மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 1 முதல் சென்னை கோட்டையை நோக்கி பிரச்சார பயணம் மேற்கொள்ளப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் இன்று (அக். 18) அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் கலந்து கொண்டு விவாதித்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலன்களுக்கு எதிரானது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான இச்சட்டத்தால் இந்தியாவில் வாழக்கூடிய 80 சதவீத சிறு, குறு விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறக் கூடிய அவலநிலை ஏற்படும்.
இச்சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதில் இருந்து அரசு தன்னை விலக்கிக் கொண்டு சந்தையில் போட்டிப் போட்டு தானே விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்குகிறோம் என்ற பெயரில் ஆன்லைன் கடைகளை அனுமதித்து உலக கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்திய விவசாயிகளை அடகு வைக்கிற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இச்சட்டம் மூலம் இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் இரட்டை கொள்முதல் முறையை கைவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய உணவுக் கழகம் இனி கொள்முதல் செய்ய இயலாத நிலையை உருவாக்கிவிட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடு வருகிற 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்முதலுக்கான நிதி முற்றிலும் கைவிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் விவசாய உற்பத்தி செலவு பல மடங்கு உயர்வாக உள்ளது. இந்த நிலையில் போட்டிப் போட்டு உலக சந்தையில் விற்பனை செய்ய இந்திய விவசாயிகளால் இயலாது.
அதேபோல, கார்ப்பரேட்டுகளிடம் ஒப்பந்தம் போடுவது என்பது விவசாயிகள் நலனுக்கு எதிரானது. மத்திய, மாநில அரசுகள் தான் விவசாயிகளோடும் வணிகர்களோடும் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு உரிய சந்தை பாதுகாப்பு வசதியும் கிடைக்கும். அரசு இரட்டைக் கொள்முதல் செய்கிறபோது தான் குறைந்தபட்ச ஆதார விலையில் நம்பகத் தன்மை உருவாகும்.
எனவே, மத்திய அரசு சட்டங்களில் இவ்வாறாக மேற்கண்ட திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகிற போது தான் விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும். அதைவிட்டு விட்டு விவசாயிகளுக்குப் பலனளிக்கும் சட்டம் என்கிற பெயரில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை செயல்படுத்துவது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்பதை நாங்கள் மத்திய அரசுக்குக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரதமர் பிரச்சினையின் நியாயத்தை உணர மறுப்பதும், மறு பரிசீலனை செய்வதற்கும் மறுத்து அதனை திசை திருப்ப முயற்சிக்கிறார். குறிப்பாக, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற மாட்டோம் என்பது எங்கள் அரசின் கொள்கை முடிவு என உச்ச நீதிமன்றத்திலேயே எழுத்துப்பூர்வமாக வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டு தற்போது போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையைத் தான் வேளாண் சட்டமாக கொண்டு வந்திருக்கிறேன் என்று உண்மைக்குப் புறம்பாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இதனை விவசாயிகள் ஏற்கமாட்டோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சென்னை கோட்டையை நோக்கி பிரச்சார பயணம் மேற்கொள்ளப் போகிறோம்.
ஏற்கெனவே கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு அதனை செயல்படுத்த முடியாமல் தவிக்கும் நிலையில் தற்போது மத்திய அரசு 'ஸ்வமிதா' என்கிற சொத்து விவரம் குறித்த அறிக்கைக்கான கார்டு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளை திசை திருப்புகிற ஒரு மோசடி நடவடிக்கையாகும். இதனை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்கெனவே அறிவித்த அடிப்படையில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கி விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் வெளிவந்திருக்கிறது. இதனை முறைப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தும் அதேவேளையில் கொள்முதலுக்கான சுமைதூக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
கொள்முதல் நிலையம் மட்டுமின்றி தற்காலிக இடங்களிலும் லாரி போன்ற வாகனங்களில் ஏற்றி இறக்குவதற்கான தொழிலாளர்களுடைய எண்ணிக்கையையும் உடனடியாக உயர்த்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago