பருவமழைக் காலம்; நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் வேலுமணி உத்தரவு 

By செய்திப்பிரிவு

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளைப் புனரமைத்து பருவமழையை வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர்நிலைகள் புனரமைப்பு, கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (20.10.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

''பொழிகின்ற மழைநீரை வீணாகாமல் சேகரிக்க அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கும் திட்டத்தினை 2001-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார். மேலும், நீர்நிலைகள் மற்றும் கோயில் குளங்களைப் புனரமைத்துப் பாதுகாக்க நீடித்த நிலையான நீர் பாதுகாப்பு திட்டத்தினை 2016-ல் அறிவித்தார்கள்.

நீர் மேலாண்மையில் தனிக் கவனம் செலுத்தி மாநிலம் முழுவதும் நீராதாரங்களைப் புனரமைத்துப் பாதுகாக்க குடிமராமத்துப் பணிகள் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில், சீர்மிகு நகரம், மூலதன நிதி, பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் தனியார் நிறுவனங்களின் CSR நிதியுதவி மூலம் இதுவரையில் 133 குளங்கள் ரூ.35.66 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. 77 நீர்நிலைகளில் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இவற்றில் சீர்மிகு நகரத் திட்டங்களின் கீழ் 3 குளங்கள் ரூ.26.66 கோடி மதிப்பீட்டிலும், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்ட நிதியில், 47 குளங்கள் ரூ.109.88 கோடி மதிப்பீட்டிலும், 27 நீர்நிலைகள் மூலதன நிதி உட்பட பிற நிதி ஆதாரங்களின் கீழ் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அனைத்துத் திட்டங்களும் நிறைவடையும்போது, சென்னை மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுமார் 1 டி.எம்.சி. அளவு நீர் சேகரமாகும்.

சென்னை நீங்கலாக பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 585 குளம் மற்றும் ஏரிகளில் புனரமைக்கப்பட வேண்டிய 237 குளங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளன. 78 குளங்கள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.33.42 கோடி மதிப்பீட்டில் 62 நீர்நிலைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, 11 குளங்கள் ரூ.5.42 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 51 நீர்நிலைகளில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 22,051 சிறுபாசன ஏரிகளும், 69,768 குளங்கள் மற்றும் ஊருணிகள் உள்ளன. இவற்றில் கடந்த 2011-15 வரை ஐந்தாண்டுகளில் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 50,767 பணிகளின் மூலம் சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன.

2016-17 ஆம் ஆண்டில் ரூ.462 கோடி மதிப்பீட்டில் 6,497 சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017-18 ஆம் ஆண்டில் ரூ.579.39 கோடி மதிப்பீட்டில் 13,299 சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளன.

மழை நீரைச் சேகரிக்கவும், பொதுப்பணித்துறை ஏரிகள், கண்மாய்களுக்கு கால்வாய்கள் வாயிலாக கொண்டு சென்று நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை உயர்த்த 2016-20 ஆம் ஆண்டு வரை நான்காண்டுகளில் ரூ.719.43 கோடி மதிப்பீட்டில் 20,519 கிலோ மீட்டர் நீளக் கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 2020-21 ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தில் ரூ.146.87 கோடி மதிப்பீட்டில் டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறை பராமரிப்பிலுள்ள கால்வாய்கள் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள இதர கால்வாய்கள் என 7706.79 கி.மீ. நீளக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம், குடிமராமத்துப் பணிகளுக்காக 5,000 சிறுபாசன ஏரிகள் மற்றும் 25,000 குளங்களின் கொள்ளளவினை அதிகரிக்க ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீர்நிலைகளில் உள்ள மதகுகள், கலங்குகள், நீராடுதுறை, சிறுகுளம், கழிமுகம், புறமதகு ஆகிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 2020-21ம் நிதியாண்டில் ரூ.77.40 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படாத பஞ்சாயத்துகளின் பராமரிப்பிலுள்ள குளங்கள் மற்றும் குட்டைகளைப் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், பராமரிப்பின்றி இருந்த நீர்நிலைகளைப் புனரமைக்கவும் தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை நல்ல நிலையில் பராமரித்தும், பராமரிப்பின்றி நீர்நிலைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக அவற்றை தூர்வாரி புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பொழிகின்ற மழைநீரை வீணாக்காமல் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்பதனை வலியுறுத்தும் வகையில் கடந்த ஆண்டு அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருக்க வேண்டும் எனவும், இதனை நடைமுறைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் சிறப்புக் குழுக்களை அமைத்து பழுதடைந்த கட்டமைப்புகளைப் புனரமைக்கவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் கட்டமைப்புகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் 8.76 லட்சம் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,500 உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட சமுதாயக் கிணறுகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 41.39 லட்சம் கட்டிடங்களிலும், பேரூராட்சிப் பகுதிகளில் 21.75 லட்சம் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட நீர்நிலை புனரமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைத்ததன் விளைவாக 2019 ஆம் ஆண்டு பருவமழைக்கு பின்பு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்பொழுது வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பொழிகின்ற மழைநீரை வீணாக்காமல் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து கட்டடங்களிலும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம், பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம், நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன் இணைப்பு, அம்மா இருசக்கர வாகனத் திட்டம் போன்ற திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அனைத்துப் பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளேன்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே நாளொன்றுக்கு அதிக அளவு கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக சென்னையில் நாள்தோறும் 14,000 முதல் 15,000 வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் தொற்றுள்ள நபர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போது வரை 1,90,949 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1,75,128 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 12,285 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 19.10.2020 அன்று வரை 16,78,383 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 8,47,642. இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் 2,04,263 ஆகும்.

கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்று பாதித்த நபர்களை உடனடியாக கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அக்.19 வரை 60,026 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 31.18 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மாலை 3 மணிமுதல் 5 மணிவரை மற்றும் 6 மணிமுதல் 8 மணிவரை மண்டலத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோரும் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் மாநகராட்சியின் 36 மருத்துவமனைகளில் மாலை 5 மணிமுதல் 8 மணிவரை சிறப்பு மாலை நேர மருத்துவ முகாம்கள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் அக்.19 முதல் இதுவரை 11,513 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) ஆகியவற்றை பின்பற்றாத தனிநபர்களிடமிருந்து அபராதம், நிறுவனங்களின்மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 01.04.2020 முதல் 19.10.2020 வரை ரூ2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.

பொதுமக்கள் அதிகம் கூடும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் வணிக நிறுவனங்களை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விதிமீறல்கள் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மருத்துவ வல்லுநர் குழு தெரிவிக்கும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றி பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்