பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறையிலும் அதலபாதாளத்திற்கு சரிந்து கிடக்கும் தமிழகத்தை மீட்பதற்கான போருக்கு அணி திரள்வோம் என, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 1) ஈரோடு மாவட்ட திமுகவின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
"இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொணடிருக்கிறது. இதனை ஆட்சி என்று கூட நான் சொல்ல மாட்டேன். இது ஆட்சி அல்ல, ஒரு காட்சி. அவ்வளவுதான். இதனை ஒரு கட்சியின் ஆட்சி என்றுகூடச் சொல்ல முடியாது; ஒரு கும்பலின் ஆட்சி இது.
கட்சி என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்க வேண்டும். ஆனால், அதிமுகவுக்கு தலைமையே இல்லை. யார் தலைவர் என்பதற்குத்தான் கடந்த நான்காண்டு காலமாக முட்டலும் மோதலும் நடக்கிறது. ஆட்சியை வழிநடத்தும் முதல்வருக்கோ துணை முதல்வருக்கோ, அனைத்து அமைச்சர்களும் அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஒருவர் கிழக்கே போனால் இன்னொருவர் மேற்கே போவார். ஒருவர் வடக்கே போனால் இன்னொருவர் தெற்கே போவார். இதுதான் அவர்கள் நடத்தும் ஆட்சியின் காட்சி.
அதிமுக என்ற கட்சிக்குத் தலைவரும் இல்லை, பொதுச்செயலாளரும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஆளுக்கு ஒரு 'நேம் போர்டு' தயாரித்துக் கொண்டு அதன் கீழே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
கட்சியும் எல்லா விஷயத்திலும் இரண்டாக இருக்கிறது. எப்போது இரண்டாக உடைந்து விழுமோ என்ற நிலைமையில் ஒரு கண்ணாடித்துண்டு ஒட்டிக் கொண்டு இருப்பதைப் போல அதிமுக என்ற கட்சியும், அவர்களால் ஆளப்படும் அரசும் இருக்கிறது. அவர்களுக்குக் கட்சி நடத்தவும் தெரியாது. ஆட்சி நடத்தவும் தெரியாது.
ஏனென்றால் இருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பதவிக்கு வந்தவர்கள் அல்ல. உழைக்காமல் நடித்து பதவிக்கு வந்த அவர்கள் இப்போதும் முதல்வர், துணை முதல்வர் என்ற வேஷங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த மே மாதம் வேடம் கலைத்துவிட்டு கோட்டையை விட்டு அவர்கள் வெளியேறப் போகிறார்கள். வெளியேறப் போகிறார்கள் என்று கூட சொல்ல மாட்டேன், அவர்கள் மக்களால் விரட்டப்பட இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
ஏனென்றால், அண்ணாவும் கருணாநிதியும் உருவாக்கிய, உருவாக்க நினைத்த தமிழகத்தை மொத்தமாகச் சிதைக்கும் கும்பல்தான் இந்த எடப்பாடி பழனிசாமி கூட்டம். இந்தக் கும்பல் கையில் இருந்து கோட்டையை மீட்டாக வேண்டும்.
2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதாவும், பன்னீர்செல்வமும் பழனிசாமியும் இந்த நாட்டை பத்தாண்டு காலம் ஆண்டுள்ளார்கள். முடிந்தவரை தங்கள் பங்குக்கு தமிழ்நாட்டை அதல பாதாளத்துக்குப் கொண்டு போய்விட்டார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்றார் ஜெயலலிதா. சிறைக்குச் சென்றார். ஜாமீனில் வெளியில் வந்த பிறகு அவர் 'ஆக்டிவ்' ஆக ஆட்சி செய்யவில்லை.
இறுதியில் உடல்நலமில்லாமல் ஆனார். எப்போது எப்படி எந்தத் தேதியில் இறந்தார் என்பது இதுவரை மர்மமாக இருக்கிறது. அதற்குப் பிறகு அதிமுகவில் நடந்த அதிகாரப்போட்டிகள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அது ஆட்சியை பாதித்தது.
முதல்வர் நாற்காலியை தக்க வைப்பதற்காக பழனிசாமியும், முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக பன்னீர்செல்வமும் தினந்தோறும் நடத்திய நாடகங்களைத்தான் நான்கு ஆண்டு காலம் பார்த்தோம். இதைத் தாண்டி ஒன்றே ஒன்று நடந்தது அதுதான் கொள்ளை. கொள்ளையடிப்பது ஒன்றே இந்த ஆட்சியின் கொள்கை. அதனால்தான் தமிழகம் எல்லா விதத்திலும் பின் நோக்கிப் போய்விட்டது.
ஆனால் முதல்வரைக் கேட்டால், நான் அங்கே விருது வாங்கினேன், இங்கே விருது வாங்கினேன் என்பார். அவருக்கு யாராவது விருது கொடுத்தார்களா? அல்லது விலை கொடுத்து விருதை வாங்கினாரா என்பது பலத்த ஆராய்ச்சிக்குரியது.
இந்த ஆட்சியை மத்திய பாஜக அரசு வேண்டுமானால் பாராட்டலாமே தவிர, வேறு யாரும் பாராட்ட மாட்டார்கள். சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழகத்தின் செயல்பாடுகளை பாராட்டுவதாகச் சொன்னார். மோடி எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்தியாவில்தான் இருக்கிறாரா அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டில் ரகசியமாக வாழ்கிறாரா என்று தெரியவில்லை.
ஒரே ஒரு ஆள் கூட கரோனாவால் பாதிக்கப்பட தமிழக அரசு விடாது என்று சட்டப்பேரவையில் சொன்னார் பழனிசாமி. ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இதற்கு பழனிசாமியின் பதில் என்ன? இதுவரை 7 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பழனிசாமியின் பதில் என்ன? இத்தகைய பழனிசாமியைத்தான் மோடி பாராட்டுகிறார். அவர் ஏன் பாராட்டுகிறார்?
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உலகத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 90 லட்சம் பேர் என்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் 80 லட்சம் பேர். அமெரிக்காவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் என்றால் இந்தியாவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர். இத்தகைய பிரதமர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டாமல் வேறு என்ன செய்வார்?
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் இரண்டு அரசுகளும் மக்கள் விரோத, மக்களுக்குச் சம்பந்தமில்லாத அரசுகளாக இருக்கின்றன என்பதற்கு உதாரணமாக இவர்கள் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகளையும் சொல்ல வேண்டியது இல்லை.
அண்மை காலமாக இவர்களது செயல்பாடுகளால் மக்கள் அடைந்த பாதிப்புகளே போதும்; இவர்களுக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எல்லா விதங்களிலும் மிகமிக மோசமான அரசு தான் இந்த எடப்பாடி பழனிசாமியின் அரசு.
1. தூத்துக்குடியில் அமைதியான வழியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்ற அரசு இந்த அரசு!
2. தனது திறமையின்மையால் 7 லட்சம் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படவும், 11 ஆயிரம் பேர் மரணத்துக்கும் காரணமானது இந்த அரசு!
3. நீலகிரி மலைச்சரிவாக இருந்தாலும், கஜா புயலாக இருந்தாலும் சென்னை மழை வெள்ளமாக இருந்தாலும் எந்த இயற்கைப் பேரிடரிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ, பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையோ முறையாக எடுக்காத அரசு இந்த அரசு!
4. சாத்தான்குளத்தில் தந்தையும் மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு வர்த்தகர்களை அடித்தே கொன்ற அரசு இந்த அரசு!
5. பொள்ளாச்சியில் இளம்பெண்களை அச்சுறுத்தி பாலியல் படங்கள் எடுத்த கும்பலை வெட்கமில்லாமல் காப்பாற்றத் துடித்த ஆட்சி இந்த ஆட்சி!
6. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனரால் விபத்துக்குள்ளாகி இறந்த சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான அரசு இந்த அரசு. கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து அனுராதா என்ற பெண் காலை இழக்கக் காரணமான அரசு இந்த அரசு!
7. தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பிரச்சினை, தேனியில் நியூட்ரினோ, சேலம் எட்டு வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது, மணல் கொள்ளை, கூவம் நதியைச் சுத்தப்படுத்தாமல் திட்டத்தைக் கைவிட்டது. உயர்மின் கோபுரங்களால் வரும் பாதிப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்த பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணாத அரசு இந்த அரசு!
8. முதலாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாகப் பொய் சொன்ன அரசு இந்த அரசு.
இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாகவும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததாகவும் பொய் சொல்லி வரும் அரசு இந்த அரசு!
9. விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், சிறு, குறு தொழில் செய்வோர், பெருந்தொழில் நிறுவனங்கள் என எந்தத் தரப்பும் இந்த ஆட்சியில் நிம்மதியாக இல்லை. அனைவர் நிம்மதியையும் கெடுத்த அரசு இந்த அரசு!
10. மக்கள் நலத்திட்டம் எதையும் கொண்டு வந்து அறிமுகப்படுத்தவில்லை. எந்தத் திட்டங்களில் பணம் கொள்ளையடிக்க முடியுமோ அதை மட்டும் கொண்டு வந்து கொள்ளையடிக்கிறது இந்த அரசு. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் மட்டுமே நோக்கமாகக் கொண்டது இந்த அரசு!
இப்படி இந்த அதிமுக அரசு ஏன் நீடிக்கக் கூடாது என்பதற்கு என்னால் பெரிய பட்டியல் போட முடியும். ஆனால், இந்த ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்பதற்கு அவர்களால் நியாயமான, உண்மையான ஒரு காரணம் சொல்ல முடியுமா?
போலியான பொய்யான புள்ளிவிவரங்களைக் கொடுத்து விருதுகள் வாங்கிவிட்டதாக வெட்கமில்லாமல் முதல்வர் சொல்லிக் கொள்கிறார். ஆனால், உண்மையில் இந்த தமிழ்நாடு அதல பாதாளத்தில் கிடக்கிறது என்பது தான் உண்மை!
பால் ஹாரிஸ் ஃபெலோ விருதை முதல்வர் பெற்றதாக சமீபத்தில் பெரிய அளவில் செய்தி பரப்பப்பட்டது. 2006-ம் ஆண்டு வரை 10 லட்சம் பேர் இந்த விருதை வாங்கி இருக்கிறார்கள் என்றும் 75 ஆயிரத்து 410 ரூபாய் கொடுத்தால் யாருக்கும் இந்த விருதை கொடுப்பார்கள் என்றும் தகவல் வந்தது. இதுதான் எடப்பாடி பழனிசாமி வாங்கிய விருது!
ஆனால், உன்மையான சில கருத்துக்கணிப்புகள் குறித்து இந்த அரசாங்கம் வெளியில் சொல்வது இல்லை.
சி-வோட்டர் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. கரோனா காலத்தில் அதிகம் கவனம் ஈர்த்த முதல்வர் பட்டியலில் கடைசி ஐந்து பேரில் ஒருவராக மிக மோசமான இடம் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி! இதுதான் உண்மையான நிலைமை. இதைப் பார்த்து இந்தியாவே தமிழகத்தைப் பார்த்துச் சிரிக்காதா? இதற்காகத்தான் தமிழகத்தை மீட்டாக வேண்டும் என்கிறோம்!
'மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம் - 2020' அடிப்படையில் எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்னால் வெளியிட்டுள்ளது. இதில் பதினான்காவது இடத்தில் இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி!
அந்தப் பட்டியல்:
1. ஆந்திரப் பிரதேசம்
2. உத்தரப்பிரதேசம்
3. தெலங்கானா
4. மத்தியப்பிரதேசம்
5. ஜார்க்கண்ட்
6. சத்தீஸ்கர்
7. இமாசலப்பிரதேசம்
8. ராஜஸ்தான்
9. மேற்குவங்காளம்
10. குஜராத்
11. உத்தரகாண்ட்
12. டெல்லி
13. மகாராஷ்டிரா
14. தமிழ்நாடு
- என்று பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசுதான்.
எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் பட்டியல் இது. பதினான்காவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க யார் வருவார்கள்? யார் வந்தார்கள்?
கட்டுமான அனுமதி, தொழிலாளர் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல் அணுகல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச்சாளர அனுமதி ஆகிய பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு இந்தப் பட்டியலைத் தயாரித்ததாக மத்திய அரசு சொல்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டவர்கள் யார் தெரியுமா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை இது.
மொத்தமே 18 மாநிலங்களை வைத்துத்தான் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 14-வது இடத்தில் இருக்கிறது தமிழகம். இதைப் பார்த்து இந்தியாவே சிரிக்காதா?
தமிழகம் தொழில் நடத்த உகந்த மாநிலமாக இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? முதல் காரணம், ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் தலைமைப் பிரச்சினைதான்!
முதல்வர் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றால், பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வரமாட்டார்கள். தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்காகத்தான் தமிழகத்தை மீட்டாக வேண்டும் என்கிறோம்! எல்லோரும் அந்தப் பணியில் ஈடுபட போகிறோம்!
தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்துவிட்டது. அதனைத் தட்டிக் கேட்காமல் மாநில அரசு மவுனம் காக்கிறது.
ஒரு காலத்தில் தமிழகம் என்றால் மத்திய அரசும், டெல்லியும் பயப்படும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு, இன்றைய தினம் டெல்லியைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறது.
இந்தி மொழித் திணிப்பா? எவ்வளவு வேண்டுமானாலும் திணித்துக் கொள்!
சமஸ்கிருத மேலாதிக்கமா? எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை!
வேளாண்மைச் சட்டமா? நிறைவேற்றிக் கொள்!
ஜிஎஸ்டி உரிமையா? மத்திய அரசே வைத்துக் கொள்!
புதிய கல்விக் கொள்கையா? கொண்டு வா!
சுற்றுச்சூழல் சட்டங்களா? நிறைவேற்றிக் கொள்!
என்று எல்லா மோசடிகளுக்கும் தமிழ்நாட்டைத் திறந்து விட்டு விட்டது எடப்பாடி பழனிசாமி அரசு!
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளை மத்திய பாஜக அரசு பறிக்கிறது என்றால், அதை வலியப்போய் தூக்கித் தருகிற அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழகத்துக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை துணிச்சலாகக் கேட்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை!
தெலங்கானா முதல்வர், 'எங்களுக்குப் போதிய நிதி உதவி செய்யுங்கள்; இல்லையேல் எங்களுக்குத் தனியே நிதி உருவாக்கும் வாய்ப்பை, அதிகாரத்தையாவது அளியுங்கள்' என்று கேட்டுள்ளார். இப்படி எடப்பாடி பழனிசாமியால் கேட்க முடியுமா?
புதுவை மாநில ஆட்சிக்கு அங்கிருக்கும் ஆளுநர் கிரண்பேடி கொடுக்கும் குடைச்சல்களை நேருக்கு நேராக எதிர்த்து நிற்கிறார் முதல்வர் நாராயணசாமி. பழனிசாமியால் இது முடியுமா?
இலவச மின்சாரத்தையே பறிக்கும் நோக்கத்தோடு புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா வந்ததே? பழனிசாமி எதிர்த்தாரா?
காவிரி நதிநீர் ஆணையத்தினை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆளுகையின்கீழ் கொண்டு போய்விட்டது மத்திய அரசு. இனி காவிரி நதிநீர் ஆணையத்தின் மூலம் எந்தப் பயனும் இல்லை. இதனை எதிர்த்தாரா முதல்வர்?
விவசாயிகளின் ஒரே கோரிக்கை, தங்களது விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதுதான். அதற்குக் கூட உத்தரவாதம் தராத மூன்று சட்டங்களை எல்லாருக்கும் முந்திப் போய் ஆதரித்தார் பழனிசாமி. அப்படியானால் அவரது உண்மையான நோக்கம் என்ன?
மக்கள் எப்படிப் போனால் எனக்கென்ன? எனக்கு ஆட்சி நிலைத்தால் போதும், கொள்ளை தொடர்ந்தால் போதும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாதவர் பழனிசாமி. அவரிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டாமா?
தமிழகம் என்ற கம்பீரமான மாநிலத்தை பாஜக அரசின் பாதத்தில் ஒரு பூனைக்குட்டியைப் போல படுக்க வைத்துவிட்டார் பழனிசாமி. இந்த இழிநிலையை துடைத்தாக வேண்டும். அதற்காகவே தமிழகம் மீட்கப்பட வேண்டும்.
அதனால்தான் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; ஒரு போர் என்று நான் சொன்னேன்.
'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற உயரிய தத்துவத்தை இந்தியாவுக்கு வழங்கிய மண், இந்த தமிழ் மண்! அத்தகைய மண், பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனை மீண்டும் மாநில சுயாட்சி மண்ணாகப் பண்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
'ஆதரித்தாலும் எதிர்த்தாலும் இரண்டிலும் உறுதியாக இருக்கக் கூடியவர் கருணாநிதி' என்று இந்திரா காந்தியால் மதிக்கப்பட்ட கருணாநிதி வாழ்ந்த தமிழகம், இன்றைய ஆட்சியாளர்களால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் பரிதாபத்துக்குரியவை. கருணாநிதி காலத்துக் கம்பீரத்தை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும்!
'இந்தியாவின் தலைநகராக டெல்லி இருந்தாலும், உரிமைகளைப் பெறுவதில் தமிழகம் தலைநகராக இருந்தது' என்று பிரதமர் பொறுப்பில் இருந்த தேவகவுடா கருணாநிதியைப் போற்றிச் சொன்னார். அத்தகைய உரிமைகளின் தலைநகராக மீண்டும் தமிழகத்தை மாற்றிக் காட்ட வேண்டும்.
சமூகநீதித் தத்துவத்தின் தலைநகராக இருந்தது தமிழகம். இன்று சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டும் மனிதர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதனை மீட்டாக வேண்டும்.
கல்வியா, வேலைவாய்ப்பா அனைத்தும் அனைவருக்கும் என்ற சமத்துவம் உலவிய மண் இந்த தமிழ் மண். இந்த மண்ணில் கல்வியும் வேலைவாய்ப்பும் சிலருக்கே போய்ச்சேருவது மாதிரியான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது என்றால் இதனைத் தடுக்க வேண்டாமா?
தொழில் துறையில் கருணாநிதி ஆட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்தது தமிழகம். இன்று அதல பாதாளத்தில் கிடக்கிறது.
இப்போது இவர்கள் உலகத்தில் பல நாடுகளுக்கு படையெடுத்த பிறகும் கூட வர்த்தக நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. இந்தப் பின்னடைவில் இருந்து தமிழகத்தை மீட்டாக வேண்டும்.
'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடியாம்' தமிழ் மக்களின் மானம் காக்க, உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago