கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியின் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ஐ.சி.எஃப். வ.முரளிதரன் இல்லத் திருமணத்தை இன்று (அக். 26) நடத்தி வைத்து, மணமக்கள் சசிதரன் - சண்முகப்பிரியா ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"நாம் இன்னும் ஜாக்கிரதையாக, பத்திரமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கரோனா முற்றிலும் சரியாகிவிட்டதா, அந்த தொற்றைத் தடுத்து விட்டார்களா, அதற்குரிய சிகிச்சையைக் கண்டுபிடித்து விட்டார்களா, அல்லது அதற்குரிய தடுப்பூசியைக் கண்டுபிடித்து மக்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்களா என்றால், அவை இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருந்து வருகிறது.
தேர்தலை நாம் சந்திக்கவிருக்கிறோம். இந்தத் தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுத்தாக வேண்டும். இன்றைக்கு நாட்டின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எப்படிப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.
மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சிக்கு அடிமையாக, கூனிக்குறுகி இன்றைக்கு ஒரு சேவகனாக அடிமைத்தனமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு ஒன்றும் நான் உதாரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நேற்று முன்தினம் மிகப்பெரிய போராட்டத்தைச் சென்னையில் நடத்தினோம். எதற்காக என்றால், ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு என்னென்ன இடர்ப்பாடுகளை எல்லாம் தந்திட வேண்டுமோ, நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவப் படிப்பை பாழ்படுத்தி வருகிறார்களோ, அவற்றை ஓரளவுக்குச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான், அரசுப் பள்ளி மாணவர்களுக்காகப் போராடினோம்.
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அரசிடம் தந்திருந்தாலும், அதையும் இந்த ஆட்சி குறைத்து 7.5 சதவீதம் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை மசோதாவாக நிறைவேற்றி ஏகமானதாகச் சட்டப்பேரவையில் திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் அதை ஆதரித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அனுப்பிவைத்து ஏறக்குறைய நாற்பது நாள்கள் ஆகிவிட்டன. ஆளுநர் இன்னும் அதற்கு ஒப்புதல் தரவில்லை. தருவார், தருவார் என்று காத்திருந்தும் அவர் அனுமதி தரவில்லை.
இங்கிருக்கும் அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்துக் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் என்பதை அமைச்சர்கள் வெளியில் சொல்லவில்லை. அதற்குப்பிறகு நானே ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன். '7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் தாருங்கள்' என்று கடிதம் அனுப்பினேன். அதற்கு ஆளுநர் அனுப்பிய பதிலில், 'நீங்கள் சொன்னதைப் புரிந்துகொண்டேன். ஆனால், அதுகுறித்து பரிசீலித்துத்தான் முடிவெடுக்க முடியும். முடிவெடுக்க 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்' என்று எழுதியிருந்தார்.
எப்படியாவது காலம் தாழ்த்தி இதை நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் இருக்கிறார். அதைக் கண்டித்து, அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் இந்த ஆட்சியைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னையில் மாபெரும் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறோம். அதைக்கூட முதல்வர் பழனிசாமி, 'திமுக இந்தப் பிரச்சினையில் அரசியல் செய்கிறது, ஸ்டாலின் அரசியல் செய்கிறார்' என்று சொல்கிறார்.
நாங்கள் எதிர்க்கட்சி. அரசியல்தான் செய்வோம். நேற்றுமுன் தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூட சொன்னேன் 'நாங்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்' என்று. தயவுசெய்து சிந்தித்துப்பாருங்கள். இன்று அதிமுகவின் கொள்கை என்ன, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, கமிஷன் கேட்பது. நம்முடைய கொள்கை என்ன? நாட்டுக்காகப் பாடுபடுவது, நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவது, உரிமைகளை மீட்கப் போராடுவது. இப்படிப்பட்ட கொடுமையில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்தான். அதை நீங்கள் நல்லவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago