1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து இன்றுடன் 64 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்த போது, இங்குள்ள தமிழர்கள் பலவகையிலும் வஞ்சிக்கப்பட்டனர். சாதிய பாகுபாடுகள் கடுமையாக இருந்த காலக்கட்டம் அது. மன்னருக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவமும், நிலங்களும் வழங்கப்பட்டது. அடுக்கடுக்காய் வரிகள் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட சமூக பெண்கள் மேல் சேலை அணியக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.
முத்துக்குட்டி சுவாமி, நாராயணகுரு, அய்யங்காலி ஆகியோர் தொடக்க நிலை ஆன்மீக களப்போராளிகள். முத்துக்குட்டி சுவாமி, சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு வெட்டி சாதி பாகுபாட்டை ஓரம் கட்டினார். இடுப்பில் துண்டு கட்டியவர்களை தலையில் துண்டைக் கட்ட வைத்தார்.
ஆதிக்க, அடக்கு முறைக்கு எதிரான போராட்டம் மார்ஷல் நேசமணியால் பெருந்தீயாக பரவியது. கேரளாவில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்து, போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள் டி.கே.நாராயணப்பிள்ளை, பொன்னரை ஸ்ரீதர், கேளப்பன், சகோதரன் ஐயப்பன், பனம்பள்ளி கோவிந்த மேனன், குளத்தில் வேலாயுத நாயர் ஆகியோர் குமரியை தமிழகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராடினார்கள். அவர்கள் கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரை ஐக்கிய கேரளம் எனவும் அறிவித்தனர். தமிழகத்தில் ம.பொ.சியும் திருத்தமிழர் போராட்டத்தை முன்னெடுத்தார்.
» அமைச்சர் துரைக்கண்ணு மறைவு; விவசாயிகளுக்கு மிகப்பெரிய பேரிழப்பு: பி.ஆர்.பாண்டியன் இரங்கல்
பி.சிதம்பரம் பிள்ளை, வேலாயுதப் பெருமாள் பிள்ளை, நாகலிங்கம், ஸ்ரீதாஸ், ஷாம் நந்தானியேல், தாமரைக்குளம் வேலாயுதம், காந்திராமன், கடுக்கரை வேலப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராம், டி.எஸ்.மணி, கொச்சு மணி, சி.சங்கர் ஆகியோர் தீவிரமுடன் களம் கண்டனர்.
நேசமணி தலைமையில் தீவிரப்பட்ட போராட்டம் தமிழகத்துடன் குமரியை இணைய வைத்தது. சிதம்பரநாதன் நாடார், ரசாக் எம்.பி., பி.எஸ்.மணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார் என, பலரது போராட்டம் இதில் குறிப்பிடத்தக்கது.
மொழிவாரி மாநில பிரிப்பின் பிண்ணணியில், குமரி இணைப்புப் போராட்டம் வலுப்பெற்றது. 1948-ல் குமரி மாவட்டம் மங்காடு பகுதியில் குமரி உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேரளக் காவலர்கள் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மங்காடு தேவசகாயம், பைங்குளம் செல்லையன் ஆகியோர் பலியானார்கள்.
பீர்மேடு, மூணாறு, தேவிகுளம் என தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. நேசமணி தலைமையில் பீர்மேட்டுக்கே சென்ற போராட்டக்காரர்கள் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க கோஷமிட்டனர். மூணாறு பகுதியில் எஸ்.எஸ்.சர்மா, குப்புசாமி, தேவியப்பன் தலைமையில் போராட்டம் தீவிரமடைந்தது. 1954 ஜூலை மாதம் மூணாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் என பலரும் மூணாறுக்குச் சென்று தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர்.
1954 ஆகஸ்ட் 11 தினத்தை விடுதலை தினமாக அறிவித்தது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். அன்றைய தினம் மார்த்தாண்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி எம்.பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதேபோல், புதுக்கடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேர் பலியானார்கள்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் 9 தாலுகாக்களை இணைக்கக்கோரி நடைபெற்றதுதான் இந்த திருத்தமிழர் போராட்டம். அதில் கேட்டபடி தேவிகுளமும், பீர்மேடும் இணைக்கப்பட்டிருந்தால் இப்போது முல்லைப் பெரியாறு போராட்டம் நடந்திருக்காது. குமரி மாவட்டத்தின் நான்கு தாலுகாக்களும், செங்கோட்டை தாலுகாவுமே தமிழகத்துடன் இணைந்தது.
அரசு மரியாதையும்... ஒரு வருத்தமும்!
நாகர்கோவிலில் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையப்பாடுபட்ட மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் மார்ஷல் நேசமணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணைந்த தினத்துக்கு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், குமரி இணைப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்காக மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு நடந்துவந்த பாலப்பணியை முன்னிட்டு அதை அங்கிருந்து எடுத்த அதிகாரிகள் அது பொருத்தமான இடத்தில் பாலப்பணி முடிந்ததும் வைக்கப்படும் என உறுதியளித்தனர். பாலப்பணி முடிந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்னும் அந்த நினைவு ஸ்தூபி உரிய இடத்தில் வைக்கவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago