கரோனா காலம் கற்றல், கற்பித்தல் முறைகளிலும் டிஜிட்டலைப் புகுத்திவிட்டது. பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் கற்றல் முறை ஊக்குவிக்கப்படும் என்றே அரசு தெரிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத கல்வி முறையாக இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமாவதில்லை. அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லாடும் விளிம்புநிலை மக்களுக்கு, ஆன்லைன் உபகரணங்கள் மூலம் கல்வி என்பது ஆடம்பரமாக மாறிவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
இந்நிலையில் உதவிகள் தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மொபைல் ஆகியவற்றை வழங்க இணையதளத்தை உருவாக்கி உதவி வருகிறார் சென்னையைச் சேர்ந்த குனிஷா அகர்வால். 12- வகுப்பு மாணவியான இவர், helpchennai என்ற பெயரில் இணையதளத்தை உருவாக்கி, உதவ விரும்புவோருக்கும் உதவிகள் தேவைப்படுவோருக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார்.
» 50 சதவீதம் கூட நிரம்பாத பொறியியல் இடங்கள்: குறைவது ஆர்வமா, தரமா?- ஓர் அலசல்
» வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் துணை மருத்துவப் படிப்புகள்; ஓர் அறிமுகம்
இதுகுறித்து மாணவி குனிஷா அகர்வால் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகளுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. அவர் என் அம்மாவிடம், லேப்டாப் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் தன் மகளால் கலந்துகொள்ள முடியாததைப் பற்றிக் கவலையுடன் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அம்மா வனிதா அகர்வால் தன்னிடமிருந்த பழைய லேப்டாப்பைக் கொடுத்து உதவினார். அதைப் பார்த்தபோது இதுபோல எண்ணற்ற மாணவர்கள் இருப்பார்களே, அவர்களுக்கு உதவினால் என்ன என்று தோன்றியது. அதன் நீட்சியாகத்தான் ஹெல்ப் சென்னை இணையதளம் தொடங்கப்பட்டது.
தேவையுள்ள மாணவர்கள், helpchennai இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். அதில் பெற்றோரின் வருமானம், பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சந்தேகங்களைத் தீர்க்க 99403 48747 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யலாம்.
தனித்தனியாக 50க்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் சேவா சக்ரா ஆதரவற்றோர் மையத்தைச் சேர்ந்த 82 மாணவர்களுக்கும் இதுவரை லேப்டாப் வழங்கியுள்ளோம்.
விரும்புவோரும் உபகரணங்களைக் கொடுத்து உதவலாம்
ஏழை மாணவர்களுக்கு உதவ விரும்புபவர்களும் ஹெல்ப் சென்னை இணையதளம் மூலமாக எங்களுக்கு ஆன்லைன் கற்றல் உபகரணங்களையோ, பணத்தையோ அளிக்கலாம். தன்னார்வப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்
பல்வேறு நல்ல உள்ளங்கள் மூலமாக இதுவரை செல்போன், லேப்டாப், டேப் உள்ளிட்ட 200 சாதனங்கள் கிடைத்துள்ளன. சென்னை ரோட்டரி கிளப் 100 புதிய ஆன்லைன் சாதனங்களை எங்களுக்கு அளித்துள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பான முறையில் கல்வியை வழங்குபவை ஆன்லைன் வகுப்புகள். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
போதிய ஆட்கள் வசதி இல்லாததால் சென்னையில் மட்டுமே ஆன்லைன் உபகரணங்களை வழங்கி வருகிறோம். என்னுடைய பெற்றோரே என்னுடைய முன்மாதிரிகள். நிறையப் பேருக்கு உதவ முடிவதைக் கண்டு என் தந்தை மிகவும் சந்தோஷப்பட்டார்'' என்கிறார் குனிஷா அகர்வால்.
17 வயதே ஆன 12-ம் வகுப்பு மாணவி குனிஷா அகர்வால், சென்னை பெருநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago