அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை எந்த வயதினரும் எழுதலாம் எனும்போது அதில் தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்கள் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக முடியாது என்பதுதான் குழப்பத்தின் உச்சம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1, 66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2,31,501 பேர் என மொத்தம் 7,12,196 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.
இன்னொரு பக்கம் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.
இன்னும் சில லட்சம் பேர் ஆசிரியர் பயிற்சி, பி.எட். படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்கான கனவுடன் காத்திருக்கின்றனர். இட ஒதுக்கீட்டு வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர்.
எனவே, இந்த வயது வரம்பு நிர்ணயத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அரசிதழில் இந்த உத்தரவு இடம் பெற்ற நிலையில், அரசாணையைப் பிறப்பிக்கக் கூடாது என்று கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்துக் கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
இதனை தனி நபர் பிரச்சினையாகப் பார்க்காமல் சமூகப் பிரச்சினையாக அணுகி, அரசு நல்லதொரு தீர்வை முன்வைத்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறுகிறார்.
''பிளஸ் 2 முடித்து 30 வயதுக்குள் இருப்பவர்கள் ஆசிரியர் பயிற்சியில் சேரலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் எந்த வயதிலும் பி.எட்.படிப்பில் சேரலாம் என்று தமிழக அரசு விதிகளை வகுத்துள்ளது. இன்னொரு பக்கம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில், 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக முடியாது என்பது முரண்பாடாக இல்லையா?
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், பி.எட். கல்லூரிகளில் படித்துவிட்டு ஆண்டுக்கு சுமார் 50,000 முதல் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் வெளியே வருகின்றனர். ஆனால், இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பதில்லை. உதாரணமாக ஆண்டுக்கு 1000 பேரை ஆசிரியராக அரசு பணி நியமனம் செய்கிறது என எடுத்துக்கொண்டால் அதைவிட 100 மடங்கு அதிகமானோர் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அப்படியென்றால் தேவைக்கு அதிகமாகவே நாம் ஆசிரியர்களை உருவாக்கிவிட்டோம். அவர்களுக்கான வாய்ப்புக்கு என்ன செய்யப்போகிறோம்?
45 வயதுள்ள ஆசிரியர் நன்றாகப் பாடம் சொல்லிக்கொடுக்கமாட்டார் என்று அரசு நினைப்பதே தவறு. அந்தப் பார்வையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். ராணுவம், காவல்துறை போன்றவற்றில் பணியாற்ற வயது வரம்பு நிர்ணயிப்பது அவசியம். ஆசிரியர் பணிக்கு அவசியமில்லை. வயது ஆக ஆக, அனுபவம் கூடக்கூட கற்றல்திறன், பணித்திறன் மேம்படும். மாணவர்களுக்கு இலகுவாகக் கற்பிக்க முடியும். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற ஒப்புயர்வற்ற விஞ்ஞானிகள் பல பல்கலைக்கழகங்களில் வருகை தரும் சிறப்புப் பேராசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். வயதால், அறிவால், அனுபவத்தால் உயரும்போதுதான் அத்தகு பெருமை அவர்களுக்குக் கிடைக்கிறது. மாணவர்களுக்கும் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.
நல்லாசிரியர் விருது பெற குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் அவசியம் என்பதே விருதுக்கான முதல் தகுதி எனும்போது 40 வயதைக் கடந்தவர்களால் நன்றாகக் கற்பிக்க முடியாது என்று சொல்வது சரியான வாதம் அல்ல.
ஆரம்பக் கல்வியிலிருந்து பி.எட்.படிப்பு வரை மொத்தம் 19 ஆண்டுகளைக் கல்விக்காகச் செலவிட்டவர்கள், ஆசிரியர் பயிற்சிக்காக மொத்தம் 14 ஆண்டுகள் செலவிட்டவர்கள் என தற்போது சுமார் 10 லட்சம் பேர். அவர்கள் அத்தனை பேரும் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவுடன் உள்ளனர். அடித்தட்டு மக்கள் படித்த காலங்கள் வீண், செய்த செலவுகள் வீண் என்று விரக்தியடையும் நிலைக்கு அரசு ஆளாக்கக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கக் கூடாது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேராவது வயது வரம்பு நிர்ணயத்தால் பாதிக்கப்படுவர். இதை தனிநபர் பிரச்சினையாகப் பார்க்காமல் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.
சில ஆண்டுகள் மட்டுமே பணி செய்தவருக்கு பென்ஷன் உள்ளிட்ட பலன்களை அளிக்க வேண்டுமே என்று அரசு கணக்குப் பார்க்காமல், நிதிச் சிக்கனத்தை இதில் காட்டாமல் ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமே அரசு சமூக நீதியை நிலைநாட்ட முடியும்'' என்று தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் மூர்த்தி.
ஆசிரியர்கள் அப்டேட் ஆகவில்லை என்பதை பெரிய குறையாக, காரணமாகச் சொல்லிவிட முடியாது. அதற்கேற்ப பயிற்சிகள் மூலம் எளிதில் ஆசிரியர்களைத் தயார்படுத்திவிட முடியும் என்று மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் கூறுகிறார்.
''பள்ளிக் கல்வியில் 1990-ம் ஆண்டு வரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்குக் குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நியமனத்துக்கான வயது வரம்பு நீக்கப்பட்டது. இதனால் 57 வயது நிரம்பியவர்கள்கூட ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைத்திறனை இழந்திருப்பார்கள் என்று அரசு நினைக்கக்கூடாது. வேலை இல்லாமல் இருந்தாலும் ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை இழந்திருக்கமாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளிகளில் பணி செய்து கொண்டிருப்பவர்களே. அதனால் அவர்கள் திறமை மீது சந்தேகப்பட வேண்டியதில்லை. அப்படியே கணிதம், புவியியல் உள்ளிட்ட கற்பித்தல் முறைகள் மாறியிருந்தாலும் குறுகிய காலப் பயிற்சி மூலம் ஆசிரியர்களைத் தயார்படுத்திவிட முடியும். எனவே வயது வரம்பு நிர்ணயம் என்பது தேவையற்றது. அரசு உடனே இதைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று ராஜகோபாலன் கருத்துத் தெரிவித்தார்.
அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கும்போது, அரசிதழில் குறிப்பிடும் முன்பு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் மன்றங்களிடம் கருத்துக் கேட்பது அவசியம் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன் வலியுறுத்துகிறார்.
மேலும் அவர் கூறும்போது, ''வேலைக்கு வரத் துடிக்கும் ஆசிரியர்களை, குறிப்பாகப் பெண்களை இந்த வயது வரம்பு நிர்ணயம் அசைத்துப் பார்த்துள்ளது. தமிழகத்தில் பெண் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளோம் என்றால் அதற்குக் காரணம் ஆசிரியர் பயிற்சி, பி.எட். போன்ற படிப்புகள்தான் என்பதை மறுக்கமுடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிக அளவிலான பெண்கள் ஆசிரியர் பயிற்சி, பி.எட். போன்ற படிப்புகளைப் படித்தனர். குடும்பம், குழந்தைகள் என்று ஆன பிறகும் அவர்களால் ஆசிரியர் பயிற்சி, பி.எட். படிக்க முடிந்தது. ஆனால், அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.
இப்போது எங்களின் கோரிக்கையையாவது ஏற்று வயது வரம்பு நிர்ணயத்தைத் திரும்பப் பெற வேண்டும். அப்படித் திரும்பப் பெற்றால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறை மீது நம்பகத்தன்மை ஏற்படும்'' என்றார்.
மாணவர்கள் குறைவு, உபரி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வயது வரம்பு என எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறார் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி.
''தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி நிலையில் இருக்கின்றனர் என்று கூறும் அரசு அந்த ஆசிரியர்களை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்குக் கூட பணி நிரவல் செய்ய முடியாத நிலையில் உள்ளது. காரணம், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்கின்றனர். அதன் மீதான ஈர்ப்பே பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிக அளவில் இருக்கிறது.
சமீபத்தில் தமிழத்தின் ஏதேனும் ஒரு மூலை முடுக்கிலாவது அரசுப் பள்ளியைத் திறந்ததாகக் கேள்விப்பட்டதுண்டா? ஆனால், தனியார் பள்ளிகள் நூற்றுக்கணக்கில் தொடங்கப்பட்டுள்ளன. அதனால்தான் அரசுப் பள்ளிகள் இணைப்பு, அரசுப் பள்ளிகள் மூடல், அரசுப் பள்ளிகளை நூலகமாக மாற்றுவது என அரசு திட்டமிடுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கிவிடும். இந்த இலவசக் கல்விக்காக நிதி ஒதுக்கும் அரசு, அதே நிதியை அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புக்குப் பயன்படுத்தினால் அரசுப் பள்ளிகள் மேம்படும்.
ஒரு கிலோ மீட்டருக்குள் தொடக்கப்பள்ளி, 3 கி.மீ.க்குள் நடுநிலைப்பள்ளி, 7 கி.மீ.க்குள் மேல்நிலைப்பள்ளி எனத் தமிழகம் முழுவதும் மொத்தம் 45 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் கிட்டத்தட்ட 2000 ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. தலைமை ஆசிரியர் உட்பட இரண்டே ஆசிரியர்கள் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 23 பாடங்களை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்கப்படும்போது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுவர். அப்போது வயது வரம்பு நிர்ணயத்துக்கு அவசியம் இருக்காது.
இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்'' என்கிறார் உமா மகேஸ்வரி.
அரசிதழில் இடம்பெற்றிருப்பதோடு வயது வரம்பு நிர்ணய விவகாரத்தை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதனை அரசாணையாக மாற்றக்கூடாது என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் இதற்கான உரிய விளக்கத்தைக் கூறி மாநில அளவிலான வயது வரம்பு நிர்ணயம் குறித்த குழப்பத்தைத் தீர்க்க வேண்டும். அரசு செய்யும் என நம்புவோம்!
க.நாகப்பன்,
தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago