கரோனா தொற்று பாதிப்பு குறைவதால் புதுச்சேரியில் பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதால் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று 108 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டது. சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.

புதுவையில் கடந்த சில நாட்களாகக் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் 5 ஆயிரத்திற்கு மேல் செய்யப்பட்டு வந்த பரிசோதனைகள் 2 ஆயிரத்து 500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 533 பேருக்குத் தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 108 பேருக்குக் கரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 230 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

புதுச்சேரியில் கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ள சூழலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வார இறுதி நாட்களில் வெளிமாநில வாகனங்கள் நிறைய வரத் தொடங்கியுள்ளன.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 33 ஆயிரத்து 247 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 515 பேர் தொற்றுடன் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 28 ஆயிரத்து 520 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவை மாநிலத்தில் 2 ஆயிரத்து 637 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் புதுவை மாநிலத்தில் தற்போது 4 ஆயிரத்து 152 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிப்மரில் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த காந்தி திருநல்லூரைச் சேர்ந்த 58 வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் புதுவையில் இதுவரை கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 575 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE