நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைத்த 10 சதவீதத்தை எந்த அடிப்படையில் 7.5 சதவீதமாக எடப்பாடி அரசு குறைத்தது? இதுதான் ஏழை எளிய மாணவர்களுக்குச் செய்யும் நீதியின் லட்சணமா? போராட்டம் நடத்தும் என் மீது பாயும் முதல்வர் பழனிசாமி, துணிவிருந்தால் ஆளுநரிடம் உரிமைக்குரலை எழுப்பட்டும் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு விவகாரம், திமுக நடத்திய போராட்டம், அதிமுக அமைச்சர்கள் விமர்சனம், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்த பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது கடிதம் விவரம் வருமாறு:
“ஆளுநர் மாளிகை முன்பு திமுக, 24 மணி நேர இடைவெளியில் அழைப்பு விடுத்து நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம், நாட்டின் வருங்காலத் தலைமுறையாம் மாணவர் சமுதாயத்திற்குப் புதிய நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.
ஆட்சியில் திமுக இல்லை; அதிகாரமும் நம் கையில் இல்லை. ஆனால், பொதுமக்களின் நலனுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக, என்றென்றும் உத்வேகத்துடன் பாடுபடுகிற இயக்கமாக திமுக இருப்பதால், மக்களின் பெரும் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று நாடாளுமன்றத் தேர்தலிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியினை வழங்கத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதன் அடையாளம்தான், திமுக முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் தன்னெழுச்சியாகத் திரள்கின்ற மக்களின் பேரார்வம்.
மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்ற ‘கொலைகார’ நீட் தேர்வு கூடவே கூடாது என்பதுதான் திமுகவின் நிலை. அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தோம். ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் என்ன கதியானது என்பதைக்கூட வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்து, பல மாணவமணிகளின் உயிர்ப்பறிப்புக்கு காரணமான மாபாதகச் செயலைச் செய்தது அதிமுக அரசு. ஒவ்வோர் ஆண்டும் நீட் உயிர்ப்பலிகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.
கிராமப்புற – ஏழை – ஒடுக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தின் மீது பாய்ச்சப்பட்ட கொடுவாளான நீட் தேர்வு ரத்து செய்யப்படாத நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவு என்பது முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கில் பணம் செலவழித்து- கார்ப்பரேட் பாணி கோச்சிங் சென்டர்களில் பயின்று - ஒருமுறைக்கு இருமுறை மூன்று முறை நீட் தேர்வு எழுதினால்தான் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்பதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது.
ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்யப் போராட வேண்டிய அதிமுக அரசு, தனது இயலாமையையும் பொறுப்பற்றத்தனத்தையும் மறைப்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்குவது என முடிவு செய்தது. எந்தவகையிலேனும் - எந்த அளவிலேனும் சிறு நன்மையாவது விளையட்டும் என்கிற அடிப்படையில் திமுக அதனை வரவேற்றது. ஆனால், அதையாவது அதிமுக அரசு முறையாக நிறைவேற்றியதா? இல்லை.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, ராஜ்பவன் மேசையிலேயே தூசு படிந்து கிடக்கிறது. அதனை விரைந்து நிறைவேற்றி, அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குக் கடிதம் எழுதினேன். அவர், இந்தத் தீர்மானம் குறித்து சட்டரீதியான ஆலோசனைகளைப் பெற வேண்டி இருப்பதால், 4 அல்லது 5 வாரங்கள் அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்துப் பதில் கடிதம் அனுப்பினார்.
ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால், மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலம் வீணாகிறது. அதனால்தான், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரை வலியுறுத்தியும், மாநில உரிமைகளை அடமானம் வைத்துப் பதவி சுகம் அனுபவித்து, மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வஞ்சகம் இழைக்கும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் நேற்று (அக்டோபர் 24) அன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
அரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆளுநர் என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். மக்கள் வழங்கிய அதிகாரத்தை மத்திய அரசிடமும் அதன் பிரநிதியான ஆளுநரிடமும் அடமானம் வைத்த அதிமுக அரசு, இந்த 7.5 இடஒதுக்கீடு விவகாரத்தில் பல உண்மைகளை மறைத்து, மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழக அரசு அமைத்த உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் குழு, மருத்துவக் கல்லூரிகளில் 10% இடங்களை ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையைத் தமிழக அரசு அப்படியே ஏற்றிருக்க வேண்டும். அப்படி ஏற்றிருந்திருந்தால், மொத்தமுள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களான 4,043-ல், 10 விழுக்காடு இடங்கள், அதாவது 404 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருக்கும்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு, நீதியரசரின் பரிந்துரைக்கு மாறாக, தன்னிச்சையாக, அதை 7.5 சதவீதமாகக் குறைத்தது. இதனால் 300 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும் நிலை உருவானது. எடப்பாடி பழனிசாமி அரசின் இந்தத் தன்னிச்சையான, பொறுப்பற்ற செயலால் 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை இப்போதே பறிபோய்விட்டது.
நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைகளுக்கு மாறாக, 7.5 சதவீத இடம் தருவதுதான் நியாயமானது (reasonable) என எடப்பாடி பழனிசாமி அரசு விளக்கம் தந்தது, ஜூன் 16-ம் தேதி வந்த 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியாகி இருக்கிறது.
தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பு 2015-16 கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 456 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 54 பேரும், 2016-17 கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 438 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 99 பேரும் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, 2017-18 கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 40 மட்டுமே. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. 2018-19 கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 88 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 18 பேரும் சேர்ந்துள்ளனர். இதிலிருந்தே நீட் தேர்வு எந்தளவுக்கு மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடியும்.
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கிற 7,968 மேல்நிலைப் பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் மட்டும் 3,054. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மொத்த மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 3.4 லட்சம் பேர். அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும் 0.15 சதவீதம் மட்டுமே. இந்த நிலையில், நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைத்த 10 சதவீதத்தை எந்த அடிப்படையில் 7.5 சதவீதமாக எடப்பாடி அரசு குறைத்தது? இதுதான் ஏழை எளிய மாணவர்களுக்குச் செய்யும் நீதியின் லட்சணமா?
இதுபற்றி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, மாசிலாமணி ஆகியோர் கேள்வி எழுப்பியபோது முதல்வர் பழனிசாமி மவுனம் சாதித்தாரே தவிர; பதில் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, நீதிபதி கலையரசன் குழுவின் அறிக்கையை இன்றுவரை சட்டப்பேரவையிலும் தாக்கல் செய்யவில்லை. பொதுவெளியிலும் வைக்காததன் மர்மம் என்ன? யாருடைய அச்சறுத்தலுக்குப் பயந்து நடுங்கி பம்முகிறது பழனிசாமி அரசு?
5 வாரங்களில் முடிவு எடுப்பதாக ஆளுநர் தெரிவித்திருந்தாலும், ஏறத்தாழ 5 மாதங்களாகவே முடிவெடுக்கப்படாமல் இருக்கிறது என்பதுதான் அதிமுக அரசால் மறைக்கப்பட்ட உண்மை. ஆம். ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் இந்தச் சட்ட மசோதா கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. ஜூன் 15-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் அதைக் கிடப்பில் போடவில்லை. மாறாக, எடப்பாடி அரசுக்கே திருப்பி அனுப்பிவைத்தார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்தால் போதாது; தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் சலுகை வழங்கும் வகையில் திருத்தம் செய்யுங்கள் என்று ஆணையிட்டு, அவசர சட்டத்தைத் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.
அதை வெளியேகூடச் சொல்லாமல், ஆளுநரின் உத்தரவைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி, திருத்தம் செய்து, அவர் கேட்டவாறே எடப்பாடி அரசு அனுப்பி வைத்தது. அதன்பிறகாவது ஒப்புதல் கிடைத்ததா? அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் பன்வாரிலால் இசைவு தரவில்லை.
அதன்பிறகு, செப்டம்பர் 15-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் இதற்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு சட்ட மசோதா அனுப்பப்பட்டு 5 வாரங்கள் கடந்துவிட்டன. இன்னும் 4 வார அவகாசம் வேண்டும் என ஆளுநர் சொல்கிறார். டெல்லி எஜமானர்கள் கண் அசைவுக்கு ஏற்ப ஆளுநர் இழுத்தடிக்கிறார்.
ஜூன் மாதத்தில் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் அடிப்படையில் பார்த்தால் 5 மாதங்களாக இழுத்தடிக்கப்படுகிறது. இதனை, ஏனென்று கேட்க முதுகெலும்பு உள்ள அரசு தமிழ்நாட்டில் இல்லை. அதனால்தான் திமுக கேட்கிறது.
மாநில ஆளுநரின் செயல் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. அதிகார எல்லை மீறலானது. அதிகாரத்தில் இருக்கின்ற முதல்வரும் அமைச்சர்களும் ஆளுநரிடம் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட வக்கற்ற - துப்பில்லாத - கையாலாகாத நிலையில், முதல்வர் பழனிசாமியோ எதிர்க்கட்சித் தலைவரான என் மீது பாய்கிறார். துணிவிருந்தால் ஆளுநரிடம் உரிமைக்குரலை எழுப்பட்டும்.
ஆளுநருடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை மறைக்காமல் உரைக்கட்டும். உண்மையான அக்கறையும் - உறுதியான நிலைப்பாடும் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்தட்டும். அதுவரை, திமுகவின் போராட்டம் ஓயாது.
ஊழலில் புரண்டு - பதவி சுகம் அனுபவித்து - ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான விலையாக மத்திய அரசிடம் தனது உரிமைகளைப் பறிகொடுத்திருக்கும் இந்த கூட்டத்தின் ஆட்டம் அதிக காலம் நீடிக்கப்போவதில்லை. ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும். அப்போது நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்படுவதற்குரிய உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் மருத்துவக் கனவு கனிந்து நனவாகும், நலன் பெருக்கும்”.
இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago