ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (அக். 21) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழையும் நிரந்தரமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு ஆகும்.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச் சரியான முடிவு ஆகும். ஏற்கெனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களின் தகுதிக் காலத்தை வாழ்நாள் முழுவதற்கும் செல்லும் வகையில் நீட்டிப்பது குறித்து விரைவில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஒரு நடைமுறைதான்.
அடுத்த ஒரு சில நாட்களில் அது தொடர்பாகவும் சாதகமான அறிவிப்பை தேசிய ஆசிரியர் கல்விக் குழு வெளியிடும் என்று நம்புகிறேன். இக்கோரிக்கையை பாமக தான் முதலில் எழுப்பியது என்பதில் மகிழ்ச்சி. இதற்காக ஆசிரியர் கல்விக் குழுவுக்கு நன்றிகள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்படும் சான்றிதழின் தகுதிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்குள் நிச்சயமாக வேலை கிடைத்துவிடும் என்று நம்பப்பட்டது.
அதைப் போலவே, முதலில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் போதிய எண்ணிக்கையில் காலியிடங்கள் இல்லாத நிலையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வேலை கிடைக்கவில்லை; அவர்களின் தகுதிச் சான்றிதழ் காலம் நடப்பாண்டில் முடிவடையவிருக்கும் நிலையில், ஆசிரியர் கல்விக் குழு எடுத்துள்ள இந்த முடிவு ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்பது உண்மை.
தமிழ்நாட்டில் மட்டும் 80 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணிக்காக காத்துள்ளனர். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் காலத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழு முடிவெடுத்து அறிவித்தால், அது அவர்களுக்கு செய்யப்படும் பெரும் நன்மையாக இருக்கும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான தேசிய, மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (NET/SLET) வென்றோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் அவர்களின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.
பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே, ஏற்கெனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை வாழ்நாள் முழுவதற்கு நீட்டிப்பதில் தவறு இல்லை. அதற்கான அறிவிப்பு விரைந்து வெளியிடப்பட வேண்டும்.
அதே நேரத்தில், ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் காலம் நீட்டிக்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் அனைவரும் பயனடையும் வகையில் ஆசிரியர் நியமனங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதுதான் சரியானதாக இருக்கும்.
ஆசிரியர் - மாணவர் விகிதம் மாநில அளவில் கணக்கிடப்படுவதால் தான் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் மாணவர் விகிதத்தை பள்ளி அளவில் கணக்கிடுவதுதான் சரியானதாக இருக்கும்.
எனவே, பள்ளி அளவில் ஆசிரியர் - மாணவர் விகிதத்தைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago