கு, வருமான வரித்துறை ஆணையர் கடிதம் எழுதினார். இதன்படி, அன்றைய தினம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலே தள்ளிவைக்கப்பட்டது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
இந்தப் பணப் பட்டுவாடா குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி புகார் கொடுத்தார். குற்றவாளிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அபிராமபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நேர்மையாக நடக்காது என்பது தெரியும். அதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் மனுதாக்கல் செய்தார். கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட மருதுகணேசும் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
சி.பி.ஐ. விசாரணை கேட்டு இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கும் இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது என்பதை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவரது சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தார்கள். அப்போது கைப்பற்றப்பட்ட விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் நீதிமன்றத்துக்கும் சொல்லப்பட்டுள்ளது.
2011 முதல் 2017 வரையிலான வருமானக் கணக்கு குறித்து விளக்கம் கேட்டு அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் வருமானவரித்துறை கூறியிருக்கிறது.
சிபிஐ தரப்பை எதிர் மனுதார்ராக சேர்க்கக்கோரும் திமுக கூடுதல் மனு மீதான தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளனர். இந்த மனுவின் அடுத்த கட்ட விசாரணை வந்து தீர்ப்பு வருமானால், இந்தப் புகாரும் சிபிஐ வசம் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. விஜயபாஸ்கர் இருக்க வேண்டிய இடம் கோட்டையா? சிறையா? என்பதைத் தெரிந்து கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை!
கரோனாவை வைத்து அடித்த கொள்ளைகள், குட்கா லஞ்சங்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா, வருமானவரித்துறையின் புகார்கள் - என்று விஜயபாஸ்கரின் க்ரைம் ரேட் எகிறிக் கொண்டே போகிறது.
ஒரே ஒரு அமைச்சரைப் பற்றித்தான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். இதேபோல் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி என்று வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தால் பல மணிநேரம் ஆகும்.
திமுகவின் சாதனைப் பட்டியல் ஒரு பக்கம் மலையளவு இருக்கிறது என்றால், அதிமுகவின் ஊழல் பட்டியல் இன்னொரு பக்கம் மலையளவு குவிந்து இருக்கிறது. இந்த ஊழல்வாதிகளிடம் இருந்து கோட்டையை மீட்பதுதான், நாம் தொடங்கியுள்ள போர். இந்த ஊழல்வாதிகளுக்கு, மத்தியில் உள்ள பாஜக அரசு பாதுகாப்பை அளித்து வருகிறது. பாஜக அரசுக்கு அடிமையாக இருக்க அதிமுக அரசு தயாராக இருப்பதால் மத்திய அரசு இவர்களைப் பாதுகாக்கிறது.
அதிமுக என்ற கட்சியையும் தமிழக ஆட்சியையும் பாஜகவுக்கு அடிமையாகக் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். அதற்குப் பரிகாரமாக தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு எடப்பாடி கூட்டத்துக்கு பாஜக அனுமதி வழங்கியுள்ளது.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு கப்பம் கட்டிவிட்டு சில குறுநில மன்னர்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டு இருந்ததைப் போல, மத்திய பாஜக அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு அதிமுகவினர் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளம் போய்விட்டது. தொழில் வளம் நாசமாகிவிட்டது. வேலைவாய்ப்புகள் இல்லை. மாநில உரிமைகள் பறிபோய்விட்டன. வேளாண்மையைச் சிதைத்துவிட்டார்கள். நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் தலையில் கட்டுகிறார்கள். நாம் எதிர்பார்க்கும் திட்டங்களைக் கொடுப்பதே இல்லை.
ஒரே ஒரு உதாரணம்; எய்ம்ஸ் மருத்துவமனை. இதுவரைக்கும் வரவில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது 2020-ஆம் ஆண்டு. இன்னும் வரவில்லை எய்ம்ஸ். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால், தமிழ்நாட்டு மக்களிடம் போய் வாக்குக் கேட்க வேண்டுமே என்பதால் அந்தத் தேர்தலுக்கு முன்னதாக மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
ஆனால் அந்தச் செங்கல்லைக் கூட இப்போது காணவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடம் இன்னும் பொட்டல் காடாகத்தான் இருக்கிறது. இதோ இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு குழுவைப் போட்டுள்ளது மத்திய அரசு. இது அடுத்த ஏமாற்றுக் காரியம்.
மதுரையில் இப்படி பல்லாயிரம் கோடி மதிப்பிலான எய்ம்ஸ் அமையப்போகிறது என்றால், மதுரை மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்களை அந்தக் குழுவில் நியமித்திருக்க வேண்டும். அவர்களை நியமிக்கவில்லை.
மருத்துவர் என்று சொல்லி, பல்வேறு சர்ச்சைக்குரிய தரக்குறைவான செயல்களில் ஈடுபட்ட பிரமுகர் ஒருவரை அதில் நியமித்துள்ளார்கள். பாஜக அரசு நியமிக்கும் ஆட்கள் எல்லாம் ஏதாவது சர்ச்சையில் சிக்கியவர்களாக இருப்பார்கள். அல்லது பதவிக்கு வந்ததும் சர்ச்சையில் சிக்குவார்கள். நல்லவர்களை, திறமைசாலிகளை அவர்களால் தேர்வு செய்யவும் தெரியாது. அவர்களிடமும் இருக்க மாட்டார்கள்.
ஒரே ஒரு சாதனையாக எய்மஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வரத் துப்பு இல்லாத ஆட்சியாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. அதனைத் தட்டிக் கேட்க தெம்பு, தைரியமும் துணிச்சலும் அருகதையும் இல்லாத ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது.
இந்தக் கூட்டத்தை வீழ்த்தும் கடமை திமுகவின் தீரர்களுக்கு உண்டு. "இரும்பு உலைக்களத்தில் படைக்கலனாக மாறுவதற்கு கரியும், அதிலிருந்து உருவாகிற நெருப்பும் தேவை. கரியின் நிறம் கருப்பு; நெருப்பின் நிறம் சிவப்பு" - என்றார் மறைந்த தலைவர் கருணாநிதி.
தேர்தல் என்ற உலைக்களத்தில் நாம் படைக்கலனாக மாறுவதற்குத் தேவை கருப்பு சிவப்புக் கொடி. அந்தக் கொடியை வெற்றிக் கொடியாக ஏந்தி தேர்தல் களத்தில் பரப்புரை பயணத்தைத் தொடங்குவோம்.
இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை என்பதைப் போல, அதிமுக கொள்ளைக் கூட்டத்தை விரட்டுவோம். கோட்டையில் திமுக ஆட்சி என்பதை புதுக்கோட்டைக் கூட்டத்தில் சபதம் எடுப்போம்; தலைவர் கருணாநிதி சிலையைத் திறந்துள்ள இந்த நன்னாளில் சபதமேற்போம்.
தேர்தலுக்குப் பிறகு சென்னைக் கோட்டையை புதிய கோட்டையாக மாற்றிக் காட்டுவோம்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago