சென்னை உட்பட 25 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும் திட்டமான மேட்டூர் அணை - சரபங்கா திட்டம் குறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் பேசப்பட்டவவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
“தமிழக அரசு காவிரி உபரி நீர் திட்டம் என்கிற பெயரில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிராக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் மேட்டூர் அணை -சரபங்கா திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக நிறைவேற்ற முயல்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
2015இல் ஜெயலலிதாவால் கைவிடப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த முயல்வது அவருக்குச் செய்கிற துரோகம். இதனைக் கைவிட வேண்டும். தடை கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
» ராம் விலாஸ் பாஸ்வான் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு மாஞ்சி கட்சி கடிதம்
» வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் ராகுல் தலைமையில் ஏர் கலப்பை ஊர்வலம்: கே.எஸ்.அழகிரி தகவல்
மூன்று மாதகாலமாக மத்திய அரசாங்கமும் காவிரி மேலாண்மை ஆணையமும் வழக்கிற்கு உரிய பதிலைத் தராமல் காலம் கடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தலைவர் ஜெயின் தலைமையில் இணையம் வழியாக நடைபெற்றது.
அக்கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கிற்குப் பதிலளிக்க ஆணையத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட காவிரி சரபங்கா திட்டம் குறித்தான விளக்கக் கலந்துரையாடலில் பங்கேற்ற கர்நாடக அதிகாரிகள், சரபங்கா திட்டத்தைச் சட்டவிரோதமாகச் செயல்படுத்தி புதிய நீர்ப்பாசன பகுதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு சட்டவிரோதமாக ஈடுபடுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைக் கைவிட வேண்டும். ஏற்க மறுத்தால் கர்நாடகம் மேகேதாட்டுவில் அணை கட்டி புதிய நீர் பாசனப் பகுதிகளை நாங்களும் விரிவாக்கம் செய்வோம் எனப் பேசியதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கையை ஆணையத் தலைவர் வெளியிட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்குத் துணை போகிறதோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.
திட்டம் நிறைவேற்றினால் காவிரி டெல்டாவில் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் அழிவதோடு, 5 கோடி மக்களுடைய குடிநீர் ஆதாரம் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தைக் கைவிட முன்வர வேண்டும்
மதுரை உயர் நீதிமன்றம் 50 ஆண்டு காலம் போராடிப் பெற்ற உரிமையை குழிதோண்டி புதைக்க முயலும் தமிழக அரசின் சட்ட விரோத நடவடிக்கைக்குத் தடைவிதித்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கு விரைந்து நீதி வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே, தமிழக அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு பாசன நீர் ஆதார உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற விவசாய விரோதச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. பதுக்கல்காரர்களுக்கு ஆதரவானவை என்பது வெங்காய உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வெளிவந்திருக்கிறது. இதன் மூலம் மோடி அரசாங்கம் விவசாயச் சட்டங்களில் தோல்வி அடைந்திருக்கிறது என்பதைப் பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன். எனவே, சட்டங்களில் இருக்கிற விவசாயிகளுக்கு விரோதமான 4 ஷரத்துகளை மாற்றம் செய்து விவசாயிகளுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
கேரளாவில் 16 வகையான காய்கறிகளைக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதலை அரசு உத்தரவாதப்படுத்துகின்றது. தமிழகத்தில் உற்பத்தி செய்யக் கூடிய காய்கறிகள் உணவுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதம் அளிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் 50 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்கியுள்ளன. காவிரி டெல்டாவில் பெரும்பகுதியான விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கிறார்கள். புதிதாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குத் தொடங்கி தான் நகைக்கடன் வேளாண் கடன் பெற முடியும் என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதனடிப்படையில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதற்கான உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு 10 சதவீதம் பங்குத் தொகை என்ற பெயரில் கட்டாய வசூல் செய்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 secs ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago