நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம், எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 31) வெளியிட்ட அறிக்கை:
"நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி, எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய நடுத்தரப் பிரிவு மக்களுக்கு, உயிர் காக்கும் சிகிச்சைகளுக்காகக் கட்டப்படும் மருத்துவமனைகளும், அதிமுக ஆட்சியில் எப்படி உரிய தரமின்றி, மிகுந்த கவனக்குறைவுடன் கட்டப்படுகிறது என்பதற்கு நாமக்கல் நிகழ்வு ஓர் உதாரணமாகியிருக்கிறது.
» வட்டிக்கு வட்டிச் சலுகை திட்டம் ரத்து; விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்: முத்தரசன் விமர்சனம்
» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மதிப்புள்ள பணி அல்ல; 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடப்பட்டுள்ள டெண்டர். வருகின்ற செய்திகளின் படி, 60 சதவீத பணிகள் நிறைவேறியிருக்கின்ற நிலையில், இப்படியொரு விபத்து அங்கே நடந்திருக்கிறது. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இருப்பதாகச் செய்திகள் வரவில்லை.
ஆனால், கட்டிக் கொண்டிருக்கும் போதே கூரை சரிந்து விழுவது, அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது. ஏனென்றால், கட்டுமானப் பணிகளின் லட்சணம் எப்படியிருக்கும், இந்த மருத்துவமனைக் கட்டிடங்கள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்ன மாதிரி நிலையினை அடைந்திருக்கும் என்பதெல்லாம் கவலை அளிக்கக்கூடிய அம்சங்களாகும்.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வாங்கி விட்டோம் என்று வாய் நீளமாகப் பெருமையடித்துக் கொள்ளும் அதிமுக அரசு, இதுமாதிரி தரக்குறைவாக நடக்கும் பணிகளுக்கு டெண்டர் விடுவது, கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷனில் ஈடுபடுவதற்காகவே என்பதை, சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்தச் சம்பவமும் நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு டெண்டரும் கமிஷன் அடிப்படையிலேயே விடப்படுகிறது; அமைச்சர்கள் கொள்ளையடிப்பதற்கு என்றே உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
ஊழலிலும், கஜானா கொள்ளையிலும் திளைக்கும் அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி ஆகியோர், அரசு கட்டிடங்களின், குறிப்பாக, மருத்துவமனைக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்யவோ, அங்கு சிகிச்சை பெறப் போகும் உள் நோயாளிகள், புற நோயாளிகள், ஏன், கல்வி கற்கப் போகும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் உயிர்ப்பாதுகாப்பு குறித்தோ கவலைப்படவில்லை.
டெண்டர் விடுவோம்; கமிஷனை அடிப்போம்; வேலை நடக்கிறதா அல்லது முடிகிறதா ஆகியவை பற்றியெல்லாம் நமக்குக் கவலையில்லை என்பது, இப்போது ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பழனிசாமியின் ஒரே 'தேர்தல் கால நிதி திரட்டும்' தேட்டைத் திட்டமாக இருக்கிறது.
அதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி போன்றோரின் கமிஷன் அடிக்கும் கொடூரம் கண்மூடித்தனமாக இருக்கிறது. ஒவ்வொரு அமைச்சரும் விடுத்துள்ள டெண்டரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நாளுக்கான கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆகவே, புதிய மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் போன்றவை கட்டுவதற்கு விடப்பட்ட டெண்டர் பணிகளில் நடக்கும் முறைகேடுகள் மட்டுமல்ல, கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு, வேலை செய்யாமலேயே கொடுத்த கமிஷன்கள், டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்திலும் முழு விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்.
அந்த நடவடிக்கையிலிருந்து எந்த அதிமுக அமைச்சரும், தேர்தல் நிதி திரட்ட இது போன்ற டெண்டர்களை விட்டு கமிஷன் அடிக்கத் துணை போகும் அதிகாரிகள் யாரும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago