தமிழ்நாட்டில் மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்து விட்டது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாட்டில் மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்வி கனவுக்கும், சமூகநீதிக்கும் எதிரான மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகள், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றில் தொலைதூரப் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய மருத்துவக் குழுவின் 2000-ஆவது ஆண்டின் மருத்துவப் பட்ட மேற்படிப்பு விதிகளைக் காரணம் காட்டி இந்த இரு ஒதுக்கீடுகள்ளையும் இந்திய மருத்துவக் குழு ரத்து செய்தது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய மருத்துவக் குழுவின் நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மருத்துவர் அமைப்புகள் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு; அதை இந்திய மருத்துவக் குழு தடுக்க முடியாது என்று கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் சில மருத்துவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவ்வழக்கு விசாரணையின் போது, உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆய்வு செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், அத்தகைய இட ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இது போராடிப் பெறப்பட்ட அரசு மருத்துவர்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும்.
உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் அதிகாரங்களையும், அரசு மருத்துவர்களின் உரிமைகளையும் பறிக்கும் வகையில் தான் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 19 வகையான உயர்சிறப்பு படிப்புகளில் 334 இடங்கள் உள்ளன.
2017-ஆம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழக அரசு தான் நிரப்பி வந்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து இடங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு நிரப்பி வருகிறது. அந்த இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்து விட்டது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய மருத்துவக் குழு விதிகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப் பட்டன. மருத்துவப் படிப்புகளில் எந்த ஒரு பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கு மட்டும் தான் உண்டு என்றும், அதை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய மருத்துவக் குழுவுக்கு கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வந்தால் அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்வது தான் தார்மிக நெறிகளின்படி சரியானதாக இருக்கும். ஆனால், மருத்துவக் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதைக் காரணம் காட்டி, அனைத்து அதிகாரங்களையும் மாநில அரசிடமிருந்து பறிக்க நினைப்பது சரியல்ல.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்சிறப்பு படிப்புகளுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அந்த கட்டமைப்புகளை மற்ற மாநிலங்களின் மாணவர்களுக்கு மத்திய அரசு தாரை வார்ப்பதை தொடர்ந்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு படிப்புக்கான இடங்களை மத்திய அரசு நிரப்புவதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு 20% இடங்கள் கூட கிடைப்பதில்லை. இதேநிலை நீடித்தால் இன்னும் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். இது நல்லதல்ல.
மக்களுக்கு மருத்துவம் வழங்குவது மாநில அரசுகளின் கடமை. மாநில அரசுகள் அவற்றின் கடமையை செய்ய மத்திய அரசு உதவியாக இருக்க வேண்டும். மாறாக, அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு மாநில அரசுகளை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முனையக் கூடாது. கூட்டாட்சி தத்துவத்தை அது சிதைத்து விடும்.
எனவே, உயர்சிறப்பு படிப்புகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிலுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை தமிழக அரசிடமே மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்; அவற்றில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த அதிகாரங்களையும், உரிமைகளையும் மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago