மாநில உரிமைகள் கடுமையான சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1 ஆம் நாளில், நாம் தமிழ்மொழி - இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்திட உறுதியேற்போம் என ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தினுடைய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்குபவை மொழிவாரி மாநிலங்கள். இந்தியா விடுதலை பெற்றபோதே, மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர் ஈந்ததை அடுத்து, 1953-ல் ஆந்திரா என்கிற தனி மாநிலம், தெலுங்கு பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழும் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள், தங்கள் தாய்மொழியின் அடிப்படையில், மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியதையடுத்து, 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பல உருவாயின.
» மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்
» அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
நவம்பர் 1, 1956 அன்று சென்னை மாகாணத்துடன் இருந்த திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த இன்றைய குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.
இதற்காக மாபெரும் போராட்டத்தினை மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தியாகிகள் மேற்கொண்டனர். அதுபோலவே தமிழகத்தின் வடக்கு எல்லையைக் காப்பாற்ற 'சிலம்புச்செல்வர்' ம.பொ.சி. உள்ளிட்டோர் பெரும் போராட்டங்களை நடத்தினர்.
மறைந்த தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு, 2006 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் பொன்விழாவினையொட்டி தமிழகத்தின் வடக்கு எல்லைக்காகவும் தெற்கு எல்லைக்காகவும் போராடிய தியாகிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் பாராட்டி விருது வழங்கிய நிகழ்வினை, அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக அந்த விழாவில் பங்கேற்ற என்னால் மறக்கவே முடியாது.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகம் பெற்றவற்றை விட, இழந்தவை அதிகம். தமிழ் பேசும் மக்கள் வாழும் பல பகுதிகள் அண்டை மாநிலங்களின் எல்லைகளுக்குள் சென்றுவிட்டன. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம் போன்றவற்றிலும் கடுமையான - நெடுங்காலச் சிக்கல்களை உருவாக்கிவிட்டது.
இழந்தவை போக, இருப்பதைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொருளாதார வலிமை மிக்க மாநிலமாகவும் கல்வி - சுகாதாரம் - தொழில் வளர்ச்சி - வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகவும் உருவாக்கியதில் திமுக அரசின் பங்கு மகத்தானது என்பதை அனைத்துத் தரப்பினரும் மனமுவந்து ஏற்றுக் கொள்வர்.
அதுமட்டுமின்றி, பிற மொழி பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள், அவரவர் மொழிவழி மாநிலங்களுடன் இணைக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரினைச் சூட்டிப் பெருமைப்படுத்தியவர் திமுக அரசின் முதல்வராக இருந்த அண்ணா.
அண்ணாவும், கருணாநிதியும், தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கட்டிக்காத்த மொழி - இன உணர்வும், மாநில உரிமைகளும் பழுதுபடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய நம் அனைவருக்கும் இருக்கிறது. மாநில உரிமைகள் கடுமையான சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1 ஆம் நாளில், நாம் தமிழ்மொழி - இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்திட உறுதியேற்போம். மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago