தமிழ்நாடு நாள்; நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதில் தொடர்ந்து பாடுபடுவோம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

By செய்திப்பிரிவு

தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதில் தொடர்ந்து பாடுபடுவோம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 31) வெளியிட்ட 'தமிழ்நாடு நாள்' வாழ்த்துச் செய்தி:

"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இது நீ கருதினை ஆயின்

என்று சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தில் இளங்கோவடிகள் இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களையும் வேலியாகக் கொண்டு விளங்கும் தமிழ்நாடு என்று குறிப்பிடுகிறார்.

தமிழின் தலைசிறந்த இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், 'நம் நாடு யாது என்றால் தமிழ் நாடு என்றல்' என்ற ஒரு வாக்கியத்தில் 'தமிழ்நாடு' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது.

மொழிக்காகப் பல காலகட்டங்களில் நம் முன்னோர்கள் நடத்திய போராட்டங்களால் மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தபோது, தமிழ் பேசும் பகுதி 1.11.1956 ஆம் ஆண்டு தனியாகப் பிரிக்கப்பட்டு மெட்ராஸ் மாநிலம் என ஆனது. இத்தகைய தனித்தன்மைமிக்க நிலப்பரப்புக்கு அண்ணாவால் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்று முதல் 'தமிழ்நாடு' எனும் பெயர் உலகெங்கும் ஒங்கி ஒலிக்கிறது.

அதற்கென அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய தமிழர்களின் போராட்ட வரலாற்றை நினைவுகூரவும், அந்தப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சான்றோர் பெருமக்களை நினைந்து போற்றவும், அவ்வகையில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளினைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில், 'தமிழ்நாடு நாள் விழா' சென்ற ஆண்டு 1.11.2019 முதல், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அண்ணாவைத் தொடர்ந்து எம்ஜிஆரால் திருவள்ளுவர் விழா கொண்டாடவும், அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிட்டு எழுதும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. நம் தாய்த் தமிழ் மொழிக்கென ஒரு பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் நிறுவியது, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு அடிக்கல் நாட்டியது எனத் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கு உரியதாகும்.

அவரைத் தொடர்ந்து, ஜெயலலிதாவால் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு மீட்டெடுக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் கொண்டாடப்பட்டு வருவது, எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தியது, தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7 விருதுகளை 55 விருதுகளாக உயர்த்தி வழங்கியது, சங்க தமிழ்க் காட்சிக் கூடத்தை மதுரையில் நிறுவியது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தரம் உயர்த்தியது முதலான அளப்பரிய பணிகள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பனவாகும்.

உலகத் தமிழர்களின் காவல் தெய்வம் நெறியைப் பின்பற்றி, ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சித் திட்டங்கள், தமிழ் நல் உள்ளங்கள் போற்றும் வகையில் சீரும் சிறப்புமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் சில:

(i) அயல் நாடுகளில் தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கத்துடன், அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு மற்றும் ஹுஸ்டன் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ் இருக்கை நிறுவுவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

(ii) பிறநாட்டு இலக்கியப் படைப்புகளைத் தமிழ்மொழியில் கொண்டு வரவும், நம் நாட்டு இலக்கியங்களைப் பிறமொழியில் படைத்திடவும் பாடுபட்டு வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் 'மொழிபெயர்ப்பாளர் விருது' வழங்கப்பட்டு வருகிறது.

அயல்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழறிஞர்களின் சிறந்த படைப்புகளைப் போற்றும் வண்ணம் ஆண்டுதோறும் 'உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்' வழங்கப்பட்டு வருகின்றன.

(iii) எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும், அவர்தம் மரபுரிமையர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

(iv) தொல்காப்பியருக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் சிலை நிறுவப்பட்டது. தொல்காப்பியத்தின் பெருமையை விளங்கச் செய்யும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'தொல்காப்பியர் ஆய்விருக்கை' அமைக்கப்பட்டது.

(v) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் ஆய்விருக்கை நிறுவ ஆணையிடப்பட்டது.

(vi) சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித்தலைவர் சமூகவியல் கலை மேம்பாட்டு ஆய்விருக்கை நிறுவப்பட்டது.

(vii) சங்ககாலப் புலவர்களின் இருப்பிடங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் நினைவுத்தூண்கள் நிறுவப்படுகிறது.

(viii) அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் மற்றும் புதிய சொற்களுக்கு தகுந்த தமிழ்ச் சொற்களை உருவாக்க சொற்குவைத் திட்டம் தொடங்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இதுவரை 20 ஆயிரம் சொற்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

(ix) 8,050 பக்கங்களில், 7 மடலங்களாக செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதிகள் திருந்திய பதிப்பாக விரைவில் வெளியிடப்பட உள்ளன.

(x) தமிழ்ச்சாலை என்னும் செயலி உருவாக்கப்பட்டு, பெரும்பாலான தமிழ் அறிஞர்களாலும், மாணவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருவதை அனைவரும் அறிவர்.

அண்ணா, 'தமிழ் தன்னையும் வாழ வைத்துக்கொண்டு பிற மொழிகளையும் வளர்த்தெடுக்கும் ஆற்றலைப் பொருந்திய மொழி' என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அவர்தம் வழியில் நாம் நமது அடையாளமாகப் பெற்றிருக்கின்ற தமிழ் எனும் உன்னதச் செல்வத்தை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் என்கின்ற உறுதிமொழியோடு அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்