திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பேரூராட்சியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலம் பத்தே மாதத்தில் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக மதிமுக தொடர்ந்த வழக்கில் உண்மை வெளிப்பட்டுள்ளது. முறைகேடாகப் பாலம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை செல்லும் சாலையில் நம்பி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவில் இடிந்து விழுந்தது.
இப்பாலம் முறையாகக் கட்டப்படவில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்றும் எழுந்த புகாரின் பேரில் அன்றைய திருநெல்வேலி புறநகர் மாவட்ட மதிமுக பொறுப்பாளர் தி.மு.ராசேந்திரன் மறுநாள் காலை பாலத்தைப் பார்வையிட்டார்.
ஏராளமான பொதுமக்கள் முறையிட்டதன் பேரில் அன்று மாலையே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, இப்பாலம் இடிந்து விழுந்ததற்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தினார்.
அதே மாதம் டிசம்பர் 05-ம் தேதி அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் வழக்கு தாக்கல் செய்து, நடுவத்தின் ஆணைக்கு இணங்க 2018-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி அன்று நேரில் ஆஜராகி, பாலம் இடிந்ததற்கான காரணங்களை விளக்கி வாக்குமூலம் அளித்தார்.
பேரூராட்சி நிர்வாகத்தின் பல அலுவலர்கள் ஆணையத்தில் ஆஜராகி, அப்போது குமரி மாவட்டத்தைத் தாக்கிய ஒக்கி புயலால், நம்பி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகத்தான் பாலம் இடிந்து விழுந்தது என்று பதிலுரை தந்தனர்.
குமரி மாவட்டத்தைத் தாக்கிய புயல், நெல்லை மாவட்டத்தின் எந்தப் பகுதியையும் தாக்கவில்லை என்றும், நம்பி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படவில்லை என்றும், தரம் குறைவாகக் கட்டப்பட்டதன் விளைவாகவே இந்தப் பாலம் உடைந்து விழுந்தது என்றும், உண்மை நிலையை அறிய நேர்மையான உயர் தொழில்நுட்ப அலுவலர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறும் மனுதாரர் (தி.மு.ராசேந்திரன்) வலியுறுத்தினார்.
அதை ஏற்றுக் கொண்ட நடுவம், இது போன்ற நிகழ்வில் முதல் முறையாக கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டிடவியல் மற்றும் வடிவமைப்பு துறைத் தலைவர் டாக்டர் ஆர்.செந்தில், அதே துறையின் மண் வளம் மற்றும் அடித்தளம் கட்டுமானம் குறித்த பிரிவின் பேராசிரியர் டாக்டர் வி.கே.ஸ்டாலின் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது.
இக்குழுவினர் கடந்த 2019-ம் ஆண்டு செப்.21 அன்று பாலம் இடிந்த பகுதியை நேரடியாகப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மறுநாளே தங்கள் ஆய்வு அறிக்கையை நடுவத்திற்கு வழங்கினார்கள்.
அந்த ஆய்வறிக்கையில், பாலத்தின் அடித்தள விவரமே தங்களிடம் இல்லை என்று பேரூராட்சி நிர்வாகம் மறைத்துவிட்டதாகவும், பாலத்தின் கட்டமைப்பு, வடிவமைப்பு விவரங்களை பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது தரவில்லை என்றும், கிடைக்கப்பெற்ற தொழில்நுட்ப ஆவணங்களின்படி பாலக் கண் அளவுகள் (Span) மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதும், பாலத்தைக் கட்டும்போது பக்கவாட்டில் ஏற்படும் உதைப்பு (Lateral thrust) கணக்கிடப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், பாலம் கட்டப்பட்ட இடமே சரியில்லை என்றும், குறுகிய காலத்தில் சரியான முறையில் நனைப்பு (curing) செய்யப்படவில்லை என்றும், அதன் காரணமாக கான்கிரீட் சரியான உறுதித் தன்மையைப் பெற வாய்ப்பு இல்லை எனவும், இதுவே பாலம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
அந்த ஆய்வு அறிக்கையின் மீது, மனுதாரர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் கருத்துகளை ஆணையம் மீண்டும் கோரியது. வல்லுநர் குழு ஆய்வு அறிக்கையின்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று 2019 நவம்பர் 22 அன்று தமது வாக்குமூலத்தில் மனுதாரர் கேட்டுக்கொண்டார். பேரூராட்சி நிர்வாகம், சொன்னதையே திரும்பச் சொன்னதே தவிர, பாலம் இடிந்து விழுந்ததற்கு வல்லுநர் குழு சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஏற்கத்தக்க பதிலைத் தெரிவிக்கத் தவறிவிட்டதாக முறைமன்ற நடுவம் முடிவு செய்து, அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்பக் குழு தந்த அறிக்கையில் தெரிவித்துள்ள குறைபாடுகளே பாலம் இடிந்ததற்கான காரணமாகும் என்பதை உறுதி செய்ததோடு, இந்தக் குறைபாடுகளுக்குக் காரணமான அலுவலர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பேரூராட்சிகளின் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.
இடிந்து விழுந்த பாலத்திற்குப் பதிலாக மாற்றுப் பாலம் கட்டுவதாக அரசுத் தரப்புச் சொன்னதே தவிர, 55 லட்ச ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம் 10 மாத காலத்தில் எப்படி இடிந்து விழுந்தது என்பதற்கு பதில் ஏதும் இல்லை. இது பாலம் முறையாகக் கட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
அரசு கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவோர் விழிப்பாக இருந்து, கவனமாகக் கடமையாற்றிடவில்லை எனில் பாதிக்கப்பட நேரிடும் என்கிற எச்சரிக்கையையும் இத்தீர்ப்பு உணர்த்துகிறது.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை விசாரித்து தீர்ப்பு அளிக்க அரசியல் அமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவம், நடுநிலை தவறாமல் நியாயத்தின் பக்கம் நின்று வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன்.
55 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து, பொதுச் சொத்துக்கு நாசம் விளைவித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட மதிமுக சார்பில் வலியுறுத்துகின்றேன்.
எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், பொதுநல நோக்கோடு வழக்குத் தொடுத்து வெற்றி பெற்ற இன்றைய தென்காசி மாவட்ட பொறுப்பாளர் தி.மு.ராசேந்திரன் மற்றும் அவருடன் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்ட கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் மதிமுக சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்''.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago