மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இது தொடர்பாக ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அந்தக் குழு பரிந்துரை அளித்திருந்தது.
» நானும் அரசுப்பள்ளி மாணவன் தான்:7.5% உள் ஒதுக்கீடு அரசாணை குறித்து நெகிழ்ந்த முதல்வர் பழனிசாமி
இந்தப் பரிந்துரையை ஆய்வு செய்த தமிழக அமைச்சரவை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்தது. கடந்த செப்டம்பரில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, ஆளுநர் ஒப்புதலுக்காக கடந்த செப்.18-ம் தேதி அனுப்பப்பட்டது. கடந்த 5-ம் தேதி ஆளுநரைச் சந்தித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்பிறகும் ஆளுநரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின்போது, "உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும்" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி டி.ஜெயக்குமார் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்து மீண்டும் மசோதா தொடர்பாக வலியுறுத்தினர். அதேபோல, மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் எனக் கோரி ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அவருக்குப் பதில் அளித்த ஆளுநர், "அரசின் மசோதா எனது பரிசீலனையில் உள்ளது. அதுபற்றி முடிவெடுக்க 3 அல்லது 4 வாரம் அவகாசம் தேவைப்படுகிறது. என்னைச் சந்தித்த அமைச்சர்களிடம் இதைத் தெரிவித்து விட்டேன்" எனக் கூறியிருந்தார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தரவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும், மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக சார்பில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இதனிடையே, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று (அக். 29) பிறப்பித்தது.
அந்த மசோதாவில், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில், அனைத்துப் பிரிவிலும் இந்த 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இந்த 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (அக். 30) ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, இந்த மசோதா குறித்து கருத்து கேட்க, கடந்த செப்டம்பர் 26-ம் தேதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்று (அக். 29) பதில் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க உள்ளதாக துஷார் மேத்தா தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, துஷார் மேத்தாவின் கருத்து ஆளுநருக்குக் கிடைத்த நிலையில், இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago