ஆன்லைன் ரம்மி விளையாட்டை நிறுத்துங்கள்: தற்கொலை செய்தவர் உருக்கமான ஆடியோ

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்தவரின் உருக்கமான வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகியுள்ளது.

புதுச்சேரி, கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார் (38), தனியார் செல்போன் நிறுவன சிம் கார்டு மொத்த விற்பனையாளர். திருமணமாகிக் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். கரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்க ஆன்லைனில் ரம்மியை அதிகளவில் விளையாடத் தொடங்கினார்.

படிப்படியாக ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானார். தான் சேர்த்து வைத்த பணத்தைச் செலவழித்தவர், கடன் வாங்கி விளையாடி ரூ.30 லட்சத்துக்கு மேல் இழந்தார். ஏமாற்றத்தைத் தாங்காமல் நேற்று காலை புதுகுப்பம் ஏரிக்கரையில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். இறப்புக்கு முன்பாக அவர் தனது மனைவி மதுமிதாவுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோவை அனுப்பியுள்ளார். இன்று வெளியான ஆடியோவில் பல முக்கியத் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், "நான் சரியாத் தூங்காமல் கண்ணெல்லாம் மங்கலாத் தெரியுது. கணக்கு பார்த்தால் ரூ.30 லட்சத்துக்கு மேல் ஆன்லைன் ரம்மியில் விட்டுள்ளேன். தப்புதான், போதை போல விளையாடிட்டேன். சில சமயம் 50 ஆயிரம் ரூபாய் ஜெயித்தால் பல லட்சத்தை இழந்திருப்பேன். அது எனக்கு] புரியலை. விட்ட பணத்தை எடுத்துடலாம் அப்படின்னு விளையாடினேன். எப்படிதான் இதுக்கு அடிமையானேன்னு தெரியலை.

குழந்தைகளையும், உன்னையும் நேசிச்சேன். இந்த வருசத்தில் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு. என்னால வேலையே செய்ய முடியாத அளவுக்கு மூளை ரம்மியால மங்கிடுச்சு. குழந்தைகளை என்னை மாதிரி வாழ விடாதே. ஆன்லைனில் நடக்கற விஷயத்தைத் தடுக்க முயற்சி செய். அது எனக்கு மனத் திருப்தியத் தரும். எனது இறப்புக்கு இதுதான் முழுக் காரணம்.

ஆவியெல்லாம் உண்மையா இருந்தா உங்க கூடவேதான் இருப்பேன். பணத்தைப் பறிக்கற ஆன்லைன் விளையாட்டுகளைத் தடுத்தால் நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE