தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை 12 நாட்கள் இத்திருவிழா நடைபெறுகிறது.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் தரிசனம் செய்வற்காக கோயிலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தசரா திருவிழாவில் 26.10.2020 அன்று நடைபெறும் சூரசம்ஹாரம், 27.10.2020 அன்று திருவிழா நிறைவு நாளின் போது பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
18.10.2020 முதல் 25.10.2020 வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தினமும் 8,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதில் ஆன்லைனில் 6,000 பக்தர்கள் பதிவு செய்யலாம். இவர்களில் பாதி பேருக்கு இலவசமாகவும், எஞ்சிய பாதி பேருக்கு கட்டண அடிப்படையிலும் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், நேரடியாக வரும் 2,000 பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளன.
தங்குவதற்கு அனுமதியில்லை
கடற்கரை பகுதியில் தங்கவும், கடைகள் அமைக்கவும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் நிகழ்ச்சி நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. 26.10.2020 அன்று சூரசம்ஹாரம் கோயில் பிரகாரத்துக்குள் நடத்தப்படும். கோயிலுக்கு வெளியில் எந்தவிதமான நிகழ்ச்சியும் நடத்த அனுமதியில்லை.
1,100 குழுக்கள் வரை தசரா திருவிழா கொண்டாடுவதற்காக பதிவு செய்துள்ளனர். நேற்று முதல் பதிவு செய்த குழுக்களுக்கு கோயிலில் காப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குழுவுக்கு 2 நபர்கள் மட்டும் வந்து காப்புகளை பெற்றுச் செல்ல வேண்டும்.
பக்தர்கள் வேடம் அணிந்து கோயில் பகுதிக்கு வர அனுமதி இல்லை. பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
வெளியூர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். குலசேகரன்பட்டினத்தில் தங்குவதற்கும் அனுமதி இல்லை.
பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருப்பதுடன் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பிருத்திவிராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பக்தர்களுக்கு காப்புக் கயிறு விநியோகம்
தசரா திருவிழாவில் முதல்நாளான நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்கள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளினார். கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் அம்மன் பவனி உள்பிரகாரத்தில் நடைபெற்றது. நேற்று காலை 6 மணி முதல் பக்தர்களுக்கு காப்பு கயிறு விநியோகம் செய்யப்பட்டது. பதிவு செய்த தசரா குழுக்களை சேர்ந்த பிரதிநிதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து காப்பு கயிறுகளை வாங்கிச் சென்றனர். தங்களது ஊர்களிலேயே காப்பு கட்டி அவர்கள் வேடமணிந்தனர்.
நேற்று காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, கைகளைச் சுத்தம் செய்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago