ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கவிதா கூறினார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பாக ‘வாழ நினைத்தால் வாசல் திறக்கும்’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கு அக்.17 மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை எழும்பூர் பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கவிதா, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாந்தி, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திவரும் ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ அமைப்பின் தலைவர் ஆனந்தகுமார், மார்பகப் புற்றுநோயுடன் போராடி அதிலிருந்து வெற்றிகரமாக மீண்ட வி.ரத்னா, எஸ். கிருஷ்ணவேணி ஆகியோர் பங்கேற்றனர்.
சுய பரிசோதனை அவசியம்
நிகழ்ச்சியில் டாக்டர் கவிதா பேசியது: மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்றவற்றைஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அவற்றை முழுமையாகக் குணப்படுத்தலாம். மரபணு குறைபாடு, உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நம் உடல் உறுப்புகளில் ஏற்படும் செல்களின் அதீத பெருக்கமே புற்றுநோயை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் பெருநகரங்களில் வசிக்கும் பெண்களில் முப்பது பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியம் இருக்கிறது.
இளம் வயதிலேயே பூப்படைவது, தாமதமாக மெனோபாஸ் ஏற்படுவது, உடல் பருமன், குழந்தைப் பிறப்பின்மை, குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டாமை, குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருப்பது, மார்பகக் குறைபாட்டுக்கு ஏற்கெனவே சிகிச்சை பெற்றிருப்பது போன்றவை மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். புற்றுநோய் இந்தியப் பெண்களை 40 வயதிலேயே அதிகமாகத் தாக்குகிறது. அதனால், நாம் முப்பது வயது முதலே விழிப்புடன் இருக்க வேண்டும்.
மார்பில் கட்டி, மார்புக் காம்பு உள்வாங்குதல், மார்பகத் தோல் சுருங்குதல், மார்பிலிருந்து திரவமோ ரத்தமோ வடிவது, மார்பகம் சிவந்துபோவது அல்லது புண் ஏற்படுவது, அக்குளில் கட்டியோ வீக்கமோதோன்றுவது போன்றவற்றில் எந்தவொரு அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதம் ஒரு முறை வீட்டிலேயே மார்பக சுய பரிசோதானை செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்ததுமே இதைச் செய்யலாம். மாதவிடாய் நின்றுவிட்டவர்கள் மாதத்தில் ஏதோவொரு நாள் இதைச் செய்யலாம். சுய பரிசோதனை மூலம் மிகச் சிறிய அளவிலான கட்டியைக்கூடக் கண்டறியலாம் என்றார்.
சொல்வதில் தயக்கம் வேண்டாம்
மகப்பேறு மருத்துவர் சாந்தி பேசியதாவது: வேறு ஏதாவது பிரச்சினைகளோடு வருபவர்கள்சொல்லும் அறிகுறிகளை வைத்துக்கூட அவர்களுக்குப் புற்றுநோய் இருக்கிறதா இல்லையே என்று சொல்லிவிடுவோம். வெள்ளைப்படுதல் பிரச்சினைக்காக ஒரு பெண் வந்தபோது அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நம் உடலில் ஏற்படும் சிறு மாறுதலைக்கூட மருத்துவரிடம் சொல்ல வேண்டும். தயக்கம் தேவையில்லை. மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகிற இறப்பு விகிதம் நவீன சிகிச்சை முறைகளால் குறைந்திருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகான வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சிகிச்சை கிடைக்கிறது என்றார்.
இந்தியா டர்ன்ஸ் பிங்க் அமைப்பின் தலைவர் ஆனந்தகுமார் பேசியதாவது: உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவையும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டியது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். மார்பகப் புற்றுநோய்க்குக் காப்பீடு வழங்குவதுடன் அரசு மருத்துவமனைகள் மூலம் சிறப்பான சிகிச்சையையும் அரசு அளித்துவருகிறது என்றார்.
மனவலிமையால் வென்றோம்
புற்றுநோயிலிருந்து மீண்ட திருநெல்வேலியைச் சேர்ந்த ரத்னா கூறியது: எனக்குச் சரியான நேரத்தில் புற்றுநோய் குறித்தும் சிகிச்சை குறித்தும் எடுத்துச் சொன்ன என் தோழிக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது நான் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டதுடன் உற்சாகமாகவும் பொதுப் பணியை செய்துவருகிறேன் என்றார்.
ராணிப்பேட்டை கிருஷ்ணவேணி, “எனக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு மார்பில் வலி வந்தபோது தயக்கத்தால் யாரிடமும் சொல்லவில்லை. பின்பு வலி அதிகமானபோது எனக்குத் தெரிந்த பெண்மணியின் வழிகாட்டுதலில் காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றேன். தற்போது நலமாக இருக்கிறேன். மாதந்தோறும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்கிறேன்” என்றார்.
நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உதவி செய்தி ஆசிரியர் பிருந்தா சீனிவாசன் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’யின் முகநூல் பக்கத்திலும் யூடியூப் பக்கத்திலும் காணலாம். நிகழ்ச்சியை, https://www.youtube.com/watch?v=wYeafdmUUj8 என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago