மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

அண்ணாவின் படத்தைக் கொடியில் போட்டு, கட்சியின் பெயரில் வைத்து, அண்ணாவின் கொள்கை பற்றி விமர்சிக்கும் அமைச்சர் ஜெயக்குமாரையும் அமைச்சரவையில் வைத்துக்கொண்டு எதற்கு ஆட்சி? அண்ணாவின் பெயரை நீக்கிவிடுங்கள் என காஞ்சிபுரம் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

இன்று, காஞ்சிபுரம் வடக்கு - தெற்கு மாவட்ட திமுக சார்பில், நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றியதாவது:

“இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி இருக்கிறது. அந்த ஆட்சியை நடத்தும் கட்சியின் பெயர் அதிமுக. அக்கட்சியின் கொடியில் அண்ணா படம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் அண்ணாவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால், அறவே இல்லை என்பதுதான் உண்மை.

சில நாட்களுக்கு முன்னால் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாவையே விமர்சித்து பேட்டி கொடுத்தார். “ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?” என்று கேட்டார் அண்ணா. இது எங்களுடைய கொள்கை அல்ல; அது அண்ணாவோடு முடிந்துவிட்டது” என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார்.

அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக் கொண்டு, அண்ணாவின் படத்தை கொடியில் போட்டுக் கொண்டு நடக்கும் ஒரு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சொல்லி இருக்கிறார், அது அண்ணாவோடு முடிந்து விட்டது என்கிறார். இதை விட அண்ணாவுக்குத் துரோகம் என்ன இருக்க முடியும்?

பத்து நாள் ஆகிவிட்டது. இதற்கு அதிமுக சார்பில் ஏதாவது விளக்கம், மறுப்பு வருமா என்று பார்த்தேன். வரவில்லை. அண்ணா பெயரை கட்சியின் பெயரில் இருந்து நீக்கிவிட்டு, கொடியில் இருந்து படத்தை நீக்கிவிட்டு, அண்ணா காலத்தோடு முடிந்துவிட்டது என்று ஜெயக்குமார் சொல்லட்டும். அது பற்றி நான் கவலைப்படவில்லை. அண்ணாவின் பெயரையும் பயன்படுத்திக் கொண்டு பாஜகவின் பாதம் தாங்கிகளாக எதற்காக குப்புற விழுந்து கிடக்க வேண்டும்?

தமிழ்நாடு என்று சட்டப்பேரவையில் பெயர் சூட்டிய அன்று அண்ணா “நான் தீட்டிய திட்டங்கள் இந்த நாட்டில் தொடரும் வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்றார். அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் உணர்வில், உள்ளத்தில், ரத்தத்தில் இரண்டறக் கலந்துவிட்டவர் பேரறிஞர் அண்ணா. அவரது காலத்தோடு அது முடிந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது, அவரது அடிமைத்தனத்தைக் காட்டுகிறது.

அண்ணாவின் இறுதி லட்சியமாக இருந்தது மாநில சுயாட்சிக் கொள்கை ஆகும். மறைவுக்கு முந்தைய மாதம் அவர் அதிகம் எழுதியதும் மாநில சுயாட்சியைப் பற்றித்தான். எனவே, மாநில சுயாட்சி என்பது அண்ணாவின் உயில் என்று சொல்லப்படுகிறது. அந்தக் கொள்கைக்கு உலை வைக்கும் ஆட்சிதான் இன்றைய அதிமுக ஆட்சி.

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் அனுமதி தராமல் மவுனம் காத்தார். ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதா என்னாயிற்று என ஆளும் கட்சி கவலைப்படவில்லை. அப்போதெல்லாம் அமைதியாக இருந்தார்கள்.

நம்மால் அப்படி இருக்க முடியுமா? மருத்துவக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு சேர முடியாமலே போய்விடும்தானே! அதனால், ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன். அவர் மேலும் 4 வாரங்கள் ஆகும் என்று பதில் எழுதினார். ஏற்கெனவே 4 வாரங்கள் கடந்துவிட்டதால், உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி திமுக சார்பில் போராட்டம் நடத்தினோம்.

அதுமட்டுமின்றி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்.பி.க்கள் அனைவரும் தனித்தனியாகக் கடிதம் அனுப்பினார்கள்.

இப்படிப் பல்வேறு வகையில் திமுக கொடுத்த அழுத்தத்தாலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் விடுத்த வேண்டுகோளாலும், ஆளுநர் 45 நாள் தாமதத்திற்குப் பிறகு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். இறுதியில் வென்றது சமூக நீதிதான்.

இது ஏழை மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், ஆளும்கட்சியோடு சேர்ந்து போராட்டம் நடத்துவதற்குத் தயார் என்று கூட அறிவித்தேன். உடனே, ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர்கள் எல்லாம் பேட்டி கொடுத்தார்கள். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து ஒரு மசோதாவுக்குக் கையெழுத்துப் போட வலியுறுத்தினால், ஆளுநர் உடனடியாகச் செயல்படுவார் என்ற நோக்கத்தில்தான் சேர்ந்து போராட்டம் நடத்தலாம் என்று சொன்னோமே தவிர, அதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.

அண்ணா எதிர்க்கட்சி வரிசையிலே உறுப்பினராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி, தமிழகத்தை ஆட்சி செய்தது. அன்றைய மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டு பேரறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் பேசினார். வாதாடினார். அன்றைய அரசுக்கு ஒரு அறிவுரையைச் சொன்னார்.

''நான் வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் மத்திய அரசுக்குச் சொல்லுங்கள். இப்படி ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லி மத்திய அரசிடம் வாதாடி தமிழக உரிமைகளை மீட்டுத் தாருங்கள். எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அண்ணா சட்டப்பேரவையில் பேசினார்.

அதைப் போல எங்களைக் காட்டி மத்திய அரசிடம் போராடுங்கள் என்றுதான் நானும் சொல்கிறேன்.

ஆனால், அதிமுக அரசுக்கு அத்தகைய அக்கறை கிடையாது. அவர்களுக்குக் கொள்ளை என்ற ஒன்றைத் தவிர வேறு கொள்கை கிடையாது. சும்மா ஒப்புக்கு ஒரு அறிக்கை விடுவார்கள், தீர்மானம் போடுவார்கள், வழக்குப் போடுவார்கள், மசோதா கொண்டு வருவார்கள் - ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.

மருத்துவக் கல்விக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசும் சொல்லிவிட்டது. உச்சநீதிமன்றமும் தீர்ப்பாக அளித்துவிட்டது. ஆனால் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது அதிமுக அரசு. இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று வழக்குப் போட்டார்களே தவிர, இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த குழுவில் அதிமுக அரசு வாதிடவில்லை.

இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று சொன்ன மத்திய அரசை அதிமுக அரசு எதிர்க்கவில்லை; கண்டிக்கவில்லை. அதனால் தான் உச்சநீதிமன்றமும் இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டது.

ஆனால் திமுக இதனை வேடிக்கை பார்க்கவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துக என்று பிரதமருக்கு நான் கடிதம் அனுப்பி உள்ளேன். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்பதற்காக உருவான இயக்கம் தான் திமுக.

பெரியார் , “தமிழக மக்களின் கண்ணைத் திறந்தார் காமராசர். தமிழக மக்களை திமுக அரசு எழுந்து நடக்க வைக்க வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தார். அதன்படிதான் திமுக அரசு தமிழகத்தை ஆட்சி செய்த ஐந்து முறையும் நடந்து காட்டியது. திமுக ஆட்சி மலரும் போதெல்லாம் விவசாயிகள் முகம் மலரும்; அரசு ஊழியர் முகம் மலரும்; ஒடுக்கப்பட்ட மக்களது முகம் மலரும். அந்த மலர்ச்சிக்கான திட்டங்களைத்தான் தலைவர் கருணாநிதி தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே கொடுத்தார்.

Ø விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.

Ø நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.

Ø விவசாயக் கடன்கள் ரத்து.

Ø அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள்.

Ø மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்.

Ø திருநங்கைகள் நலவாரியம்.

Ø கிராமங்களில் நமக்கு நாமே திட்டம்.

Ø அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.

Ø சமத்துவபுரங்கள்.

Ø மினி பஸ்

Ø உழவர் சந்தைகள்

Ø முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவிகள், சலுகைகள்.

Ø குடிசை மாற்று வாரியம்.

Ø தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு எண்ணிக்கை உயர்வு.

Ø மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி இட ஒதுக்கீடு.

Ø சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு.

Ø பெண்களுக்கு சொத்தில் பங்கு.

Ø அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

- இப்படி ஒடுக்கப்பட்ட மக்களது ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திருந்தது.

ஒரு தாய் தனது பிள்ளைகளைக் கவனிப்பது போலக் கவனித்தார். அவரது ஆட்சியில் இதை மட்டும்தான் செய்தார். இதைப் பற்றிக் கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைத்துத் துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார் முதல்வர் கருணாநிதி.

தலைவர் ஆட்சியின் தொழில் வளர்ச்சிக்கு வேறு எங்கும் ஆதாரங்களைத் தேடிப் போக வேண்டியது இல்லை. சென்னையில் இருந்து பூந்தமல்லியைத் தாண்டி, சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூரைத் தாண்டி, சென்னையில் இருந்து தரமணியைத் தாண்டி, சென்னையில் இருந்து பெருங்குடி தாண்டிப் போகும்போது நீங்கள் பார்க்கும்போது கண்ணில் படும் பெரும்பாலான தொழிற்சாலைகள் அவர் ஆட்சியில் அமைக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

தலைவர் காலம் தொழில்மயமாக்கலின் பொற்காலம் என்று சொல்வதற்கான உதாரணம் நான் இப்போது சொன்ன இடங்கள். அவர் முத்தமிழறிஞர் மட்டுமல்ல; தொழில்மயமாக்களின் சிற்பி. இந்திய மாநிலங்களில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமநிலையோடு மேம்பட்டு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என மாற்றிக்காட்டியவர் அவர்.

சில நாட்களுக்கு முன் ஒரு புள்ளிவிவரம் வெளியானது. மத்தியில் மோடி ஆட்சி வந்த பிறகு ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக் கூட அவர் உருவாக்கவில்லை என்று அந்தச் செய்தி கூறுகிறது. ஆனால், திமுக ஆட்சியில்தான் அதிகமான அளவு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

Ø தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம்

Ø தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம்

Ø சதர்ன் ஸ்டிரக்சுரல்ஸ்

Ø தமிழ்நாடு கனிம நிறுவனம்

Ø தமிழ்நாடு உப்பு நிறுவனம்

Ø தமிழ்நாடு மின்னணு நிறுவனம் – எல்காட்

Ø தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்

Ø தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் - சிப்காட்

- இப்படி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கிய ஆட்சி, திமுக ஆட்சி.

அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டதும், அதன் மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதும் திமுக ஆட்சியில் தான். இன்றைக்கும் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பாக இயங்கும் சிப்காட்களைப் பார்க்க முடிகிறது என்றால் அதற்கும் தலைவர் கருணாநிதிதான் காரணம். 1996-களிலேயே 8 துறைகளின் கீழ் அனுமதி பெற்று ஆரம்பிக்கும் தொழிலை ஒரே விண்ணப்பத்தில் பெறலாம் என தொழிற்துறை வளர ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தித் தந்தார் தலைவர். அதுதான் தமிழகத்தை இந்த அளவுக்கு வளர்த்துள்ளது.

ஆனால், இன்றைக்கு தொழில் வளர்ச்சியும் இல்லை, புதிய தொழிற்சாலைகளும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை. மொத்தத்தில் தமிழகம் பல்வேறு துறைகளில் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. இந்தப் பத்தாண்டு காலத்தில் தமிழகம் பெரும் பள்ளத்தில் வீழ்ந்துவிட்டது.

ஆனால், இவை எது பற்றியும் தமிழ்நாடு முதல்வர் பழனிசாமிக்குக் கொஞ்சம் கூட கவலையே இல்லை. உண்மையைச் சொன்னால் அவர் ஜாலியாக இருக்கிறார். நாம் மறுபடி ஆட்சிக்கு வரப்போவது இல்லை. இருக்கும் ஆறு மாதத்தை நன்றாக அனுபவிக்கலாம் என்று எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்.

கஜா புயல் தாக்கியபோது மக்களை உடனே வந்து பார்த்தாரா? எங்கே போனார் எடப்பாடி? ஆளைக்காணோம், ஆளைக்காணோம் என்று சொன்ன பிறகு ஹெலிகாப்டரில் வந்து போனார். நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது வந்து பார்த்தாரா? இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னாரா? இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட வீட்டுக்கு போனாரா? இல்லை.

நீட் தேர்வின் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னாரா? இல்லை. அதிமுகவினர் வைத்த கட் அவுட் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ வீட்டுக்குச் சென்றாரா? இல்லை. அதிமுகவினர் வைத்த கட் அவுட் விழுந்ததால் கால் ஒடிந்த அனுராதாவைப் போய் பார்த்தாரா? இல்லை.

என்ன செய்தார் எடப்பாடி? இதெல்லாம் நமது வேலை இல்லை என்று நினைக்கிறார். “நாடும் நாட்டு மக்களுக்கும் நாசமானால் நமக்கென்ன" என்று நினைக்கக் கூடியவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். மக்களால் அவர் முதல்வர் ஆனவர் அல்ல. அதனால் மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கு இல்லை.

ஆனால் நம்மை, அண்ணாவோ, தலைவர் கருணாநிதியோ அப்படி வளர்க்கவில்லை. கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது உடனே மக்களைப் பார்க்க ஓடி வந்தேன். ஒரு முறையல்ல ஐந்து முறை சென்றேன். தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட்டார்கள். கலவர பூமியான அந்த இடத்துக்கு உடனே போனேன். அனிதா தற்கொலை செய்து கொண்டார். உடனே அவரது இல்லம் சென்றேன்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு மறுத்தபோது காவிரி டெல்டா பகுதிக்கு காவிரி மீட்புப் பயணம் மேற்கொண்டேன். கோவையில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உடனே அவரது வீட்டுக்குச் சென்றேன். எல்லையில் நமது வீரர்கள் இருவர் கொல்லப்பட்டார்கள். அவர்களது இல்லத்துக்குச் சென்று ஆறுதல் சொன்னேன். இதுதான் அண்ணா காட்டிய பாதை! இதுதான் தலைவர் காட்டிய பாதை.

தமிழ்நாட்டில் எந்தப் பகுதிக்கும், எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் மக்களைச் சந்திக்கும் துணிச்சல் எனக்கு உண்டு. ஏனென்றால் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களின் குரலை எதிரொலித்தோம். ஆளும்கட்சியாக இருந்தபோதும் மக்களின் கனவை நிறைவேற்றினோம். இந்தக் கரோனா காலத்திலும் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான மக்களின் தேவையை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தோம்.

நாம் ஆட்சியில் இல்லை என்று அமைதியாக இருந்திருக்க முடியும். ஆனால், மக்கள் துன்பப்படும்போது அதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் இயக்கம் நாம் அல்ல. நம்மால் அப்படி இருக்க முடியாது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்க்கு உணவுப் பொருள்கள் கொடுத்தோம். வீடுகள் இல்லாதவர்களுக்கு உணவைத் தயாரித்துக் கொடுத்தோம். ஆட்டோ டிரைவர்கள் போன்றவர்களுக்கு நிதி வழங்கினோம். ஒரு அரசியல் இயக்கம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக நாம் செயல்பட்டுக் காட்டினோம்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? எதுவும் செய்யவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி கொடுங்கள் என்று சொன்னேன். அதைக்கூடச் செய்யவில்லை. அதற்கு கூட அவருக்கு மனமில்லை.

ஆனால், கரோனா தடுப்பூசி வந்தால் அதனை இலவசமாகப் போடுவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்கு அவருக்கு வெட்கமாக இல்லையா? மக்கள் கரோனா பீதியில் இருக்கும் போது இலவச தடுப்பூசி போடுவேன் என்பது மக்களது பயத்தை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கொடூரம் அல்லவா இது? கரோனாவை விட இது கொடூரம் அல்லவா?

இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கப்படவில்லை. எப்போது கண்டுபிடிக்கப்படும்? தெரியாது! எப்போது சோதனை செய்யப்படும்? தெரியாது! எப்போது உற்பத்தி செய்யப்படும்? தெரியாது! இத்தனை கோடிப் பேருக்கான தயாரிப்பு எப்போது முடியும்? தெரியாது! ஒரு தடுப்பூசி விலை என்ன? தெரியாது! இதனை மத்திய அரசு போடப்போகிறதா? தெரியாது! மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப் போகிறார்களா? தெரியாது. ஆனால் ஊசி இலவசம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.

மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையைக் கூட விலை பேசுகிறார் பழனிசாமி. முதல்வர் பதவியை விலை கொடுத்து வாங்கியவர் அப்படித்தான் பேசுவார். 'பாஜகவுக்கு வாக்களித்தால் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும்" என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிஹார் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்கிறார். அவருக்கும் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது.

லட்சம், கோடி என்று சொல்வாரே தவிர, சில நூறு ஆயிரங்கள் கூட சாமானியர் குடும்பத்துக்கு இதுவரை வந்து சேர்ந்ததாகத் தகவல் இல்லை. இப்படி மக்களுக்காக எதுவும் செய்ய மனமில்லாதவர்கள் தான், கரோனா தடுப்பூசி இலவசம் என்பது போன்ற கொடூரமான வாக்குறுதிகளைச் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள்.

கரோனாவை விடக் கொடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கோட்டையில் இருக்கும் கொள்ளையர் கூட்டத்தை விரட்டியாக வேண்டும். பத்தாண்டு கால பாதாளத்தில் இருக்கும் தமிழகத்தை மீட்டாக வேண்டும். அண்ணாவின் ஆட்சியை அமைத்தாக வேண்டும். தலைவர் கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும்.

அதற்கு நாம் அனைவரும் முன்பைவிட வேகமாக உழைத்தாக வேண்டும். அவரின் உடன்பிறப்புகள் நாம் என்பதை நிரூபித்தாக வேண்டும். நிரூபிப்போம். ‘பொல்லாத ஆட்சியை ஒழித்து பொற்கால ஆட்சியை அமைப்போம்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்