தியாகதுருகம் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் தாய், குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவர்கள், செவிலியர் மீது கடும் நடவடிக்கை தேவை எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 31) வெளியிட்ட அறிக்கை:
"கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், கருவுற்ற பெண்ணும், குழந்தையும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிருக்குப் போராடிய இளம்பெண்ணைக் காப்பாற்றுவதில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியது கண்டிக்கத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம். நிறைமாத கர்ப்பிணியான கற்பகத்துக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக தியாகதுருகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காலை 7.30 மணிக்கு சேர்க்கப்பட்ட அவர், கடுமையான வலியில் துடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களோ, செவிலியர்களோ எந்த மருத்துவமும் அளிக்கவில்லை. கடுமையான வலி இருந்தாலும், குழந்தை பிறக்க நேரமாகும் என்று கூறிவிட்டு செவிலியர்கள் சென்று விட்டனர். மருத்துவர்களோ கற்பகம் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
» 'பாஜகவின் மதவெறி சக்தியையும், பிளவுபடுத்தும் சக்தியையும் முறியடிக்க வேண்டும்': ஆர்.நல்லகண்ணு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கற்பகம் செவிலியர் பட்டம் பெற்றவர் ஆவார். அந்த அனுபவத்தில் தம்மால் வலி தாங்க முடியவில்லை என்றும், தமக்கு அறுவை சிகிச்சை செய்வதாவது குழந்தையை வெளியில் எடுக்கும்படியும், முடியாவிட்டால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பும்படியும் மன்றாடியிருக்கிறார்.
ஆனால், அவரது வேதனைக் குரல்களை மருத்துவர்களோ, செவிலியர்களோ கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் மாலை 4.30 மணி வரை குழந்தை பிறக்காத நிலையில், கற்பகத்தின் வயிற்றை முரட்டுத்தனமாக அழுத்திக் குழந்தையை வெளியில் எடுக்க செவிலியர்கள் முயன்றுள்ளனர். இந்த முயற்சியில் குழந்தை இறந்து கருப்பையுடன் வெளியில் வந்தாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மிகக்கடுமையான உதிரப்போக்குடன் கற்பகம் உயிருக்குப் போராடியிருக்கிறார். அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பும்படி அவரது குடும்பத்தினர் கெஞ்சியுள்ளனர். ஆனால், அவற்றை மருத்துவர்களும், செவிலியர்களும் கண்டுகொள்ளவில்லை. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்படுத்திய பிறகு தான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களில் கற்பகம் இறந்து விட்டார்.
தியாக துருகம் மருத்துவமனைக்கும், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கும் இடையிலான பயண நேரம் வெறும் 10 நிமிடங்கள் தான். குழந்தை இறந்த போதே கற்பகத்தை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தால் குறைந்தபட்சம் தாயையாவது காப்பாற்றியிருக்கலாம்.
ஆனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் தாய், சேய் இருவருமே உயிரிழந்துள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை நான் அறிவேன். கரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் தங்களின் இன்னுயிரை நீத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
ஆனால், தியாகதுருகம் மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவர்களுக்கான அர்ப்பணிப்பு... அவ்வளவு ஏன் மனிதர்களுக்கான மனித நேயம் கூட இல்லாமல் இரு உயிர்களை பலி கொடுத்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சையின் போது தவிர்க்க முடியாமல் உயிரிழப்பு ஏற்படுவது வேறு... ஆனால், உயிருக்குப் போராடிய பெண் தன்னை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சியும், சிறிதும் இரக்கம் காட்டாமல், அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்தவர்களை சிறிதும் மன்னிக்கக்கூடாது; தப்பவிடக் கூடாது.
கற்பகம் மற்றும் அவரது சிசுவின் சாவுக்குக் காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது குடும்பத்தினரும், அவர்களுக்கு ஆதரவாக பாமகவினரும் இன்று காலை போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சதீஷ்குமார் பேச்சு நடத்தினார். அவருடன் நானும் தொலைபேசியில் பேசி இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவரும் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக என்னிடம் உறுதியளித்தார்.
அதன்படி, கற்பகம் மற்றும் அவரது குழந்தையின் சாவுக்குக் காரணமான தியாகதுருகம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்; அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பகத்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago