கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் உயி ரிழந்த வேளாண் துறை அமைச் சர் துரைக்கண்ணுவின் உடல், அவ ரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.துரைக்கண்ணு (வயது 72). கடந்த மாதம் 13-ம் தேதி முதல்வர் பழனி சாமியின் தாயார் தவுசாயி அம் மாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்து வதற்காக சென்னையில் இருந்து காரில் சேலம் சென்று கொண்டிருந் தார். திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடி யாக விழுப்புரம் முண்டியம்பாக் கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக் காக சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரி வில் (ஐசியு) வைத்து அமைச்சருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச் சைகளை அளித்து வந்தனர். ஏற் கெனவே அவருக்கு இருந்த இணை நோய்கள் காரணமாக உடல்நிலை யில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர கரோனா தொற்றால் 90 சதவீத நுரையீரல் பாதிக்கப்பட்டதால் செயற்கை சுவாசம் (வென்டி லேட்டர்) மற்றும் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். ஆனாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியது.
கடந்த வாரம் முதல்வர் பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக் கப்படும் சிகிச்சைகள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந் தார். அமைச்சர்களும் மருத்துவ மனைக்கு சென்று அவரது உடல் நிலை குறித்து விசாரித்து வந் தனர். தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும், கடந்த ஒருவாரமாக அமைச்சரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென் றது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 11.15 மணிக்கு அமைச் சர் துரைக்கண்ணு காலமானார்.
முதல்வர் பழனிசாமி அஞ்சலி
காவேரி மருத்துவமனைக்கு நேற்று காலை 7.30 மணிக்கு வந்த முதல்வர் பழனிசாமி அங்கு வைக்கப்பட்டிருந்த துரைக்கண்ணு வின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, காமராஜ், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் பழனிசாமி கூறும்போது, ‘‘அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு, வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டவர். அவரது இழப்பு அதிமுகவுக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும்’’ என்றார்.
இதையடுத்து, துரைக்கண்ணு வின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவ ரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் ராஜ கிரியில் உள்ள வீட்டுக்கு நேற்று பிற்பகல் கொண்டுவரப்பட்டது. வீட் டின் பின்புறம் உள்ள அய்யனார் கோயில் திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு, அதன் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, பி.தங்கமணி, கே.ஏ.செங் கோட்டையன், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணி யன், வெல்லமண்டி என்.நடராஜன், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.வளர்மதி, அதிமுக துணை ஒருங்கிணைப் பாளர் கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர்கள் ம.கோவிந்த ராவ் (தஞ்சாவூர்), அண்ணாதுரை (விழுப்புரம்) உள்ளிட்டோர் துரைக்கண்ணுவின் படத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, ராஜகிரி அருகே வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவுக்கு சொந்த மான தென்னந்தோப்பில், அவரது உடல் கரோனா விதிமுறைப்படி, அரசு மரியாதையுடனும் காவல் துறையினரின் 63 குண்டுகள் முழங்கவும் நல்லடக்கம் செய்யப் பட்டது.
திருச்சி மத்திய மண்டல ஐஜி எச்.எம்.ஜெயராம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். துரைக்கண்ணுவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையோரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பொதுமக் கள் அதிக அளவில் வந்ததால், அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து 3 முறை வெற்றி
ராஜகிரியைச் சேர்ந்த துரைக் கண்ணு, இளங்கலை பட்டப்படிப்பு (பி.ஏ) படித்தவர். தொடக்கத்தில் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணியாற்றிய இவர், 1972-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். பின்னர், கட்சியில் கிளைச் செய லாளர் முதல் பல்வேறு பதவிகளை வகித்தார். சில ஆண்டுகளாக தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராகவும் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த பாபநாசம் சட்டப் பேரவை தொகுதியில், கடந்த 2006, 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரைக்கண்ணு, 2016-லும் இதே தொகுதியில் 3-வது முறையாக தொடர் வெற்றியை பெற்று, வேளாண் துறை அமைச்சரானார்.
இவருக்கு மனைவி பானுமதி, 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சிவவீரபாண்டியன், வேளாண் துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் அய்யப்பன் என்கிற சண்முக பிரபு அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த ஜூன் 10-ம் தேதி உயிரிழந்தார். அதன்பின், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி எச்.வசந்தகுமார் ஆகஸ்ட் 28-ம் தேதியும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25-ம் தேதியும், அமமுக பொருளாளர் பி.வெற்றிவேல் அக்டோபர் 15-ம் தேதியும் கரோனாவால் உயிரிழந்தனர். தற்போது வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தமிழக அமைச்சர் துரைக்கண்ணு மறைவு செய்தியறிந்து வேதனை அடைந்தேன். சமுதாயத்துக்கு சேவை செய்வதற்கும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago