மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகள்; அரசு மருத்துவர்களுக்கு 50% உள்இடஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தைத் திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள்இடஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 1) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து, அதனால் இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டுப் பலன் கிடைக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

'உள்இடஒதுக்கீடு செய்து கொள்ளும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது' என்று 31.8.2020 அன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ள நிலையில், மத்திய பாஜக அரசு போட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்கி அரசு மருத்துவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க இதுவரை அதிமுக அரசு முன்வராதது, இந்த அரசு ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு உரிமையையும் எப்படி மத்திய பாஜக அரசின் மிரட்டலுக்குப் பயந்து பறிகொடுத்து வருகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கு முன்பிருந்த இடஒதுக்கீட்டு முறையில் இந்தக் கல்வியாண்டிலேயே இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் வாயிலாக ஏற்கெனவே அதிமுக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டும், அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் 31.8.2020 அன்று அளித்தத் தீர்ப்புக்கு எதிராக 100 விழுக்காடு இடங்களுக்குமே நீட் தேர்வின் அடிப்படையில், மத்திய மருத்துவ சேவைகள் இயக்குநரகம் (DGHS) மூலமாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு கவுன்சிலிங் அறிவித்து, அதற்கான முடிவுகளைக் கடந்த 13.10.2020 அன்றே வெளியிட்டும் விட்டது.

ஆனாலும் இதுபற்றி அதிமுக அரசு வாய் திறக்காமல் மவுனியாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக அரசு மருத்துவர்களுக்கு, முன்னர் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் இடங்கள் 50 விழுக்காடு வழங்கும் ஒரு நல்வாய்ப்பை முதல்வர் பழனிசாமியும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கோட்டை விட்டு, தங்களின் மீதான ஊழலுக்குப் பயந்து அஞ்சி நடுங்கிப் போயிருக்கிறார்கள்.

அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுப்பதால் அவர்கள் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர்சிறப்புச் சிகிச்சை அளித்தால், அது ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் என்பதை எடப்பாடி பழனிசாமி ஏன் இன்னும் உணரவில்லை?

திமுக ஆட்சிக்கு வந்தால், அகில இந்தியத் தொகுப்பு முறையை மருத்துவப் படிப்புகளில் ரத்து செய்து, தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும், தமிழக மாணவர்களுக்குப் பயன்படும் விதமாக வழி வகை செய்யப்படும்.

ஆனால், தற்போது இழந்த மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு உள்ஒதுக்கீடு உரிமையை எடப்பாடி பழனிசாமி மீட்டெடுக்காமல் மத்திய அரசுடன் இணக்கமாகப் பயந்து செல்வதேன்?

ஆகவே, அரசு மருத்துவர்களுக்கு 2016-க்கு முன்பு வரை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பாஜக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது சமூகநீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி என்றும், அந்த நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்