அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின் போதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையை படைப்போம்: தொண்டர்களுக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் கடிதம்

By செய்திப்பிரிவு

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, அதிமுகவே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையை படைப்போம் என, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (அக். 16) தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

"அதிமுகவின் கோடிக்கணக்கான அன்பு உடன்பிறப்புகளுக்கு, அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளையும், வாஞ்சைமிகு வணக்கத்தையும் கூறி மகிழ்கிறோம்.

நாம், உயிரினும் மேலாக மதித்து, போற்றி, பாதுகாத்து வரும் அதிமுகவுக்கு 48 ஆண்டுகால மக்கள் பணி நிறைவுற்று, 49-வது ஆண்டு தொடங்குகிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் செழித்து ஓங்கி, மக்கள் தொண்டாற்ற இருக்கும் அதிமுக என்னும் இந்த மாபெரும் பேரியக்கம் அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாட இருக்கிறது. இந்த ஆண்டு நாம் ஆற்றப்போகும் பணிகள் எல்லாம் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்திட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

எம்.ஜி.ஆர். ஏன் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்? இந்த இயக்கத்தின் வழியாக தமிழ் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் யாவை? என்று இந்த நேரத்தில் நாம் வரலாற்றின் பக்கங்களை திரும்பிப் பார்க்க வேண்டும்.

பெரியார் என்னும் தகைமைசால் பெருந்தகையிடம் பயிற்சி பெற்ற அண்ணா, தமிழருக்கு இன உணர்வை ஊட்டினார்; தமிழ் மொழியின் பெருமைகளை நினைவூட்டினார்; சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டின் புதுப் பயணத்தில், இனத்தாலும், மொழியாலும் ஒன்றுபட்டு தமிழர்கள் முன்னேறிச் செல்ல புதுப் பாதை காட்டினார். நம் அரசியல் ஆசான் அண்ணாவின் வழியில் தமிழகத்தில் புது ஆட்சி மலர்ந்தது. தமிழ்நாடு என்று பெயர் வந்தது. சமதர்ம, சமத்துவ சமுதாயத்தைப் படைக்க கோடிக்கணக்கானோர் ஆர்வத்துடன் அண்ணாவின் வழி நடந்தனர்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அமைந்த அரசும், உருவான புதிய கட்சித் தலைமையும், திராவிட இயக்கத்தின் லட்சியங்களை மறந்து, தங்கள் சுயநலனுக்காக அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திக்கொண்ட தீய சக்திகளின் பிடியில் சிக்கிக் கொண்டன.

'மக்கள் வெறுக்கும் வகையில் அண்ணாவின் இயக்கம் செயல்படுவதா!' என்று வேதனையுற்ற எம்.ஜி.ஆர்., தன்னை 'இதயக்கனி' என்று தாங்கிக்கொண்ட அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் நிலைநாட்ட 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் நாள் அதிமுகவைத் தொடங்கினார். அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றார்; ஆட்சி அமைத்தார். மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி நடத்தினார். தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைத்தார்.

எம்.ஜி.ஆர். நமக்கு அளித்த மாபெரும் கொடையாக, இந்த இயக்கத்தை வழிநடத்த வந்த தேவதையாக ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் பாதையில் பொற்கால ஆட்சி நடத்தினார். ஜெயலலிதாவின் கடுமையான உழைப்பாலும், நிகரற்ற ஆற்றலாலும், வியத்தகு அறிவாலும் அதிமுக மகத்தான அரசியல் இயக்கமாகவும், மக்கள் பணிகளில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆட்சியைத் தரத்தக்க இலக்கணம் அறிந்ததாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 29 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்தி மக்களுக்குத் தொண்டாற்றி வருவதோடு, இன்னும் பலநூறு ஆண்டுகள் மக்களுக்குத் தொண்டாற்ற இருக்கும் அதிமுகவின் பணிகள் வரலாற்றுப் பொன்னேடுகளில் காலமெல்லாம் மின்னிக் கொண்டிருக்கும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் பயணிக்கும் அவர்களது தொண்டர்களான நாம், நம் இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு நம்முடைய ஒற்றுமை உணர்வாலும், திறன்மிகு உழைப்பாலும், அதிமுகவையும், ஜெயலலிதா அமைத்துத் தந்த அதிமுக அரசையும் பொறுப்புணர்வோடு கட்டிக்காத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும். கல்வியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு உயர் நிலையை அடைய வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ, சமதர்ம சமுதாயம், சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையில் இங்கே கட்டி எழுப்பப்பட வேண்டும். 'தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்ற பெருமிதம் நிலைபெற வேண்டும் என்பவையே இந்த இயக்கம் தனது இதயமாகக் கொண்ட லட்சியங்கள். அந்த லட்சியங்களை அடையவே அதிமுக அரசு ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு 2021, நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. எம்.ஜி.ஆரைப் போல, ஜெயலலிதாவைப் போல, நம் இருபெரும் தலைவர்களின் அன்பு தொண்டர்களான நாமும் தேர்தல் களத்தில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம். அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, அதிமுகவே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையை படைப்போம். 'வாருங்கள் உடன்பிறப்புகளே, நம் பணிகளை இன்றே தொடங்குவோம்' என்று அன்போடு அழைக்கிறோம்.

'எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவின்போது, அவர் தொடங்கிய அதிமுக ஆட்சியில் இருக்கும்' என்று ஜெயலலிதா 2015-ம் ஆண்டு சூளுரைத்து செய்து காட்டினார்கள். அதைப் போலவே, அதிமுகவின் பொன்விழா ஆண்டில், அதிமுக ஆட்சியே தொடரும் என்று நாமும் சபதம் ஏற்று செய்து முடிப்போமாக.

அதிமுகவை, எம்.ஜி.ஆர். தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை, அதிமுகவுக்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கி, அதிமுகவைக் கட்டிக்காத்த தியாகிகளை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

அதிமுகவின் பொன்விழா ஆண்டு நோக்கி புதுப் பயணம் தொடங்குவோம் ! அதிமுகவின் பொற்கால ஆட்சி என்றும் தொடர சூளுரைப்போம்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்