மதுரையில் மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக நிதி ஒதுக்கியும், ஆதரவாளர்களிடம் நிதி பெற்றும் தூர்வாரிய ஊரணி, குளங்களில் தற்போது மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்களின் ஒரே குடிநீர் ஆதாரம் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையை நம்பியிருக்கிறது.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் நீர் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் மதுரையில் பெரும்பாலான இடங்களில் 1000 அடிக்கு கீழ் சென்றது.
வைகை அணையில் நீர் ஆதாரம் குறைந்துவிட்டதால் மதுரை நகரில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கிறது. அதனால், நகர்ப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத அவலம் ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் நகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக நிதி ஒதுக்கியும், தனியார் நிறுவனங்களின் ஸ்பான்ஸர் பெற்றும் குளங்கள், ஊரணிகளை கடந்த ஓராண்டாக தூர்வாரி மழைநீர் தேக்குவதற்கான பணிகளை மேற்கொண்டது.
மாநகராட்சியின் பெரும் முயற்சியால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டது. அதே போன்று தல்லாகுளம் திருமுக்குளத்தில் மழைநீர் சேகரிப்பு செய்வதற்காக மழைநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தடையின்றி இந்த குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டவுண்ஹால் ரோடு தெப்பக்குளத்தில் 60 ஆண்டிற்கு பிறகு மழைநீரினை சேகரிக்கும் வகையில் ரயில்வே நிலையம், கட்டபொம்மன் சிலை வடக்கு புறம், தங்கரீகல் தியேட்டர் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீர் சாலைகளில் தேங்காமல் குழாய்கள் மூலம் இந்த தெப்பக்குளத்திலும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால், தற்போது பெய்யும் வடகிழக்குப் பருவமழையால் சாலைகளில் மழைநீர் தேங்காமல் டவுன்ஹால் தெப்பக்குளத்திலும், தல்லாகுளம் திருமுக்குளத்திலும் மழைநீர் சேகரிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 33 ஊரணிகள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக கோசாகுளம் ஊரணி, சிலையனேரி ஊரணி, கோட்டங்குளம் ஊரணி, கம்பன் ஊரணி, உத்தங்குடி ஊரணி, முத்துப்பட்டி கல்தார் ஊரணி, சூராவளிமேடு ஊரணி, மானகிரி ஊரணி, திருப்பாலை வண்ணான் ஊரணி, அனுப்பானடி சொக்காயி ஊரணி, மாட்டுத்தாவணி சாத்தையாறு ஊரணி, மிளகரணை ஊரணி, திருப்பாலை கம்பன் ஊரணி, உலகனேரி குட்டம் ஊரணி, மஸ்தான்பட்டி ஊரணி ஆகிய ஊரணிகள் தூர்வாரப்பட்டு தற்போது பெய்யும் மழைநீர் இந்த நீர்நிலைகளில் சேகரிக்கப்படுகிறது.
அதே போன்று மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கும் இடங்களாக 280 இடங்கள் கண்டறியப்பட்டு அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டும், உபயோகமற்ற நிலையில் இருந்த 412 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டும் மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையினால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து ஆழ்துளை கிணறுகளில் தங்குதடையின்றி தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago