தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

By ரெ.ஜாய்சன்

தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கில்காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதனால் இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்றைய மக்கள் குறைதீர் கூட்டத்தில், தட்டார்மடத்தில் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வியாபாரி செல்வனின் தந்தை தனிஸ்லாஸ் மற்றும் மனைவி செல்வ ஜீவிதா உள்ளிட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், "எனது மகன் செல்வனை நிலத்தகராறு காரணமாக திருமணவேல் உள்ளிட்டோர் கொலை செய்து விட்டனர்.

அப்போது, எனது மகன் கொலை சம்பவத்துக்கு தூண்டுகோலாக இருந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், செல்வனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும், மருமகள் செல்வ ஜீவிதாவுக்கு பசுமை வீடு, அரசு வேலை வழங்கப்படும், எனது மகன்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை நிறைவேற்ற வேண்டும்.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கேட்:

ஏரல் வட்டம் அழகியமணவாளபுரம் அருகே உள்ள செம்பூர் ஊர்த்தலைவர் சித்திரைவேல் தலைமையில் கிராம மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த மனு விபரம்:

அழகியமணவாளபுரம் கிராமம் செம்பூர் பகுதியில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். நாங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லவும், வெளியூருக்கு வேலைக்குச் செல்லவும், மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும் செம்பூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தோம். தற்போது அதனை மூடிவிட்டு சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் ரோடு அமைத்து மாற்றுப் பாதை வழியாக செல்ல அறிவுறுத்துவதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால் தொடர்ந்து செம்பூர் ரயில்வே கேட் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்:

சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சிவஞானபுரம் ஊர் தலைவர் பாலையா தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: சிவஞானபுரம் பகுதியில் மருதாணி குட்டம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயத்துக்கும், அவரவர் தேவைக்கும் குளத்து நீரை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த குளத்தில் இருந்து குழாய் மூலமாகவோ, ஆழ்துளை கிணறு அமைத்தோ குளத்தின் நீரை உறிஞ்சி வெளியில் கொண்டு செல்லக் கூடாது என்று ஏற்கனவே கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதனை மீறி சிலர் குளத்து நீரை உறிஞ்சி வெளியில் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம்:

தூத்துக்குடி மத்திய மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் தலைமையில், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செல்வா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையில் ஸ்டெர்லைட் அருகே ரயில்வே மேம்பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலம் நீண்ட காலமாக கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. உடனடியாக அந்த பாலத்தை கட்டி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இதே போன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள 4 வழிச் சாலை சந்திக்கும் இடத்தில் சிக்னல் விளக்குகள் இல்லாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகிறது. ஆகையால் அங்கு சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும். தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை முதல் மாநகராட்சி குப்பை கிடங்கு வரை உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் கனரக வாகனங்கள் செல்வதற்கு மாற்று பாதை அமைக்கவும், கனரக வாகனங்கள் வருவதைத் தடுப்பதற்கு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தம்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதி தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க தலைவர் தனராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்: தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகர் பேருந்து நிறுத்தம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் பேருந்துகள் சாலையை விட்டு கீழே இறங்கி ஓரமாக நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல ஏதுவான இடத்தில் பஸ் நிறுத்தத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் ஆக்கிரமிப்பு:

ஆழ்வார்திருநகரி ஒன்றிய தமிழக மீனவ மக்கள் கட்சி செயலாளர் ரெமி வி.ராயர் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஏரல் வட்டம் தேமாங்குளம் கிராமத்தில் புனித மத்தேசியர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆகையால் ஆலய இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அளந்து, ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் விவசாய நிலங்களில் மின்கம்பங்களை நட்டுள்ளனர். ஆகையால் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்