தென்காசியில் 2-வது மியாவாகி அடர்வனம் உருவாக்கும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

By த.அசோக் குமார்

தென்காசியில் இரண்டாவது மியாவாகி அடர்வனத்தை உருவாக்கும் பணியை மரக்கன்று நட்டு ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தென்காசி ஆசாத் நகரில் சிற்றாற்றுப் பாலங்களுக்கு இடையே உள்ள காலியிடத்தில் நெடுஞ்சாலைத் துறை அனுமதி பெற்று, மரக்கன்றுகள் நட்டு மியாவாகி அடர் வனத்தை 'ப்ராணா' மரம் வளர் அமைப்பினர் உருவாக்கியுள்ளனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாவாகி என்பவர் அறிமுகப்படுத்திய அடர் முறையில் மரக்கன்றுகள் நடவு செய்ததில், இங்கு நடப்பட்ட மரக்கன்றுகள் 2 ஆண்டுகளில் சிறு வனமாக உருவாகி உள்ளன.

இதற்கிடையே தென்காசியில் இருந்து ஆயிரப்பேரி செல்லும் சாலையில் நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்துக்கு அருகில் சிற்றாற்றுக் கரையையொட்டிய, பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சுமார் முக்கால் ஏக்கர் நிலம் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டன. மேலும், அங்கே கட்டிடக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. பொதுப்பணித் துறையின் அனுமதி பெற்று இந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, தென்காசியில் இரண்டாவது மியாவாகி அடர் வனத்தை உருவாக்க ப்ராணா மரம் வளர் அமைப்பினர் ஏற்பாடு செய்தனர். இதற்காகக் கடந்த ஒரு மாதமாகப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, வேலி அமைத்து, மரக்கன்றுகள் நடும் பணி இன்று (அக்,21) தொடங்கியது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், மரக்கன்று நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில், முதல்கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜ், உதவிப் பொறியாளர் சண்முகவேல், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ப்ராணா அமைப்பினர் கூறும்போது, ''பொதுப்பணித் துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் தென்காசியில் இரண்டாவது மியாவாகி அடர்வனம் உருவாக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இது மூன்றாவது மியாவாகி அடர்வனம். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த இடத்தில் 3 அடி இடைவெளிக்கு ஒரு மரக்கன்று வீதம் சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோரம் வளரக்கூடிய இலுப்பை, நீர் மருது, புன்னை மரம் போன்றவை அதிகமாக நடப்பட உள்ளன. அரிய வகை மரங்கள் மற்றும் பறவைகள், அணில்கள் போன்ற சிறு உயிரினங்களுக்கு இரை கிடைப்பதற்காகப் பழவகை மரக்கன்றுகளும் நடப்படுகின்றன. மொத்தம் 45 வகையான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. வண்டல் மண் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதி என்பதால் மரக்கன்றுகள் வேகமாக வளர வாய்ப்பு உள்ளது.

சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மியாவாகி அடர்வனம் உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. தென்காசி மாவட்டத்தில் சில உள்ளாட்சி அமைப்புகளும் மியாவாகி அடர்வனத்தை உருவாக்க ஆர்வமாக உள்ளன. பல்வேறு பகுதிகளில் அடர்வனங்களை உருவாக்கச் சமூக அமைப்புகள், தன்னார்வலர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்