வளிமண்டல சுழற்சி; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமைய செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைபெய்யும்.

ஏனைய வட தமிழக மாவட்டங்கள் , புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 27, 28 தேதிகளில், தென்தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

காவேரிப்பாக்கம்(ராணிப்பேட்டை ) 3 செ.மீ, பூண்டி (திருவள்ளூர் ), சத்தியபாமா பல்கலைக்கழகம் Arg (செங்கல்பட்டு ) தலா 2 செ.மீ, டிஜிபி ஆபீஸ் (சென்னை ), பொன்னேரி ( திருவள்ளூர் ) 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : எதுவும் இல்லை”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE