முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் காட்டிய அலட்சியத்தால், ஒரு நாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 29) வெளியிட்ட அறிக்கை:
"வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், முதல்வர் பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் காட்டிய அலட்சியத்தால், இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கியச் சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு 'டிசம்பர் 2015' வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால்வாய்களை முறைப்படி முன்கூட்டியே தூர்வாரி, சீரமைத்து, வேண்டிய இடங்களில் அகலப்படுத்தி, இந்தப் பருவமழையைச் சந்திக்கச் சென்னை மாநகராட்சி தயாராகியிருக்க வேண்டும். அதற்காக 750 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், அதில் வரலாறு காணாத முறைகேடுகள் தலை தூக்கியுள்ளதும் ஏற்கெனவே அறப்போர் இயக்கத்தின் சார்பில் கூறப்பட்டது.
சின்டிக்கேட் அமைத்து, சந்தை மதிப்பை விட அதிக 'ரேட்'டுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது.
ஆனால், லஞ்ச ஊழல் தடுப்புத் துறையும் இதுபற்றிக் கண்டுகொள்ளவில்லை. சென்னை மாநகராட்சியில் உள்ள 'விஜிலென்ஸ்' பிரிவும் இது பற்றி விசாரிக்க முன்வரவில்லை. விளைவு சென்னை மாநகர ஆணையரில் இருந்து, பொறியாளர்கள் வரை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் மழை நீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்குத் துணைபோவது மட்டுமே தங்களின் முக்கியப் பணி என்று செயல்பட்டு, இன்றைக்கு வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகளைக் கோட்டை விட்டுள்ளார்கள்.
சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தது. ஏற்கெனவே 2015 டிசம்பர் வெள்ளத்தில் அதிமுக அரசின் தோல்வியால் மக்கள் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. அதிலும் ஊழல் செய்து, பிறகு சிஏஜி அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டும் அதை அதிமுக அரசு மறைத்தது.
ஆனால், அடைந்த தோல்விகளில் கூட எடப்பாடி பழனிசாமி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது இப்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனாவோ, டிசம்பர் 2015 வெள்ளமோ, இந்த கனமழையோ, எதையுமே எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றும் அடிப்படை அருகதையை எடப்பாடி பழனிசாமி அரசு இழந்து நிற்கிறது.
தேங்கியுள்ள நீர், குளங்கள் போல் சாலைகளில் காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் விட்டது.
இது தவிர, சென்னை புறநகரிலும் கனமழை பெய்கிறது. இன்னும் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு பணிக்கும் கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கி, அதைச் செலவிடாமலேயே, சுருட்டுவது எப்படி என்ற ஊழல் கலையின் ஊற்றாக, அதிமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, 'ஊழல் நாயகனாக' வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கரோனாவில் தோற்ற சென்னை மாநகரம், இப்போது ஒரேயொரு நாள் கனமழைக்குத் தோற்று நிற்பதும், இது மாதிரியொரு உள்ளாட்சி நிர்வாகத்தை அளிக்கும் வேலுமணியும், அவருக்கு உற்ற துணையாக இருந்து ஊழல்களுக்குப் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் மாநகரம் எங்கும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும்.
சென்னை மாநகருக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால், இப்போது குறைந்தபட்சம், கவுன்சிலர்களாவது மக்களோடு துணைநின்று, குறைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்கான வாய்ப்பையும் கெடுத்துவிட்டு அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, அதிகாரிகளையும் ஊழலில் ஈடுபட வைக்கும் பயிற்சியை மட்டும் நன்கு அளித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், உடனடியாக மழை நீர் வடிவதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஏழை எளியோர்க்கு உணவு உள்ளிட்டவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி அரசால் முடியவில்லை என்றால், தயவுசெய்து பேரிடர் மீட்புப் படையை அழைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்து, சென்னை மாநகரைக் காப்பாற்றப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அதிமுக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் விரிவான முறையில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், திமுகவின் சென்னை மாநகர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரமப்படும் மக்களுக்கு ஆங்காங்கே தேவையான அளவு உதவிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago