டிஎஸ்பியின் டார்ச்சரால் மருத்துவர் தற்கொலை; ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையில் உண்மைகள் அம்பலம்: முதல்வர் பழனிசாமி பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா? - ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமி மூடிமறைத்த உண்மைகள் அம்பலமாகி வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் கரோனா காலத்தில் மக்களுக்குப் பணியாற்றிய மருத்துவர் சிவராம பெருமாள், காவல்துறை டிஎஸ்பியின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 27) வெளியிட்ட அறிக்கை:

"குமரி மாவட்ட திமுக மருத்துவரணி துணை அமைப்பாளர் சிவராம பெருமாள், டி.ஸ்பி ஒருவரின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டிருப்பதும், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இரட்டைக் கொலை வழக்கினை விசாரித்த சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ள தகவல்களும் பேரதிர்ச்சி அளிக்கின்றன.

சிவராம பெருமாள் கரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மருத்துவர். அவரை அம்மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பி பாஸ்கர் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டி, அவரது கண்ணெதிரிலேயே அவருடைய மனைவியைத் தரக்குறைவாக, அவதூறாகப் பேசியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்த டிஎஸ்பி போன்ற ஒரு சிலரால், தமிழகத்தின் திறமைமிக்க காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கும் நன்மதிப்பு கெடுவது மிகுந்த கவலையளிக்கிறது.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ, 'கொலையுண்ட இருவருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாத்தான்குளம் காவல் நிலையச் சுவர்களில் இருந்த ரத்த மாதிரியும், இந்த இருவரின் ஆடைகளில் இருந்த ரத்த மாதிரியும் பொருந்தியுள்ளன. ஆகவே கடுமையாகத் தாக்கப்பட்டு உயரிழந்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது. இருவர் உடல்களிலும் 18 இடங்களில் காயங்கள் இருந்தன. பென்னிக்ஸை அரை நிர்வாணமாக்கி, குனிய வைத்து பின்பகுதியில் தாக்கியுள்ளனர். தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்' என்று இதயத்தைக் கலங்கடிக்கும் தகவல்களைக் கூறியிருக்கிறது.

அவ்வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள அக்காவல்நிலைய ஏட்டு ரேவதி, 'என்னையும், அப்பாவையும் அடிக்காதீர்கள் என்று போலீஸார் காலில் விழுந்து தந்தையும், மகனும் கெஞ்சினார்கள். ஆனாலும், கடுமையாக ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கினார்கள்' என்று கூறியிருக்கும் தகவல் கண்கலங்க வைக்கிறது.

ஆனால், இந்தக் கொடூரக் கொலை நடந்த உடன் முதல்வர் பழனிசாமி என்ன சொன்னார்? 'சிறையில் இருந்த பென்னிக்ஸுக்கு மூச்சுத்திணறலும், ஜெயராஜுக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டு, இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் அங்கு உயிரிழந்தார்கள்' என்று பச்சைப் பொய்யைச் சிறிதும் கூசாமல் அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டார்.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

ஒரு மாநிலத்தின் முதல்வர், அதுவும் போலீஸ் துறையைக் கையில் வைத்திருப்பவர், இப்படி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு சில போலீஸார் செய்த கொலையைத் திட்டமிட்டு மறைத்தார்.

அதுமட்டுமின்றி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மூலமும் மறைக்க வைத்தார். 1.7.2020 அன்று சட்ட அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், 'இருவரும் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) உடல் நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்' என்று முழுப் பூசணிக்காயை, மனசாட்சியின்றி இலைச் சோற்றில் மறைத்தார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த இரட்டைக் கொலையை ஒரு முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டிபோட்டுக் கொண்டு மறைத்ததன் விளைவு, இன்று தமிழகக் காவல்துறையில் 'கருப்பு ஆடுகளின்' கையோங்கி, நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும், சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படும் போலீஸாருக்கும் மரியாதை குறைந்தது என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

திமுகவுக்குத் தொடக்கத்திலிருந்தே முதல்வர் பழனிசாமி நடத்தும் விசாரணையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் சிபிஐ விசாரணை கோரி வந்தேன். இன்றைக்கு வெளிவந்துள்ள பதற வைக்கும் தகவல்கள், 'எடப்பாடி பழனிசாமியின் விசாரணை' என்றால், கோடநாடு கொலைகள் போல் மர்மப் புதைகுழியில் மறைக்கப்பட்டிருக்கும் என்பதை வெளிச்சம் பாய்ச்சிக் காட்டி இருக்கின்றன.

இவ்வழக்கில் முதலில் மறைக்கப்பட்ட உண்மைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சட்டத்தின் பக்கம் உறுதியாக நின்று ஆற்றிய ஆற்றல் மிகுந்த பணிகளின் காரணமாக, இப்போது வெளிவந்திருக்கின்றன. சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அதிமுக அரசின் மீது திமுக வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது இப்போது ஆதாரபூர்வமாக, சிபிஐ குற்றப்பத்திரிகை வடிவமாகவே வெளிவந்து விட்டது. இப்போதாவது திமுக நியாயத்தின் பக்கம் நின்று போராடுகிறது; அரசியலுக்காக மட்டும் அல்ல என்பதை முதல்வர் பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்!

ஊழல் ஆழமாகப் புரையோடியிருக்கும் முதல்வர் பழனிசாமி ஆட்சியில், தமிழகக் காவல்துறையின் நன்மதிப்பு படுபாதாளத்திற்கும் கீழே போய் விட்டது. மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை மிகப்பெரிய அளவில் சரிந்துவிட்டது. 'கரன்சி' அடிப்படையில் போஸ்டிங், 'அமைச்சர்கள் பரிந்துரையில்' டிரான்ஸ்பர், 'துறை சார்ந்த நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு முக்கிய பதவிகள்', 'நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போலீஸ் அதிகாரிகளைக் கூட முக்கியப் பதவியில் அமர்த்துவது', 'மனித உரிமை மீறல்களைச் செய்யும் போலீஸாருக்கு மகுடம் சூட்டுவது', 'பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தாலும் பதவி' என்று முதல்வர் பழனிசாமி செய்யும் பலவித படுபாதகச் செயல்கள், தமிழகக் காவல்துறைக்கு மிகப்பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி வருகிறது.

கொலைகளை மறைத்ததற்காகவும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு சில போலீஸாரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழகக் காவல்துறையின் நன்மதிப்பையே கெடுத்ததற்காகவும், முதல்வர் பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா?".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்